Tuesday, October 23, 2018

திலீபன் சடங்கு பூசை அல்ல புரட்சி போராட்டம்-தியின் கதை,




நேற்று இணையத்தளங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது ஐநா நாடுகள் சபையின் அரங்கில் ஒரு பையன் முழங்கிக்கொண்டிருந்தான்.அவன் பெயர் சஞ்ஜயன் அவன் தியாகி திலீபனின் கோரிக்கைகளையும் அவர் எந்த வழியில் பேராடினார் என்பதையும் ஆங்கிலத்தில் அங்கு பல்வேறு நாடுகளின் பல்வேறு சமுகங்களை சேர்ந்தவர்களுக்கும் சென்று சேரும்படி உரையாற்றினான்.நான் நினைக்கிறேன் திலீபனின் நினைவையும் அதன் காலபெறுமானத்தையும் அந்த புலம்பெயர் தமிழ்ப்பையன் சரியாக இன்றைக்கு தேவையான ராசதந்திர அடிப்படையில் விளங்கி வெளிப்படுத்தியுள்ளான் என்றே எண்ணுகின்றேன்.தமிழீழ விடுதலைப் போராட்டம்போரின் நீட்சியான 2009இன் பின்னான வடிவம் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்கு தீர்க்க தரிசனத்துடன் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு இளந்தலைமுறை புலம்பெயர்தேசத்தில்  இருப்பது மகிழ்ச்சி அளிப்பது மட்டுல்ல ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தின் கடமை பாரிய அளவில் புலம்பெயர் தமிழர்களிடமும் தமிழகத்தமிழர்களிடமும் கொடுக்கப்பட்டுள்ளது என்றே உறுதியாக நம்புகின்றேன்.

தியாகி திலீபன் ஒரு புரட்சிகரபோராளி ஆயுதவழிப்போராட்டத்தில் பயணித்த கால ஒழுங்கில் தனது போராட்ட வடிவத்தை அகிம்சைக்கு கொடுத்து தன்னை முழுமையான ஒரு அகிம்சையின் வடிவமாக மாற்றி அர்ப்பணித்தவன்.மட்டுமல்ல சாகும் பயணத்தில் மிகத்தெளிவான செய்திகளை அவன் மக்களுக்கு சொல்லிச்சென்றான்.விடுதலைப்பேராட்டம் ஒரு மக்கள் போராட்ட அடையாளமாக மாறாமல் அது ஒரு அமைப்பின்போராட்டமாகவோ  அல்லது ஒரு கட்சியின் போராட்டமாகவோ அமையுமெனில் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை சாத்தியமில்லை என்பதுதான் அந்த திருவாசகம்.அத்திருவாசகத்தின் செயல்வடிவத்தை எமது தமிழ்மக்கள் நிறைவேற்றிவிட்டார்களா என்பது கேள்வியாகி நிற்கின்றது.

தியாகி திலீபன் முப்பதாம் ஆண்டில் மட்டுமல்ல முந்நூறாவது ஆண்டிலும் யாருக்கும் வரமருளப்போவதில்லை.திலீபன் சடங்குகளின் அடையாளமல்ல அவர் ஒரு புரட்சியின் அடையாளம்.அவரது நினைவு போராடும் மக்களின் அடுத்தகட்ட பயணத்தின் திட்டமிடல் மையம் சேதிமையம்.இதையே தலைவர் பிரபாகரன் செய்தார் மாவீரர் நாள் உரையென்பது அத்தகையதொன்றே.ஒவ்வாரு மாவீரர் நாட்களிலும்  பிரபாகரன் ஒரு சேதியை மக்களுக்கு சொன்னார்.அதை எதிர்தரப்பு படைகள் அரசாங்கம் சர்வதேசமும் கேட்டுக்கொண்டது.அதன் மீது ஆர்வம் இருந்தது.காரணம் புரட்சியாளர்களின் மரணநினைவில் இன்னொரு புரட்சியாளனால் உரைக்கப்படும் வாசகங்கள் வெறுமனே வாசங்களாகவும் வெறுமனே கண்ணீரும் கம்பலையுமாக சடங்காக நின்றுவிடப்போவதில்லை என்பதுதான். திலீபன் விரும்பிய பாடலும் அதுதான் ஓ மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா உன் பாதணிகளை எனக்குத்தா உன் ஆயுதங்களை எனக்குத்தா.....

