Saturday, October 20, 2018

திருவிழாவில் தேடப்படும் கடவுள் -பொன்.காந்தன்



நல்லூர் கொடியேறப்போகிறது.பரபரப்பாகிவிடும் இனி  பட்டுச்சேலைகளும் சுடிதார்களும் வேட்டிகளும் திருநீறும் சந்தணமும் அப்பிய வெற்று மேனிகளும்  சாலைகளை அலங்கரிக்கும்..கேபி சுந்தரம்பாள் பெங்களுர் ரமணி அம்பாளின் பாடல்களும் காற்றில் நிரம்பி வழிய ஆரம்பிக்கும்.பருவ வயதின் காதல் நிரம்பிய விழிகளுக்கும்  விருந்து கிடைக்கும்.கச்சான் விற்கும் ஏழ்மை நிரம்பிய கிழவிகளுக்கும் வாசலில் இருந்து இரப்பவர்களுக்கும் ஏதோ கொஞ்சம் காசு புளங்கும் நாட்களாய் இருக்கும். நல்லது மகிழ்ச்சி.நல்லூரானின் திருத்தலத்தை சுற்றியுள்ள வீதிகளில் வழமைபோலவே பெரிய பந்தல்கள் போடுகின்றார்கள்.திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் நின்று இளைப்பாற அது.பந்தல்கள் கிடுகு மேயச்சல்.அது தனி அழகு ஓட்டு சீமெந்து அஸ்படொஸ் கண்ணாடி இழைக் கூரைகளுக்குள்  இருந்து குளிர்மை அற்று வெளியேறும் நண்பர்களுக்கு இந்த பெரிய கிடுக கூரை கண்ணுக்கு இன்பமாய் இருக்கின்றது.

கிடுகு வேய்வது ஒரு கலை.கிடுகு பின்னுவதும் ஒரு கலை.முகடு கட்டுவதும் ஒரு நுட்பம்.வன்னியில் அநேகமாக எனது வாழ்க்கையில் பதினாறு பதினேழு வருடங்கள் மண்சுவருக்குள்ளும் கிடுகு கூரைகளின் கீழும்தான் வாழ்ந்திருக்கின்றேன்.பிறகு அப்பாவின் தேட்டத்தில் சிறுசிறுக சீட்டுப்போட்டு அம்மா சேர்த்த பணத்தில் ஒரு வடக்கு வாசல் மூன்று அறை குசினி விறாந்தையுடன் ஒரு அமெரிக்கன் பாசன் வீடு கட்டினார்கள்.அந்த வீட்டில் அதிக காலம் தூங்கி எழ எனக்கு பாக்கியம் இல்லை.கவலை.அது எனது அம்மா அப்பாவின் கனவு வீடு.எங்கள் வீடுகளுக்கு அண்மையில் படைமுகாம் இருந்ததால்.அடிக்கடி போராளிகள் அவர்கள் பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்கள் தாக்கிவிட்டு செல்வார்கள்.அடிக்கடி அந்த புதிய வீட்டை விட்டு ஓடிஓடி பிறகு ஏக்கத்துடனும் அச்சத்துடனும் கழிக்கவேண்டியிருந்தது.பிறகு தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் ஆனையிறவில் இருந்து புறப்பட்ட படைகளின் ஆக்கிரமிப்பில் எனது புதிய வீட்டை நிரந்தரமாக விட்டுவிட்டு தூர ஓடினேன்.சில ஆண்டுகளின் பின் ஊர் திரும்பியபோது வீடு இருந்த இடத்தில் வெறும் சிதறுண்ட கற்கள் மட்டுமே இருந்தன.அத்தோடு அப்பாவும்  இரவில் தன் வீடுபற்றி புலம்பும் நோயாளி ஆகிவிட்டார்.அதன் பிறகு இதுவரையும் எனக்கு வீடு இல்லை.பின்வந்த நாட்களில் பதுங்குகுழிகளும் தறப்பாள்களுமே எனது வீடுகளாய் இருந்தன.எனக்கும் கிடுகு பின்னத்தெரியும் என்பது எனக்கு பெருமை.அம்மாவிடம் இருந்து அதை கற்றுக்கொண்டேன்.முந்தி எங்கள் வீட்டை மேய்வதற்கு நெடுந்தீவு அப்பு அல்லது அப்புவின் ஆட்கள்தான் வருவார்கள்.கோவணுத்துடன் ஏறியிருந்து மேய்வார்கள்.நான் கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டு நிற்பேன் கோவணத்தை அல்ல கிடுகுவேயும் வித்தையை முதலில் கீழிருந்து கிடுகு எடுத்துக்கொடுக்க பயிற்சி எடுத்திருக்கின்றேன்.நல்லூரின் கிடுகுவேய்ச்சலை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றேன் இவர்கள் நெடுந்தீவாய் இருக்குமோ என நினைத்தேன்.பிறகு கேட்கவில்லை.என்னவோ தெரியவில்லை

