Saturday, October 20, 2018

நீ கொஞ்சம் மோசம் ஆனாலும் Awesome-பொன்.காந்தன்




சிசிலியா சிசிலியா சிலுசிலு காத்தில பறந்திட வாவா
சிசிலியா சிசிலியா சிக்முக்கி மூக்கில உரசிட வாவா

அழகே அழகே உன் அழகினில் பாதி
அதுவே உலகத்தின் நீதி
முகையே உன் சிரிப்பினில் மோதி
உடைந்தேன் இது உடைந்திடும் சேதி

போன் கிக்னல் இல்லா நாட்டில்
ரெட் சிக்னல் இல்லா றோட்டில்
உன்னோடு போக றெக்கை உண்டாக

பிறேக்பாஸ்ரா உந்தன் வானம்
லஞ்சாக நெஞ்சம் போதும்
என் டின்னர் பெண்ணே
மின்னும் உன் கண்ணே
கண்மூடிக்கொண்டே முத்தத்தில் மூழ்க
பொலித்தேன் போல நம் காதல் வாழ்க

இப்படி வரிகளை சுமந்து கொண்டு ஒரு பாடல் நான் பயணித்துக்கொண்டிருந்த பேரூந்தில் கரைகின்றது.பேரூந்தின்  ஓட்டுனர் புதுமைப்பிரியர் போலும்.சாளரத்தில் வழியே மேனியை வருடும் காற்று எனக்கும் பருவயதில் என் வாழ்வில் கண்ணோடு மட்டும் வந்து கரைந்துபோய்விட்ட சிசிலியாக்களை நினைவுக்கு கொண்டு வந்து கலைக்கின்றது.இப்போதைக்கு நான் ரொமான்ஸ் மூட்டில் இருக்கின்றேன்.இன்னும் சிலரும் இருந்திருக்கலாம்.பேரூந்தில் அவரவர் ஆயிரம் தேவைகளுக்கு ஏறிப்போய்க்கொண்டிருக்கின்றார்கள்.சிலர் தங்கள் நெருங்கிய உறவுக்காரரின் சாவீட்டுக்கு  போய்க்கொண்டிருக்கின்றார்கள்.இன்னும் சிலர் தொலைவில் பெரிய வைத்தியசாலைக்கு  நெஞ்சுபடபடக்க சத்திரசிகிச்கைக்கு நாள்குறிக்க போய்கொண்டிருக்கலாம்.வேறுபலர் கடன் தொல்லை காதல் தோல்வி புமையான கடவுள் உறையும் கோயிலுக்கு நேத்தியை நிறைவேற்ற என்று வேறுவேறு உணர்ச்சிகளோடு அமர்ந்திருக்கக்கூடும்.ஆனாலும் எல்லோருக்கும் பொதுவாக இப்போது சிசிலியா... சிசிலியா....பேரூந்தில் நிறைந்திருக்கின்றது.
சில வாரங்களுக்கு முன் பேரூந்துகளில் ஆபாசப்பாடல்கள் தொடர்பில் பத்திரிகை ஒன்றில் சேதி வந்ததாய் ஒரு நினைவு.எனக்கு ஆபாசம் என்பதன் அளவு கோல் என்ன அதன் எல்லை என்ன ஆபாசம் என்றால் என்ன என்று ஆழமான கேள்விகள் உண்டு.பல்லாயிரம் கலாச்சாரங்களோடு சுற்றிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் ஆபாசத்தின் வடிவம் எது என்று கேள்வி கேட்கும் உலகளாவிய பார்வையுடைய சிந்தனை.நீச்சல் உடையை நாம் வேறுவிதமாகவே பார்க்கப்பழக்கப்படுத்திவிட்டது எமது கலாச்சாரமும் சினிமாவும்.நீச்சல்உடை அணிந்துதோன்றும் ஒருத்திக்கு எமது பார்வை கவர்ச்சிக்கன்னி என்று பெயர் இட்டிருக்கின்றது.சில்க்சுமிதா என்ற உடலாலும் கண்களாலும் அற்புதமாக நடிக்கக்கூடிய ஒரு சிறந்த நடிகை வெறும் கவர்ச்சிகன்னி வட்டத்துள்ளேயே புதைக்கப்பட்டுவிட்டிருந்தாள்.இதை இன்றுவரையும் இனியும் பொத்திக்காத்து பெருமைபட நினைக்கின்றது எமது மனோநிலை.உலகின் வல்லரசாயும் வளர்ச்சியடைந்த நாடுகளாயும் உள்ள நாடுகளின் வெளிவரும் படைப்புக்களில் குறிப்பாக திரைப்படங்களில் நிர்வாணமாக ஒருத்தி சர்வசாதாரணமாக நடித்துவிட்டுப்போய்விடுகின்றாள்.உடலுறவு காட்சிகளிலும் அப்படித்தான்.இதையெல்லாம் மிகவும் சர்வசாதாரணமாகவே பார்த்துவிட்டுப்போய்விடுகின்றார்கள் அந்த பார்வையாளர் வட்;டமும்.இது அவர்களின் கலாச்சாரம் என்பதைவிட அது அவர்களின் வளர்ச்சிக்கான பெரிய சாதமான ஒரு சமுகநிலை.
பாலியல் தொடர்பில் கன்னித்தன்மை கற்பு என்று எமது சமுகம் வளர்த்துக்கொண்ட வரையறைகள் பெயர்கள் ஒழுக்க வரையறைகள் இன்னொரு புறத்தில் அத்தகையவர்களை வேசைகள் என்றும் கல்லெறிந்து கொல்லப்படவேண்டியவர்கள் என்றும் விபச்சாரிகள் என்றும் மரண தண்டனைக்கு உள்ளாக்கபட வேண்டியவர்கள் என்றும் வக்கிரங்களையும் பயங்களையும் வளர் த்தெடுத்துவந்துள்ளது.பாலியல் தேவை உணர்ச்சிகளின் வடிகால்களை மூடி.பாலியல் இலஞ்சம் கூட்டுபாலியல் வன்புணர்ச்சி என்ற அறுவடைகளை நம் சமுகம் பெற்றுள்ளது.கற்பு கன்னித்தன்மை என்ற பயங்களுடாக பயணித்த வந்த பல பெண்களின் வாழ்க்கை தற்கொலை கொலைவரையும் குப்பைத்தொட்டியில் குழந்தை ஆரோக்கியமற்ற குழந்தையை பெற்றெடுத்தல் வரை போய்முடிந்துள்ளது.எமது கலாச்சாரத்தின் சில கூறுகள் மனோவளர்ச்சி குன்றிய சமுகத்தின் அடையாளங்கள்.ஆபாசம் என்பது அவரவர் பார்வைகளில் மட்டுமே.கற்பு பற்றியும் கன்னித்தன்மையும் வெளியே புகழந் தேற்றினாலும் உள்ளே அப்படி பலர் வாழப்போவதில்லை.இந்த யதார்த்தம் பலருக்கு புரியும்.சமுகப்பிறழ்வு என்பது எம்மால் உருவாக்கப்பட்ட சொற்களோடும் பொருட்களோடும் இணைந்திருக்கின்றது.சீதையை தீயில் இறக்கிய இராமனுக்கு தன் ஆண்மையில் நம்பிக்கை இல்லை.அவ்வளவுதான்.இராவணனும் சீதையும் தெளிவாக இருந்திருக்கிறார்கள்.

