வீரமாகாளியின் சப்பறம்
எல்லாப்பக்கமும் அடியவர் நெரிசல்
பச்சை சிவப்பு மஞ்சளென மனதை ஆசுவாசுப்படுத்தியது
தெருநீளம் கட்டப்பட்ட மின்விளக்குகள்.
நட்டுவம் முழங்க நாதஸ்வரம்
கங்கை கரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டத்தை
அலாதியாய் வாசித்துக்கொண்டிருந்தது.
குடிப்பதற்கு முன்னமே குளிரவைத்து
கவர்ச்சி கொட்டி காத்துக்கொண்டிருந்தன
ஐஸ்கிறீம் வான்கள்.
சட்டியில் வறுத்தபடியே
கச்சான் கடலை களைகட்டியிருந்தன.
அம்மாளாச்சி என்பவர்களுக்கிடையில் ஒருவாறு
என் மினுமினுத்த தேகக்கட்டை திணித்து
இடுப்புவேட்டையை இழுத்துப்பிடித்தபடி
கற்பூரம் ஒன்றை கொழுத்தித் திரும்புகையில்தான்
மின்னல் வெட்டாய் அந்தத் தேவதையின் கண்கள்.
மீண்டும்மீண்டும் பார்க்கத்தோன்றும் அந்தப்பைங்கிளியை
மாகாளியின் சந்நிதியில் மயக்க நான் நெருங்கின்
கட்டையில்போவார் என்னை காவாலியென்று
எட்டி நின்று ஏளனமுரைப்பாரென்றெண்ணி
சம்பந்த நாயனாராய் சாதுவானேன்.
சப்பறம் எங்கே பார்த்தேன் அன்று
பட்டுத்தாவணிக்குள் நிறைந்துவழிந்த
அந்த பவளக்கொடியைத்தான்
பக்தர்கள் கூட்டத்தினிடை எட்டி நின்று
என்னை பார்ப்பாளா என ஏங்கி
முக்காலாய் முழுசாய் கற்பனை பண்ணி மிதந்து
சப்பறம் சுத்தி வாசலுக்குவருவதற்கிடையில்
சாந்தி முகூர்த்தம்வரை சவாரி செய்தேன்.
என் சொர்ப்பன சுந்தரியின் சொந்த முகவரியை
எப்படி அறிவேன் நான்
கலட்டியா கல்வியங்காடா காரைநகரா
கஸ்தூரியார் வீதியா
கொடிகாமம் கோப்பாயில் இருந்துவந்த ரதமா!
சித்தப்பா மாமா வீட்டிற்கு
மட்டக்களப்பில் இருந்து வந்த மான்குட்டியா
சொந்த பந்தத்துக்குள்ளேயே காட்டுப்பூனையொன்று
கவர்ந்து செல்ல வளர்ந்திருக்கும் வடிவாம்பிகையா
எடி காளி எடுத்துரை இரவு என் கனவில்வந்தென
ஏக்கத்துடன் வரங்கேட்டேன்.
சப்பறம் முடிந்தது சனங்களும் கலைந்தது
ஏபோட்டியொன்றியில் என் ஏந்திழை
ஏறிப்போகும்வரை ஓரமாய் நின்று நோட்டமிட்டேன்
இது காதல்
கடிநாய்போல் கண்ட இடத்திலும் வாய்வைக்க முடியாது.
போனதிசையில் அடுத்தநாள் அதற்கடுத்த நாள்
அந்த மாதம் முழுக்க
அப்பரின் அரைப்பழசான துவிச்சக்கரவண்டியை எடுத்து
நூலகம் வகுப்பு விளையாட்டு ஆசிரியையின் அம்மம்மாவின் செத்தவீடு
ஐந்தாறு பொய்யுரைத்து தூரம் பார்த்ததுதான் மிச்சம்.
சிந்தை நிறைந்த அந்த செந்தாமரையை நினைத்து
நொந்துபோனேன்.
பரீட்சையிலும் புள்ளிகள் பலவீனம்
கணித வாத்தியாரின் பார்வையும்
எப்போதும் இல்லாதவாறு கர்ணகொடுரமாயிருந்தது.
எப்போதும் போல ஏன் புள்ளிகள் இல்லையென
அப்பரும் அம்மாவும் அறுபதெட்டு கேள்விகள்
எப்படி உரைப்பேன்
என் சிந்தையில் ஒரு சிறீதேவி நுழைந்ததை.
வந்த காலத்தில் வைகை நதியோரம்
பொன் மாலைநேரம்
அந்தப்பூங்கொடியொடு அப்பொழுதை ரசிக்கும் என் கனவு
பனித்துளியென கரைந்து காணாமல் போயிற்று.
இப்போது பாதிக்கிழவியாய் இருப்பாளென நினைக்கிறேன்
என் பஞ்சுமேகம்.
இரண்டு தசாப்தங்கள் கடந்திற்று
இடைக்கிடை இப்போதும் கனவில்
கற்பூர ஒளியில் அந்த கால்முளைத்த பூங்காற்று
கண்சிமிட்டி போகிறது.
சேதி அறிந்தால்
இந்த மந்திக்கவிஞனை மணம்முடிக்காமல்போனது
மாகாளியின் விழியில் வந்த
மாபெரும் வரமென நினைத்து மகிழ்வாளோ என்னவோ.
இப்போதும் வீரமாகாளியின் சப்பறம்
சொடக்கு மேல சொடக்கு போடுது
நாதஸ்வரத்தில் ஏறி நாலு திசையும் போகிறது
நயன்தாராவின் படம்போட்ட ஐஸ் கிறீம் வானில்
ஸ்பெசல் அருந்திக்கொண்டிருந்தது சில ஜோடிகள்
பல்சரில் வந்து படபடவென்று
ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டியும்
உருப்படியில்லா தலைவெட்டும் கொண்டு
ஒரு கூட்டம் இறங்குகிறது.
முற்கூட்டியே செல்போனில் தங்கள் சேடிகளுக்கு
இடம் குறித்து தகவல்களை எடுத்துரைத்திருப்பார்போல்
ஆலய பின்புறம் முன்புறம் வடக்குவீதி மணிக்கடைப்பக்கம் என
ஆளாளுக்கு பிரிகின்றனர்.
சப்பறம் சுற்றிவருவதற்குள் எப்படியேனும்
ஏழுட்டு ஸ்பெசல் குடித்து முடிப்பர்
அத்தனை வேகம் இப்போது எவற்றிலும்.
ஓ! மாகாளி எப்படி காலம் ஓடிற்று
சப்பறம் பார்க்க வந்த என்னை
அன்றோர் சக்கரைவள்ளியின் ஊடே
தடுத்தாட் கொண்டாய் நன்றி
இப்போது நானோர் கவிஞனானேன்.
No comments:
Post a Comment