தமிழர்களின் ஆன்மபலமும் உயிரைக்கொடுக்கின்ற திடசித்தமும் 2009வரை சயனைட் அருந்தியும் தன்னுடலில் வெடிமருந்தேற்றி வெடித்துச்சிதறியும் அன்னியர்களிடம் தான் சார்ந்த தன் அமைப்பு சார்ந்த இரகசியும் கசிந்துவிடக்குகூடாது என்பதற்காக சிறையில் தன் நாக்கை அறுத்து எறிந்தும் வேவுவேளையின்போது எதிரிகளின் முகாம் சூழஉள்ள பற்றைகளில் காடுகளில் விசம்தீண்டியபோதும் தங்கள் உடலில் நாகபாம்புகள் ஊர்ந்தபோதும் அப்படி எந்த சலனத்தையும் காட்டாமல் இறந்துவிறைத்தும் இந்த உலகுக்கு காட்டப்பட்டுவிட்டது.அதை இந்த உலகத்தின் வல்லாண்மை சக்திகள் மிக நன்கறியும்.தமிழர்கள் கெட்டப்போல் வைத்திருக்கவில்லை  நன்கறியும் உலக புலனாய்வுகள்.ஆகவேதான் மிகப்பெரும் ஆன்மபலத்துடன் கூடிய ஆயுதவழிப்போராட்டத்தின்பின்பு தமிழர்களின் ஆன்மபலத்தை எவ்வாறு வெளிப்படுத்தவேண்டுமென்பதில் கடந்த எட்டுவருடங்களில் ஈழத்தமிழ்ச்சமுகம் தோற்றுக்கொண்டே இருக்கின்றது.ஆயுதவழியில் மிகப்பெரும் இராணுவ சமநிலையில் விடுதலைப்புலிகள் இருந்தபோதும் அக்காலத்தில் பொங்குதமிழ் போன்ற மக்கள் எழுச்சிவடிவங்களை அந்த இயக்கம் ஊக்குவித்ததன் காரணத்தை நினைத்துப்பார்க்கலாம்.அக்காலத்தில் புரட்சியாளர்களின் நினைவு நாட்கள் எதிரிகளுக்கு நித்திரையற்ற நாட்களாகவே இருந்தன.ஏன் அத்தகைய ஒரு பண்பாடு பேணப்பட்டது.ஒரு புரச்சியாளின் நினைவுக்கு அக்காலத்தின் புரட்சியாளர்கள் ஒரு வெற்றியையே படையலாக்கினார்கள்.யாழப்பாணக்கோட்டையில் புலிகொடி பறந்ததும்.ஓயாத அலைகள் இரண்டில் கிளிநொச்சி மீதான நிலமீட்புப்போரும் அத்தகையதே.எனில் முப்பதாம் ஆண்டில்  தியாகி திலீபன் நினைவேந்தலில் நமது நிலை என்ன.

தியாகி திலீபனின் எண்ணங்களாக கேள்பாபிலவு நிலமீட்பு தொடர் சத்தியாகிரக போராட்டம்.அது சத்தியாக கிரக போர்க்களம்.அப்போர்க்களத்தில் மக்கள் வாழ்கிறார்கள்.ஏனெனில் அவர்கள் வாழ அவர்களுக்கு சொந்த நிலமில்லை.இந்த உறுதியான நிலமீட்பு வடிவம் ஐநாடுகள் சபை அரங்குவரை சென்றிருக்கின்றது.அந்நில மீட்புக்களத்திலேயே அம்மக்கள் தமது நிலம் பற்றிய தகவல்கள் அடங்கிய பதாகை முன் திலீபனின் படத்தை வைத்து வணங்கினார்கள்.இதுவே திலீபனின் பேராட்டத்தின் நீட்சி எனக்கருதலாம்.அடுத்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கான நீதி கோரி மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்படும் இருநூறு நாட்களை கடந்த கவனியீர்ப்பு சத்தியாக்கிரக போராட்டம் இந்த பேராட்டமும் ஐநாடுகள் சபை வரை ஈழத்தமிழர்களின் சேதியை கொண்டு சேர்த்திருக்கின்றது.இத்தகைய பேராட்டகளத்தில் திலீபன் உயிர்க்கிறான் என்றே சொல்லவேண்டும்.திலீபனை முன்னிறுத்தி அவரின் ஆன்பலத்தை அடிப்படையாக கொண்ட இத்தகைய பேராட்டங்கள் இறுதி இலக்கை அடையும்படி காலச்சூழல் உருவாகும்.இத்தகைய தொடர்பேராட்டங்களில் கலந்துகொண்ட சிலர் இறந்திருக்கிறார்கள்.மனவலி உடல்ரீதியான பாதிப்புக்கள் துயரம் அவர்களின் உயிர்ளை பறித்திருக்கின்றது.இவை அதிர்வலைகளை ஏற்படுத்தவல்ல பேராட்ட பயணமாகின்றன.

