அந்திவேளை
கிளிநொச்சி சந்திகளிளொன்றாய்
முந்திப்பிறந்த முச்சந்தி
கோவிந்தன் கடைசந்தி
இன்றுவரை குந்தி பந்திகளாய் இருந்து
அந்திகளில் புதினம் அளப்பதுதான் சகஜம்
சிந்தனை பலதும் சிறகடிக்க இங்கு
குந்தியவர் சரிதம் கூடவே உண்டு
குண்டுகளை கட்டி சண்டி கட்டுகளில் மறைத்து
நின்றபடி பெடியள் காவல் புரிந்ததுவும் இங்கே
கண்டபடி பெடியள் கண்ணலைய விட்டு
பெண்டுகளை வளைக்க பெருந்தவத்தை புரிந்த
சந்தியதும் இதுவாம்
தொந்தியது குலுங்க தூக்கத்தில் சரிந்து
போதையிலே புலம்பியதும் சந்தியதன் சரிதம்
எஞ்சியதையறிய எழுந்து நிற்கும்
சந்தியடி பழம்புளியின் சகவாசம் கொள்ளும்
அழகிய மருதநிலம் அற்புதமாம் கிளிநொச்சி
அந்தப்புரமென அமைகின்ற
கோவிந்தன் கடைசந்தி திரும்பி
சாமரமாய் காற்று சரசங்கள் பொழியும்
பன்னங்கண்டியேகும் பாதைவழி நித்தம்
இரணைமடு இங்கிதமாய் இரங்குகின்ற தண் நீர்
ஒரு புறத்தில் சலசலத்து உள்ளத்தை மயக்க
அக்கரையில் கன்னியர்கள் அந்திநீராட
மந்தியாய் மனங்கள் மயங்கித்தான் அலைகிறது
நறுமணத்தை நுரைக்கும் நதியறியா ஷாம்பூக்கள்
நாசியில் ஏறி நர்த்தனம் அரங்கேற்ற
அவ்வழி போகின்றஅடிமனச் சோகங்கள்
மெல்லென விடைபெற்று மேகத்தில் கரைகிறது
வெளியெலாம் மேய்ந்து விடாய் துரவில் தீர்த்து
பெடியளும் பெட்டையுமாய்ஆத்தையும் பிள்ளையுமாய்
பேத்தையும் கொம்பனுமாய் பெரும்பட்டியொன்று
வாலைத்து தூக்கி சாணம் வரவர கோசலம்
முந்தை நாளீன்ற முடி சிலிர்த்த பெடியன்
முலை கவ்வி கவ்வி பொடி நடையை கட்டுகிறான்
ஏரி பெருத்த இளஞ் சிவலை ஏதேதோ சிலிமிசத்தை
வாயை ஊறி ஊறி வரும்வழியில்காட்டுகிறான்
ஐயகோ வெட்கம் அவ்வழி ஏகும் அழகிகள் எல்லாம்
மெய்யினை திருப்பி மேனிகள் கோணி
அவ்வழி கடக்கும் அழகொரு இன்பம்
பொய்யிலை காணீர் போய்வாரும்நீரும்
அச்சந்தி வழியே ஆசுவாசமாகும்
No comments:
Post a Comment