பண்ணைக்கடலில் காற்று வாங்கியபடி
முன்னிரவின் வாசலில் நின்று
கோட்டையை பார்க்கிறேன்
அதில் எங்கள் கொடி இல்லை
காற்றில் எங்கோ கரைந்து
பதுங்கியிருக்கும்
அந்த புரட்சியாளன் திலீபனின் பிரசங்கம்
மீன் கொத்தியின் அலகில்
என்னை கொத்திச் சென்று
தீவுகள் போகும் வழியின்
கண்டல் பற்றைகளில்
காலிடுக்குகளில் வைத்திருக்கிறது
என்னிடம் கொடிக்கான பதிலை
சரியாக சொல்லத் தெரியவில்லை
மனச்சாட்சியில் இருந்து
வஞ்சகமும் பச்சோந்தியின் வர்ணங்களும் சிந்த
இதயத்தில் கொத்திக்கொண்டிருக்கின்றது
சேறுமண்டிக்கிடக்கும்
ஆரியகுளத்தின் அடிநாற்றத்தை
கடந்து செல்லும் தாமரைகண்களின்
ஆழத்தில் புதையுண்டிருக்கும்
கொடியின் சிதிலமடைந்த வர்ணங்களை
தூண்டிலிட வைக்கும் பட்சியின் பார்வை
பண்ணைக்கடலுக்கும் கோட்டைக்குமிடையில்
அந்தரிக்கும் எனது பார்வையில்
மண்ணள்ளி சாபமிடும்
மூதாட்டியின் விரல்களில்
அன்றவன் நெற்றியில்
நீறள்ளி பூசி அனுப்பிய கனவின் வர்ணம்
No comments:
Post a Comment