என்னையே பார்த்தவள் ஏழைக்கண் முழுதும்
மண்ணில் பிறந்ததற்கு மரணமே மேலென்று
சொன்னதோர் சேதியில் சோற்றுபருக்கையெங்கும்
கண்ணறைவிழுந்திட்ட கந்தைச் சேலையுளே
கருகிப் போய்விட்ட கந்தர்வ தேவதையின்
வண்ண முகம் புதைந்த வாழ்வுதோன்றிற்று
செம்படை பற்றிச் சிறுமுடிகள் கன்னத்தில்சரியத்
தன் எண்ணத்திலுழலும் ஏழ்மை நாட்கள் பற்றி
சொல்ல அவளுதடு உன்னிற்றோவென் றெண்ணி
உழன்று தூக்கத்திலெழுந்து புலம்பிச்சாமத்தில்
மெல்லக் கதவு நீக்கி பள்ளம் மேடு நிரம்ப
பாதை தவறிச்சுழலும் இந்தபூமி பார்த்துநின்றேன்
கையில்காதிலின்றி காலில் தேய்ந்த செருப்பும்
மேனி வாடியிளைத்துச் சேலைமறைத்த மார்பும்
பையிலெட்டிப் பார்க்கும் பழையதுணிமணியும்
வெயில்பட்டுச்சுருண்ட விழிமடல் சுருக்கங்களும்
பொய்யில்லை ஏழையென புளுங்குமுன் மனதும்
கனவாய் வந்தென்னை கைபற்றிக் கரைகின்றது
என்னிடம் இருக்கின்ற இதயத் துடிப்புகளில்
உன்னையே நினைத்தின்று உருகுமோசையிலே
விண்ணில் தோன்றுமந்த நிலவொளி தென்றல்
அலை புல் பறவை சோலை நதி மலர்கள்
அழகற்று போய்விட்ட ஆழத்துயர் மேவ
கண்ணில்துளிர்க்கிறது கோடைமழையொன்று
இன்றெனை பார்த்த ஏழைகண்ணுடையாள்நீ
வந்தனை நெஞ்சுள் வாழ்நாள் வரையிருப்பாய்
கண்டனை உன்னையென கவியெழுத மறுபிறப்பில்
உந்தனை வருத்துமிவ் ஏழ்மை வறுமை நீங்கி
செல்வத்திளைப்பிலோர் குழந்தையாய் பிறந்துவளர்!!
No comments:
Post a Comment