அப்பொழுதை
யாருக்கும் எப்பொழுதும் மரணம் நிகழலாம்
காலமென அழைப்போம்
பச்சைப்புல்வெளி கேப்பாபிலவு திசைகளில் இருந்து
பெருங்கடல் பக்கமாய் சன்னங்கள்
மழைக்கால ஈசல்கள்போல பாய்ந்துகொண்டிருந்தன
பல வேளைகளில் அவை
என்னைக்கடந்து சென்றாலும்
சற்றுத் தொலைவிலோ
அருகிலோ எவரேனும் ஒருவரின் உடலை
துளைக்காமல் தணல் அநேகமாய் ஓய்ந்ததில்லை
எங்கள் ஒப்பாரியின்
பெரும் பொருளாய் சன்னங்கள் மாறியிருந்தது
தாலாட்டில் மாமனின்
மல்லிகைப்பூச்செண்டிருந்த இடமெங்கணும்
சன்னங்கள் நிறைந்திருந்தன
கிட்டிபுள் குழிகளை சன்னங்கள் நிரவின
கிளிதட்டின் எல்லாக்கோடுகளிலும்
கிளியாய் அவை பாய்ந்துகொண்டிருந்தன
மஞ்சள் பூசிய மங்கையர் முகங்கள்
சன்னங்களை நினைத்து வெளிறியிருந்தது
அடர்ந்த பனைகளில்
மரங்கொத்திகளின் அலகாய்
படர்ந்திருந்தன சன்னங்கள்
மந்திரித்து ஓதிய சிப்பாய்களின்
ஆட்காட்டி விரல்களில்
மனுக்குலத்தின் தர்மம் ஊசலாடிக்கொண்டிருந்தது
அவ்வாறேயான ஒரு மாலைப்பொழுதில்
கந்தக நெடில்கலந்த காற்றினிடை
வெடிப்புகளால் ஆன புகை மண்டிய
வானத்தில் கீழ்
எனது அயலில் அழுகுரல்கள்
ஓடி அந்த
சில நிமிடச்செத்தவீட்டில்
கலப்பதற்கு முன்
பிரேதம் புறப்பட்டுவிட்டது
குருதியில் தோய்ந்த வெண்துணியில்
சுற்றப்பட்ட சிறுவன் உடல்
நிலவை பார்த்தபடி தூங்கிவிட்டதுபோல
தகப்பன் தோளில் கிடக்க
மண்வெட்டியுடன் இருவர் பின்னே
என்னைக்கடந்து செல்கின்றது
அச்சிறுவனின் உயிர்குடித்த
அந்த வெற்றிச்சன்னத்தை
அந்தக்கோழை ஒருவனிடம் கொடுக்க
இன்னமும் காத்திருக்கின்றேன் வலைஞர் மடத்தில்
ஓ!சிப்பாயே நீ எங்கே!
No comments:
Post a Comment