மண்கும்பான் வேலணை நோக்கி முச்சக்கரவண்டியில் வேறு யாரையோ சவாரிக்கு ஏத்திய நண்பரோடு நானும் ஓராளாய் எந்த அலுவலுமின்றி அத்தீவுகள் போகும்வழியில் இதை பேச வேண்டியதாய் இருக்கின்றது.
மண்கும்பான் நோக்கி போவென்று ஏதோ ஒன்று  உந்தித்தள்ளியிருக்கின்றது.எதுவாய் இருக்கும்.தெரியவில்லை.முந்தி வன்னியில் மண்கும்பான் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டபோது வேலணை மண்கும்பானில் இடம்பெயர்ந்த நண்பர்கள் பலரும் இருந்தார்கள்.அவர்களின் வாழ்வின் பெரும்பகுதி அங்கேயே கழிந்தது.சிலர் அங்கிருந்து புலம்பெயர்ந்து வேறு தேசங்களுக்கு சென்றுவிட்டார்கள்.சிலர் வன்னியிலேயே வாழ்ந்து முள்ளிவாயக்காலில் மடிந்துவிட்டார்கள்.சிலர் மீண்டும் ஊர்திரும்பினார்கள்.சிலர் ஊருக்கு போகும் வழியில் யாழ்ப்பாண நகரத்தில் தொழிலொன்றை பார்த்துக்கொண்டு வாழ ஆரம்பித்துவிட்டார்கள்.சிலர் சாட்டி துயிலுமில்லத்தில் உறங்கினார்கள்.பிறகு அவர்களின் நித்திய உறக்கத்தை நாகரிகமற்ற காட்டுமிராண்டிகள் கலைத்தார்கள்.மண்கும்பான் போகும்வழியில் பெரிய வெளியில் பக்தர்கள் இன்றி தனித்திருந்தன பெருங்கோபுரங்களோடு கோயில்கள்.பனங்கூடல்கள் அம்மண்ணின் அழகு வெண் மணல்கள் அம்மண்ணின் கவிதை.சில ஊர்களையும் அதன் பெருவெளிகள் யாருமற்ற பனந்தோப்புக்களை பார்க்கும்போது இழப்பின் வலி அதிகமாய் நெஞ்சை தைக்கும்.மண்கும்பானின் வறண்டுவிட்ட பனங்கூடல்களுக்குள் ஆங்காங்கு சிலர் குந்தியிருக்க கண்டேன்.கையில் பீர் ரின்களை வைத்திருந்தார்கள்.அவர்கள் மண்கும்பானை கடந்துபோகின்ற வழிப்போக்கர்களாக இருக்கலாம்.அல்லது உல்லாச பயணிகளாக இருக்கலாம்.மண்கும்பானின் அழகிய மணல் குவியல்களின் பெரும்பகுதி கள்ள மணல் ஏற்றுகின்றவர்களால் காவு கொள்ளப்பட்டுவிட்டது.யார் அந்த மணல் தின்னிகள்.சொல்ல திராணியற்றும் கேட்க திராணியற்றும் இப்படித்தான் பல ஊர்கள் இருக்கின்றன.குற்றமில்லை.தலைமை இல்லாத இனத்தின் தலைவிதி இவ்வாறுதான் இருக்கும்.தலைவர்களை மனிதர்கள் மட்டுமல்ல வெண்மணல்களும் பனங்கூடல்களும் பெருவெளிகளும்தான் தேடுகின்றன

