தியின் கதை
யாழ்ப்பாணப்பேருந்துக்காக காத் திருந்தேன்
தரிப்பு நிலையத்தில் காத்திருந்த
பெண் பயணியின் கையில் குழந்தை
பற்கள் அரும்பா
அப்பசுமையின் உதட்டில் இருந்து
என்னை நோக்கி ஒரு புன்னகை
அச்சிறிய காத்திருப்பு சிநேகத்தில்
என்ன பெயரென
வார்த்தைகளை பூனைமயிரில் செய்த வினாவுடன்
அச்சிறு மழலையை நெருங்கினேன்
திலீபன் என்றாள் தாய்
A for Apple
B for Ball
Thi for Thileeban
உங்களின் யாருக்காவது
திலீபனென பெயர் இருக்கலாம்
அது உங்கள் பெற்றோர்களின்
சாத்திர நம்பிக்கையில்
தியில் தொடங்கி இருக்கலாம்
நீங்கள் என்ன செய்கிறீர்கள்
என்னவும் செய்து கொண்டிருக்கலாம்
நீங்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டிய ஒன்று
தியிக்கு ஒரு உன்னத வரலாறு உண்டு
அது 1987 செம்ரெம்பர் 15ல்
நல்லூர் முருகனின் வீதியில் ஆரம்பிக்கின்றது
தியின் புனித உடல்
இடுகாடுகளை நோக்கி காவிச்செல்லப்படவில்லை
யாழ்ப்பாணத்தில் பாடம் செய்யப்பட்டு
அது ஈழக்கனவின் சடலமாய்
ஏமாற்றப்பட்ட அகிம்சையின் வடிவமாய்
ஈழத்தின் எல்லா எக்ஸோடசுகளின் போதும்
தியின் தோழமைகளால் சுமந்து செல்லப்பட்டது
ரிவர்ஸ் ஓவ் பாபிலோன் பாடலைப்போல
தியின் கதையிலும்
நிறைய ஏக்கத்தில் கூவும் குயில்களின் கீதங்கள்
பிரிந்து சென்று கொண்டிருந்த தியின் உயிரை
மறிக்க மன்றாடும் புலவர்களின்
கண்ணீரில் பின்னிய கவிதைகளால்
தியின் உடல் பாடம் செய்யப்பட்டது
பின்பொருநாள்
வெள்ளிகள் பூத்திருந்த
அச்சம் நிறைந்த இரவில்
கிளாலி கடலில் தியின் பயணமொன்று
மக்களோடு மக்களாக
தானுலவிய யாழ்ப்பாணத் தெருக்களை விட்டு
வன்னியின் வயல்கள் கானகங்கள்
பறவைகள் புளுதிகளால் ஆன தன்னுடைய
சுவாசத்தை தி ரசிக்க ஆரம்பித்தது
ஒரு தடவை குளிர்ந்த மரங்களின் கீழ்
அமைக்கப்பட்டிருந்த கொட்டகை
தியின் பேரால் நூலகமாக இருந்தது
தினமும் சென்று
பத்திரிகைளையும் சஞ்சிகைகளையும் படித்தேன்
அத்தருணத்தில்
பொலிவியாவுக்கும் ஸ்ரலின்கிராட்டுக்கும் கவானாவுக்கும்
தியன்பியன்பூவுக்கும் ராபன் தீவின் சிறைகளுக்கும்
நான் அழைத்துச்செல்லப்பட்டேன்
பிறகு அந்த கொட்டகை இருந்த ஊரிலும்
எறிகணைகள் குண்டுகள் வீழ்ந்தன
தியின் பேரால் இருந்த
எனது ஒரு அமைதியான வாசிப்பை இழந்தேன்
அகதி வாழ்வு மீண்டும் மீண்டும் தரப்பட்டது
அலைந்தேன்
பிறகொரு பொழுதில்
எனக்கு அக்கராயனில் மலேரியா பீடித்துவிட்டது
மருத்துவம் எனக்கு அருகிலேயே வந்துநின்றது
அந்த ஊர்தியில் தியின்பேரால் மருத்துவசேவை
தியின் கதை பெருத்துச் சென்றது
தியின் நாட்கள் சடங்கு போலாயிற்று
அதில் நம்பிக்கைகள் துளிர்த்தன
அந்த நாட்களில்
எங்கள் வீரர்கள் போர்களங்களை திறந்தனர்
அழகிய மங்கைகள் சலங்கைகள் ஒலிக்க
அரங்குகளை திறந்தனர்
இன்னும் சிலர் தங்கள் குருதியை தானம் செய்தனர்
புலவர்களும் பாடகர்களும் சேர்ந்து இசைமீட்டினர்
உடுக்குகள் முழங்கின பறைகள் ஒலித்தன
ஆனந்தம் திருக்கோணமலை முகடுவரை பரந்தது
யாழ்ப்பாணக்கோட்டையில் புலிக்கொடியை ஏற்றினர் வீரர்கள்
தியின் கதை பிறந்த நாட்கள் சுபநேரமாயிற்று
மதுரை மாநகராட்சி வார்டு இல 21 க்கு
திலீபன் தெருவென பெயரிடப்பட்டதை
ஒரு தடவை
தமிழக பயணத்தின்போது கண்டேன்
பெயர்பலகைகள் நடப்படலாம்
பிடுங்கியும் எறியப்படலாம்
தியின் உண்மைக்கதையை காவிய நெஞ்சுகள்
உலகமெல்லாம் பரந்துவிட்டன
தியின் கதை முள்ளிவாய்க்காலிலும்
முடியாத கதை
இப்போது தியின் கதையில்
எல்லாம் இழந்தவர்களின் தடுமாற்றமும்
வன்மமும் நடிப்பும் நிறைந்திருக்கிறது
தியின் கதை பிறந்த இடத்தில்
கட்சிகளுக்கு இடையில் மோதல்கள்
தியின் மூல நிலம் அவமானத்துக்கு உள்ளாகின்றது
இப்பொழுது தியின் பொருளை நான் தேடவேண்டியதாயிற்று
தியின் பொருளை தொலைத்துவிட்டேன்
அதற்கு
வேறொரு அர்த்தத்தை திணித்துக்கொண்டிருக்கின்றார்கள்
யாழ்ப்பாணப் பேரூந்து நிலையத்தில்
இறங்கியபோது
திலீபன் தன் தாயின் தோளில்
நல்ல உறக்கத்தில் இருந்தான்
அவனது முகத்தை பார்த்தேன்
அவனது பிஞ்சுவிரல்களை
தொட்டுப்பிரிகின்றேன்
தள்ளாடிச்செல்லும் இளைஞனை கடந்து செல்கிறேன்
மது வாடை கலந்த காற்று
ஒரு முறை திரும்பிப்பார்த்தேன்
பங்காளி என என்னை அழைத்தான்
பதிலுக்கு நானும் பங்காளி என்றேன்
பங்காளியின் பெயர் என்னவாம் என்றேன்
சொல்ல மறுக்கிறான்
சொல்ல மறுக்கும் பெயர்களும்
தியின் கதையில் இருக்கலாம்
No comments:
Post a Comment