Friday, October 19, 2018

பதுங்குகுழிக்கு வெளியில் உலவும் மனிதர்கள்-பொன்.காந்தன்





போரின் இறுதிவரை
பதுங்குகுழிகளுக்கு வெளியில் உலவும்
எங்கள் மனிதர்களை பார்த்திருக்கின்றேன்

முள்ளிவாய்க்கால் போரில்
பதுங்கு குழிகளுக்குள் முடங்காத
மனிதர்கள் இருக்கமுடியாது

அநேகமாய் எல்லோரும்
போரில் இறுதி நாட்களில்
தங்களுக்கு அருகில் 
ஒரு குழியை நிச்சயம் வைத்திருந்தார்கள்

அக்குழிகள் அநேகம் பேருக்கு
சவக்குழிகளாகவும் இருந்தன
பதுங்கு குழிக்குள் சென்ற பலர்
மீண்டும் எழவில்லை

பதுங்கு குழிகள்
எங்களுக்கு வீடாக மாறிப்போயிற்று
அதன் சுவர்களில்
சாமிபடங்களையும்
முடிச்சுக்களையும் வைப்பதற்கு
ஏதோ ஏற்பாடுகளை ஆக்கியிருந்தோம்


பதுங்கு குழிகளுக்குள் முடங்காத மனிதர்கள் கதை
பல திருப்பங்களுடன் கூடியது
புல்லரிப்புக்களால் ஆனது
அந்த மனிதர்கள் காக்கும் கடவுளர்களாவும்
நற்செய்திகளை காவிவரும்
ஏஞ்சல்களாகவும் கூட இருந்தார்கள்

இன்னும் சிலர்
விதியிடம் தம்மை ஒப்புக்கொடுத்தவர்கள்
மரணம் எப்பொழுதுதென எழுதப்பட்டிருக்கிறதோ
அப்பொழுதான் என்பவர்கள்
அவர்கள் ஊரடங்குச்சட்டத்திலும்
கர்த்தால் நாட்களிலும்
ஊரை நோக்கி 
போர் நெருங்கிய வேளையிலும்
வெறிச்சோடிய சாலையில்
ஊரின் வேர் பற்றி 
ஊஞ்சலாடவும் தயங்காதவர்கள்

முதன் முதலாய்
ஆனையிறவில் இருந்து எறிகணைகள்
எங்கள் ஊரை கடந்து சென்றபோது
எங்கள் ஊருக்கு பதுங்குகுழிகளை பற்றி
சத்தியமாய் தெரியாது
பதுங்கவேண்டுமென்ற எந்தவித உணர்வும்
யாருக்கும் இருந்ததில்லை


ஐந்தாறு குடும்பங்கள் சேர்ந்து 
ஓன்றாய் இருப்பதுவும்
முற்றத்தில் நிற்கும் பெரிய மரங்கள்
காக்கும் என்றும்
முதிரைக்கட்டிலில் கீழ் மறைந்திருக்கலாம்
என்றவாறு 
பதுங்குழிகளுக்கு வெளியில் உலவிய
எங்களின் கதையும் ஒருபொழுது இருந்தது

கடைசியில்
பதுங்குகுழிகளால் ஆன ஊர்களாக
எங்கள் ஊர்கள் இருந்தன
பதுங்குகுழிகளை விட்டுச்செல்வதும்
பதுங்குகுழிகளை வெட்டுவதும்
பதுங்குகுழிகளை கைப்பற்றுவதுமாய்
எங்கள் முற்றிலுமாய்
பதுங்குகுழியின் வார்தைகளால்
எங்கள் வாழ்க்கை ஆகியிருந்தது

முற்றத்தில்
பூஞ்செடிகள் வைப்பதை விட்டுவிட்டு
முற்றத்தில் பதுங்குகுழி வெட்டினோம்
பதுங்குகுழிகளை மிகவும்
நேசிக்கின்ற மனிதராய் இருந்தோம்
பெருமழை பெய்து
பதுங்குழிகள் நீரால் நிறைந்தபோதும்
அந்த நீருக்குள் விறைத்தபடி
குழந்தைகளை கைகள் ஏந்தியபடி
இரவுப்பொழுதுகளை கடந்தோம்

காட்டாறு
மரங்களை கடந்துபோவதுபோல
வெள்ளம் எங்களை கடந்து
மரண பயத்தை காவிச்சென்று கொண்டிருந்தது
அவ் இரவுகளில்
பதுங்குகுழிகளுக்கு வெளியில் உலவும்
பல மனிதர்களின் உயிர்களை
சன்னங்களும் எறிகணைகளும்
சினைப்பர்களும் வேட்டையாடி மகிழ்ந்தன

வலைஞர் மடத்தில்
போர் உக்கிரம் கொண்டிருந்தது
எவரும் பதுங்குகுழிகளுக்கு வெளியில் இல்லை
பதுங்குகுழிகளுக்குள்ளும்
மரணங்கள் நடந்துகொண்டிருந்தன
வெளியில் உலவும்
காக்கும் கடவுளர் மோதிக்கொண்டிருந்தனர்
கடவுளரும் வீழ்ந்து கொண்டிருந்தனர்
சாம்பலில் எழும் எந்தப்பறவையும்
அங்கு காணமுடியவில்லை
நானும் ஒரு பிசுபிசுக்கும் பதுங்குகுழியில்

