வாசுவும் ராசுவும் வேணுவும்
யாழ்ப்பாணம் தின்னவேலி சந்தியொன்றில் நின்று
சரிமாரியாய் ஏதோ பிலிம் பற்றி
விவாதித்துக்கொண்டிருக்கின்றார்கள்
வாசு இடைக்கிடை உரத்த குரலில்
கொந்தளித்து கொந்தளித்து அடங்குகின்றார்
வேணு
இடைக்கிடை ராசுவுக்கும் வாசுவுக்கும்
அவருக்குப் பாதி இவருக்குப் பாதியாய்
தலையை மட்டும் ஆட்டுவதும்
ஏதோ சொல்லவருதும் விழுங்குவதுதாய் நிக்கிறார்
ராசு எதுக்கும் கொந்தளிப்பதாய் தெரியவில்லை
எல்லாம் கேட்டுவிட்டு
கீழ் ஸ்தாயியில் நீளமாய் கதைகதைத்து முடிக்கிறார்
சற்று அப்பால் ஒரு குட்டைநாய்
சொறிந்து கொட்டிக்கொண்டிருக்கின்றது
பிச்சைக்காரர்கள்
பக்கத்துக்கடைகளில் ஏறியிறங்கி செல்கின்றனர்
குளிரூட்டப்பட்ட பேரூந்துகளில் வந்து இறங்கி
சீன உல்லாசப்பயணிகள்
அங்கும் இங்கும் விடுப்புப்பார்க்கின்றனர்
முன்னாள் உள்ள சீடி கடைகளில்
பரியேறும் பெருமாளும் செக்கச்சிவந்தவானமும்
தொங்கிக்கொண்டிருக்கிறது
டொம்குறூஸின் முகத்துடனும் பல
சரிகமபத இறுவட்டு ஒடவிடப்பட்டுள்ளது
பிக்பாஸ் பாகம்பாகமாய் அடுக்கபட்டுள்ளது
வாசு வேணு ராசுவுடன்
இன்னொருவரும் சேர்கிறார்
அவர் பெயர் சபா
ஒரு கால் பொய்க்கால்
பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு வந்துபோகிறார்
கையில் பிள்ளைகள் சொல்லிவிட்ட
பயிற்சிப்புத்தகங்கள்
மூவருக்கும் அழகிய புன்னகையொன்றை
இழையறா நட்பின் பரிசாய் கொடுத்துவிரைகின்றார்
இராணுவ வாகனங்கள் சில கடந்துபோகின்றன
அருகில் உள்ள கடையில்
மீண்டும் ஆயுதபோராட்டம் வெடிக்குமென
ஒரு அரசியல்வாதி விட்ட அறிக்கை
தலைப்புச்செய்தியுடன்
ஒரு பத்திரிகை தலைகீழாக தொங்குகின்றது
யாரும் இன்று மாலைவரையும்
அதை வாங்கவில்லைபோல்
சில பப்பாப்பழங்களையும் சோழன்பொத்திகளையும்
முன்னே அடுக்கிவைத்துவிட்டு
கிழவியொருத்தி யோசித்துக்கொண்டிருக்கிறாள்
சில இளைஞர்கள் கூட்டமாய் கடந்து செல்கின்றனர்
சிகரெட் வாசனை காற்றில் பரவுகின்றது
எனது சவரம் செய்யப்படாத முகமும்
என் முதுகில் காகம் இட்ட எச்சமும்
அருகில் உள்ள சலூன் கண்ணாடியில் தெரிவதை
நான் கடைசியாகத்தான் பார்த்தேன்!
No comments:
Post a Comment