காலைவிடியமுன்னம்
கடவாய் வழிந்தபடி
முகநூலை திறந்து
முந்தநாள் சுட்ட
தத்துவ வித்தகத்தை
பத்துசொல்லுக்கு
எட்டெழுத்துப்பிழைவிட்டு
ஏற்றி பகிர்ந்து
எவரென்றே அறியாத
பேக் ஐடிக்கும்
பிறந்தநாள் வாழ்த்திட்டு
காணாத ஒருவருக்கு
கலர்கலரா றோசனுப்பி
ஹாய் சொல்லி
பதிலின்றி பாயுரைத்து
ஆணென்றோ பெண்ணென்றோ
பிடிகுடுக்காதுரைக்கும்
நாயொன்றோடு அலட்டி
கவிதை எழுத
அதுகட்டுரையாக
வெட்டிக்கொத்தி
விலா எலும்பை முறித்து
செத்துப்போனதொன்றை
பகிர்ந்து சிலிர்த்து
சேக்ஸ்பியர் நினைப்பில்
கவிழ்ந்து
மாக்சியம் லெனினிசம்
பெடறலிசம் பெமினிசம்
சோசலிசம் கப்பிற்றலிசம்
எவ்விசமும் தெரியாது
புளுகலிசத்தில்
கமன்ற் அடித்து கடிவாங்கி
கவர்ச்சித் தாரகை முகத்துடன்
தனித்திருப்பதாய் காணும்
முகவரியில் மூழ்கி
பேய் பிசாசு பெருங்கரடி
நோய்வந்த கோழி
நோஞ்சான் பாட்டு
மாய்ஞ்சான் டான்ஸ்
மாற்றிக்கொடியில் தூங்கும்
துண்டு துணிகள்
ஓண்டுவிடாமல் பார்த்து
வாயூறி வழிந்து
வாவ் நைஸ் செம போட்டு
குறுக்கு கட்டுதொட்டு
படுக்கை நைற்றிவரை
பாரிலுள்ளோர் பார்க்க
பறையடித்து பகிர்ந்து
பல்லுக்கொழுக்கட்டை
பருவமானகதை
பெண்டாட்டி பெறுமாதம்
அப்பா ஆன புளுகு
ஆராரோ பாடிய அதிசயம்
வேலை கிடைச்ச பார்ட்டி
வெட்டியான உளைச்சல்
கட்டாதவளோடு உரசல்
கட்டியவனோடு மெர்சல்
காய் வெட்டியவளோடு
குடைச்சல்
செத்த பிணத்துடன்
சேர்ந்தெடுத்த செல்பி
வந்த காதல் வராத எரிச்சல்
கண்டவிபத்து காப்பாற்றாமல் செல்பி
நிண்ட உடுப்போடு நேற்றுடுத்ததோடு
திண்டவாயோடு தெருவில்போகவர
எடுத்தின்னும் பல கொட்டுமிடத்தில்
சகோ புறோ
தப்பி பிழைத்தவை ஏதுமுண்டோ
No comments:
Post a Comment