திலீபனின் முப்பதாவது ஆண்டு கனபெறுதியுடையது.அது இலங்கையில் மாவீரர் தினம் அனுட்டிப்பதற்கோ தியாக திலீபனின் தினம் அனுட்டிப்பதற்கோ நேரடியாக எந்த நெருக்குவாரங்கள் இல்லாது அதை அனுட்டித்ததன் அடிப்படையிலானது அல்ல.2015வரையான சூழலில்தான் மாவீரர் துயிலுமில்லங்களில் திரண்டு சென்று விளக்கேற்றுகின்ற முயற்சி தியாகி திலீபனை திரண்டு அனுட்டிக்கின்ற முயற்சி தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் அதன்பால் எழுகின்ற எதிர்வினைகள் தமிழர் பிரச்சனை தொடர்பான மேலும் வலுவான சேதிகளை சர்வதேச அரங்கில் கொண்டு சேர்த்திருக்கும்.அதை நாம் தவறவிட்டிருக்கின்றோம்.இன்று சடங்கு மனப்பான்மையின் ஊறிவந்திருக்கின்ற எங்கள் சமுதாயத்துக்கு இத்தகைய நினைவேந்தல் மன ஆறுதலை தரும் என்பது உண்மையெனினும்.இதுவரை எழுபது ஆண்டுகளாக தமிழர்கள் பேராடிவருகின்ற இலக்கிற்கு எந்த அடிப்படையில் துணையாகின்றது.திலீபனின் முப்பதாவதுவருடம் மிக முக்கியமான சர்வதேச சூழலை தமிழ் மக்களும் இலங்கை அரசாங்கமும் எதிர்கொண்டுள்ள சூழலில் திலீபனின் நினைவேந்தல் ஏன் வெகுஜன வடிவமாக மாற்றப்படவில்லை.தேர்தல் பிரசாரக்கூட்டங்களுக்கு நல்லூர் திருவிழாவுக்கும் வடக்கு மாகாண பிரச்சனைக்கும் திரண்ட கூட்டத்தோடு ஒப்பிடும்போது நல்லூரில் திலீபனுக்காக கூடிய கூட்டம் எத்தனைபேரைக்கொண்டது எ;ன்பதை நாம் கணக்கிட்டுப்பார்த்து பெறக்கூடிய சேதி என்ன.

இந்த நாட்டிலே ஒரு அரசியல் யாப்பு உருவாக்கப்படுகின்றது.அந்த அரசியல் யாப்பு தமிழர்களுக்கு எதை தரப்போகின்றது.அது இதுவரை போராடிய தமிழர்களின் இழப்புக்கும் வலிக்கும் ஈடானதா தமிழ் மக்கள் எண்ணங்கள் எதிர்பாப்புக்களை அந்த அரசியல் யாப்பு திருப்தி செய்கின்றதா என்ற கேள்விகளை மக்கள் சிந்திக்கவேண்டிய முக்கிய காலகட்டம்.தமிழர்களுக்கு தீர்வற்ற ஒரு அரசியல் யாப்பை நாம் பலமிழந்தவர்கள் எங்களிடம் ஆயுதங்கள் இல்லை என்ற மனப்பாங்கின் அடிப்படையில் ஒரு திணிப்பாக ஏற்றுக்கொண்டால் இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு மீளமுடியாத குழியில் விழந்துவிடுவோமா என மக்கள் ஆழமாய் சிந்திக்கவேண்டிய காலம் இது.ஆகவே எமக்கு பொருத்த மற்ற ஒன்றை திணிப்பை நிராகரிக்க எங்கள் கையில் உள்ள பெரிய ஆயுதம் திலீபன்.அது சடங்கின் வடிவமல்ல அது நேற்றோடு முடிந்துவிடும் திலீபன் புரட்சியின் வடிவம் அது தொடர்வது.....சிலர் தமது தேசியம் உள்ளே இருப்பதாகசொல்கிறார்கள்.உள்ளே இருக்கிற தேசியம் அந்த ஒரு தேர்தலுக்கு மட்டும் பயன்படும்.தேர்தலில் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் எதற்குப்பயன்படுகின்றார்கள்.ஆகவே தேசியம் வெளித்தெரியவேண்டியகாலம்.அதை கேள்பாபிலவு மக்களிடமும் கற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...