மண்கும்பானின் பலவீடுகள் வெறுமையாகவே இருந்தன.மணல் குச்சொழுங்கைகளில் அவை தனித்திருந்தன.பழைய வீடுகள்.வர்ணங்கள் உதிர்ந்துகொண்டிருந்தன.இருக்கின்ற சிலர் புதிதாய் யாரும் வருவதை விழிகளை அகலவிரித்துப்பார்க்கின்றார்கள்.மண்கும்பானை தழுவும் கடல் ஆழமானது.கடலும் பனந்தோப்புகளும் பேசிக்களைத்த நினைவுகள் சில கரைகளில் நுரையாய் அப்பி அப்பி காய்ந்து வெளிறியிருந்தன.மண்கும்பானின் கடற்கரையில் உல்லாசப்பயணிகள் குளித்துக்கொண்டிருந்தார்கள்.கரையில் குளிப்பது அபாயம் எச்சரிக்கை எனவும் அறிவிப்புப்பலகை கூறியது.சில மீற்றர்களுக்கு அப்பால் அக்கடல் ஆழமானது மீன்குஞ்சுகள் மட்டுமே விளையாடக்கூடிய இடம் அது.அதனால் சில மீற்றர்களுக்குள்ளேயே நீராடிக்கொண்டிருந்தார்கள் அவர்கள்.நீராடும் கரையை அப்பால் கடலை பார்த்துக்கொண்டிருந்தேன்.நீராடிய உல்லாசப்பணிகளான இளம்பெண்களின் ஈர ஆடைகள் ஒட்டியிருக்கும் கட்டழகை நான் கண்ணால் விழுங்குகிறேன் என அவர்களில் சிலபேர் நினைத்திருக்கலாம்.அப்படியும் இருக்கட்டும்.நான் அவர்களுக்கு ஒன்று சொல்ல நினைத்தேன்.அது இப்படியான வார்தைகளில்தான் இருந்தது

நண்பர்களே!நீங்கள் நீராடும் இக்கடலும் கரையும் தழுவும் இந்த மண்கும்பானில்தான் ஏழ்மைத்தாயின் வயிற்றில் புஸ்பகலா என்ற அங்கயற்கன்னி பிறந்திருந்தாள்.அவள் கரையில் இருந்து நாற்பது கிலாமீற்றரில் நீராடி வரக்கூடியவள்.எனக்கு அவள் நீராடிய கடல் ஒரு புண்ணிய தீர்த்தம்போலத்தான்.இம்மண்ணின் பேரழகி.கடலில் பகைவர்களின் கடற்கலங்களை அழித்து தன்னை தற்கொடையாக்கிய முதல்பெண்புலி.ஒரு ஏழை இம்மண்ணுக்கு இட்ட பெரும் பிச்சை அது.அவள் கடலில் கலக்குமுன் என்னுயிர் பிரியும் நாட்கள் நல்லூர் கந்தனின் திருவிழா நாட்களாக இருக்கவேண்டும் ஏனெனில் அவ்வீதியில் கச்சான் விற்கும் என் தாயின் கையில் கொஞ்சம் காசு அதிகம் புளங்கும் அதை வைத்து என் வீடுதேடிச்செல்லும் என் தோழிகளை அம்மா மகிழ்வுடன் உபசரிப்பாள் என தன் ஆதங்கத்தை சொன்னாள்.
திருவிழாநாளில் நான் தேடும் கடவுள் அங்கயற்கண்ணி

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...