எனக்கு ஒரு பெயர் உண்டு
என் தந்தைக்கும் தாய்க்கும்
பாட்டன் பாட்டிக்கும் பெயருண்டு
நான் பிறந்த இடத்துக்கும்
வசிக்கும் இடத்துக்கும் பெயருண்டு
என் பெயரைவிட எனக்கு
அவரவர் வைத்த
நல்லவன் கெட்டவன் துரோகி பரதேசி
இப்படியும்
நண்பர்கள் செல்லமாய் அழைக்கும்
பெயர்களும் உண்டு
உங்களில் சிலருக்கு
உங்கள் பெயரைவிட
சில பெயர்களையும் நானும் வைத்துள்ளேன்
சொல்லாது மனதுக்குள்
உங்களை காணும்போதும்
நினைக்கும்போதும்
அதை சொல்லி மகிழ்ந்தும்
திருப்தியும் அடைகின்றேன்.
சுமதியை சுமி பவானியை பவா
காந்தனை காந் முகுந்தனை முகு
செல்வகுமார்களை செல்வா வடிவுக்கரசிகளை வடிவு
அனுசுயாக்களை அனு தனுசுயாக்களை தனு
மீனு கானு தானு சீனு
கனகரத்தினத்தை கனகு தம்பையாவை தம்பு
காதலர்கள் செல்லம் பியூட்டி கியூட்டி நோட்டி
மானே தேனே எனவும் பெயர்களை
சுருக்கியும் பெருக்கியும் மாற்றியும் வைத்துள்ளோம்
கட்டையன் நெட்டையன் கறுப்பி சிவப்பி
முழியன் பம்;மாத்து மொள்ளமாரி முடிச்சவிக்கி
உறண்டல் ஆட்டம் பன்னாடை பரத்தை இன்னும்பலவும்
நாம் வைத்த பெயர்கள்
வீட்டில் சில மிருகங்களுக்கு
நாய் பூனை மாடு ஆடு என்றும்
அவற்றுக்கு
டைகர் றெக்ஸ் ராணி லச்சுமி பூஸி
இன்னும் பல பெயர்கள் உண்டு
நாம் காணும் மரங்களுக்கு
பாலை வீரை வேம்பு நாவல் தென்னை பனை
பறவைகளுக்கு புறா காகம் கிளி பருந்து
ஊர்வதுக்கு அட்டை எறும்பு நத்தை
வேறு பல்லி ஓணான் மீன்கள்
நிலவு நட்சத்திரங்கள்
காணாத ஒன்றுக்கு பேய் பசாசு பில்லி
சூனியம்
கடவுளே உனக்கும் எல்லாத்துக்கும் பெயருண்டு
எதுக்குப் பெயரில்லை
கனவுக்கு கூட பெருண்டு
லட்சமாய் தமிழர்கள் செத்து மடிந்த
தாய் நிலத்துக்கு
வேண்டும் உரிமைக்கு பெயர் வைக்கவும்
அதையே அழைக்கவும் தடுமாறி நிற்கிறோம்
பெயரற்ற ஒன்றை
பெற்றிடுவோமா!!
No comments:
Post a Comment