ஒருவன் என் பதுங்குழிமுன்
என் பெயரை அழைத்தார்
தலையை வெளியில் ஒரு ஆமையைபோல
எடுத்துப் பார்த்தேன்
விசு எனது நண்பர்
காலில் கட்டுப்போட்டிருந்தார்
எனக்கு ஒரு சிறு பார்லை நீட்டினார்
அதில் இரண்டுபிடிசோறு
இந்த வரத்தை யார் உமக்கு அருளினார்
என்ற தொனியில் பார்த்தேன்
அச்சோற்றைக்கண்டு பல நாட்கள் ஆகியிருந்தன
சிலகணம் மரணபயத்தை
அந்தச்சோறு மறைத்திருந்தது
காலில் எறிகணை துண்டு கிழித்துவிட்டதென
சிரித்தபடி புறப்பட்டான் விசு
பதுங்கு குழிக்கு வெளியில் உலவும் 
மனிதர்களின் கதை இப்படியும் உண்டு
உங்களில் பலரும்
வெளியில் உலவிய மனிதர்களாய் இருக்கலாம்


ஆகாய கடல் வெளிச்சமருக்கு முன்னைய பொழுதுகள்
பரந்தனுக்கு அப்பால் ஆனையிறவு சாலை
சருகுகளாலும் பற்றைகளாலும் நிறைந்திருந்தது
வானில் இடைக்கிடை
வை பன்னிரண்டு விமானங்களும் 
பொம்மர்களும் வட்டமிடும்
இலக்குத்தவறிய குண்டுகளால்
மரங்களும் தரிசான வயல்களும் எரியும்
ஆட்களற்ற வீடுகளும் உடையும்
ஆட்காட்டிகள்  அலறியடித்துப்பறக்கும்
புளியடியை கடந்து போராளிகளோடு
நானும் 
என் நண்பர்களும் நடந்துகொண்டிருந்தோம்
புளியடிக்கு அப்பால் வீதியின் குறுக்கே
பெரிய படங்கு கட்டப்பட்டிருந்தது
படங்கில் ஏராளம் சன்னம் பட்ட ஓட்டைகள்
அந்த படங்குதான் போராளிகளுக்கும் 
படையினருக்கும் இடையிலான சூன்யப்பிரதேசம்

உப்பளத்திற்கு பின்னால்
எங்கள் பயணம் முடிந்திற்று
புகையிரத வீதிகள் தண்டவாளங்கள் அற்று
மேடுகளாக இருந்தன
அந்த மேடுகளை கடக்க வேண்டுமாயின்
குனிந்தே போகவேண்டும்
குனியாவிட்டால் படையினரின்
சினைப்பரில் உயிர்பறிக்கப்படக்கூடிய
ஆபத்து உண்டு என போராளிகள் சொன்னார்கள்

புகையிரத மேட்டுக்கு அருகில் ஒரு காவலரண்
காவலரணுக்கு முன் ஒரு சிற்றாறு
சிற்றாறில் மீன்கள் உண்டு
அந்த சிற்றாறில் போராளிகள் மீன்கள் பிடிப்பதும் உண்டு
காவலரணால் பார்க்கும்போது புகாருக்கு அப்பால்
ஆனையிறவு முகாம் பரந்து தெரிந்தது
அங்கிருந்து படைவீரர்கள்
இங்கிருந்து எப்போது ஒரு தலைதெரியுமென
சினைப்பரோடு காத்துக்கொண்டிருந்தார்கள்
அக்காவலரணின் முன் அன்று காலைதான்
ஒரு போராளி வீரச்சாவடைந்தாக காட்டினார்கள்
அப்போராளியின் பெயர் மேஜர் மக்கன்ரோ

மக்கன்ரோ
அநேகமாக பதுங்குழிகளுக்கு வெளியில் உலவும்
மனிதர்களின் ரகத்தை சேர்ந்தவன்
அவன் காவலரண்களுக்கு வெளியே
படையினரின் கண்களில் தெரியும்படி இருக்கும்
மரங்கள் தந்திக்கம்பங்களில் ஏறி
புலிக்கொடியை கட்டுவதும்
பின் படையினர் அதை நோக்கித் தாக்குவதுமென
பல புல்லரிக்கும் கதைகள் உண்டு
பதுங்குகுழிகளுக்கு வெளியில் உலவும்
மக்கன்ரோ வகையை சேர்ந்த
எங்கள் மனிதர்கள் இறுதிவரையும் இருந்தார்கள்
பலர் இறந்தார்கள்
பலர் இன்னும் கதைகளோடு இருக்கின்றார்கள்

இப்போதும் நாம் பதுங்கு குழிகளுக்கு வெளியில்தான்
உலவிக்கொண்டிருக்கின்றோம்
மரண பயமும் இல்லை புல்லரிப்பும் இல்லை











No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...