பேரம்பலத்தார்
பேரம்பலம் திறந்தார்
பேஸ் புக்
ஊர் அம்பலத்தில்
உலவட்டும் தன்பேரும்
என்றெண்ணி
பாரங்களை இறக்கி
பரஸ்பரம் பகிர்ந்து
தூரங்களை குறைத்து
துதிபாடி மகிழ்ந்து
வீரங்களை பேசி
விழுத்தலாம் கனிகளென
ஆரம்பத்தில் கணக்கிட்டு
அவர்தம் பெயரை
அரைவாசி நறுக்கி
இடையால செருக்கி
சரிபாதி பிரித்து
சமகால ஸரைலில்
ஒருவாறு அமைத்து
அடிவீட்டில் கிடந்த
ஆல்பத்தை எடுத்து
பதினைந்து ஆண்டு
பழசில் பிடித்த
படமொன்றை இழுத்து
அதில் கொஞ்சம் இருந்த
அழுக்குகள் தட்டி
கணணியில் ஏற்றி
கலர் சீர் செய்து
கறுவலை அங்கே
சிவலையாய் ஆக்கி
திருமுகம்தனதாய்
பதிவினை ஏற்றி
படிக்கையில் நான்
மொனிற்றராய் இருந்தேன்
ஆக்ஸ்போட் தொடங்கி
அண்ணாமலை வரை
மெர்ல்போன் தொட்டு
மிருசுவில் வரை
எடுக்காத பட்டங்களும்
இருக்காத பதவிகளும்
இருபது புள்ளி கட்டுரையாய்
இழுத்து நீட்டி
அறிமுகம் செய்து
தொடக்கவிட்டார் பேஸ்புக்
அடக்கி வைத்த
ஆசைகளை
எழுத்துப்பிழை நூறுவிட்;டு
ஏற்றி ஏற்றி மகிழ்ந்து
வந்துவிழும் விருப்புகளும்
வளர்ந்து செல்லும் சுப்பர்களும்
வழிந்துபோகும் நைசுகளும்
பேரம்பலத்தாரை பேர்மூடாமேல்
பறக்கவைக்க
மறந்;துபோய் மயக்கத்தில்
இங்கிலாந்து கன்னிகளை
இரசியாவின் இளசுகளை
தாயிலாந்து தளதளப்பை
தமன்னாவை அனுஸ்காவை
சன்னியோலியோனை
அங்கால பிறகு
அல்ஜீரியை அழகியை
நைஜீரிய நங்கையை
நாலுபுறத்தாலும்
நண்பர் அழைப்பனுப்பி
வெங்காயத்தோட்டத்தில்
வியர்த்து வேலைசெய்யும்
மங்களத்தை தவறவிட்டு
மாக்கெட்டில் வந்துபோகும்
மரகதத்தை விசாரிக்காமல்
பாக்கெட்டில் எப்போதும்
பார்ப்பதற்கு ஏற்றவாறு
பலபத்து ஆயிரத்தில்
கைபேசி வாங்கிவைத்து
எங்குபோனாலும்
எடுப்பதும்;பார்ப்பதும்
ஏதோ எழுதுவதும்
சிரிப்பதும் சிணுங்குவதுமாய்
ஏகப்பட்ட மாற்றம்
எங்கள் பேரம்பலத்தில்
இன்று நான் குளித்தேன்
நாயை குளிப்பாட்டினேன்
நண்டுக்கறி சாப்பிட்டேன்
பிலாப்பழம் உண்டபோது
பேரீச்சம்பழத்தை கண்டபோது
நடுத்தெருவில் நிண்டபோது
பெருவிரலில் கல்லிடித்தபோது
பென்சில் சீவுகையில்
பிளேட் வெட்டியபோது
இன்று சட்டியில் சமைத்தபோது
சாம்பாறு துலாவியபோது
சவுக்கு காற்றுக்கு ஆடியபோது
மழைக்கு குடை பிடித்தபோது
என பதிவுகள்
எருமையுடன் கழுதையுடன்
எரிகின்ற பிணத்துடன்
ஏகப்பட்ட செல்பிகள்
நிரம்பி வழிகிறது
பேரம்பலத்தார் பேஸ்புக்
மாற்றம்தான் தான் மனுசனில்
மனுசியுடன் பேசவும்
ஒரு துளி நேரமில்லை
கடுகதி வளர்ச்சியால்
கனாக்கண்டு திடுக்கிட்டு
பேக்ஐடி பத்து
பேரம்பலம் உருவாக்கி
தனக்குத்தானும்
புகழ்பாடும்
தனிவருத்தம் கண்டார்
மார்க்கண்டேயே
தத்துவ வித்தகா
தங்கச்சிகரமே
தஞ்சைப்பெருஙகோபுரமே
கவிமானே
கட்டுரை கரடியே
கைக்கூ காராம்பசுவே
இப்படி தனக்குத்தானும்
புளுகி மகிழ்ந்தும்
இடைக்கிடை
உள்பெட்டி நுழைந்து
ஒன் லைனில் உள்ள
நண்பரை இழுத்து
தாம்பாளம் வைத்து
வசைமாரி வாங்கி
உள்ளுக்குள் புளுங்கி
பட்டமரமொன்றை பதிவேற்றி
தான் பட்ட கஸ்டங்களை
சொல்லாமல் சொல்கிறார்
கடைசியாய் பேரம்பலம்
பேஸ் புக் சொல்வது
என்னவெனில்
தன்னை நார்நாராய் ஆக்கி
நடுத்தெரு சிரிக்கவைத்த
அடுத்தவன் ஒருவரின்
அந்தரங்க லீலைகளை
அவிட்டு விடுப்போவதாக
அறிக்கை விட்டுள்ளார்
தென்றலே தேனேஎன
தொடங்கிய பேஸ்புக்
இப்போது வெட்டுவன்
விறாண்டுவெனென
குத்துற வெறியில்
குறிபார்த்து நிற்கிறது
இதுவரை பேரம்பலத்தார்
ஆங்கு பெற்ற ஆனுபவத்தில்
மனுசர்க்கு நரித்தலை
எருமைத்தலை
குரங்குத்தலை பொருத்தவும்
ஆடைநீக்கி அவரவர்க்கு
கோவணம் கட்டவும்
கற்றுத்தேறுயுள்ளார் கண்டீர்!!
ஆயினும் கூட
ஆயிரம் முட்டையிட்ட
ஆமையின் அமைதியாய்
சாதித்த பேரம்பலங்கள்
ஏராளம் உண்டு
ஊருக்குள் இங்கு
No comments:
Post a Comment