சிசிலியா சிசிலியா முடிந்துவிட்டது.தொடர்கிறது ஒரு எனக்கு பிடித்தமான பாடல் ஒன்று.பேரூந்து தரிப்பிடமொன்றில் நிற்கிறது.ஒருவர் ஏறிக்கொள்கிறார்.ஒரு பெண்.பயணிகள் நிரம்பிய இருந்த பேரூந்தில் ஆசனங்களை அவளுடைய கண்கள் தேடுகின்றது.எனக்கு பக்கத்தில் ஒரு ஆசனம் வெற்றிடமாக இருந்தது.அருகே வந்து பார்த்துவிட்டு என்னைப்பார்க்க பிரகாஸ்ராஜ்யை போலவோ ஆனந்தராஜ்யை போலவோ தோன்றிற்றோ என்னவோ அதில் இருக்கவில்லை.எனக்கு முன்னே எனக்கு முதுகைகாட்டிக்கொண்ட ஆசனத்தில் அமர்ந்திருந்தாள்.அவள் உடை எனக்கு கோலம்மாவு கோகிலா நயன்தாராவை நினைவுபடுத்தியது.நயன்தாரா அளவுக்கு மீண்டும் ஒருமுறை பார்க்கவேண்டும்போல ஏதுமில்லை.நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏனெனில் கிசுகிசு படுக்கை அறை என சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும் ஊடகங்களின் மத்தியில் சிக்குண்டு வார்த்தைகளால் சின்னாபின்னப்படுத்தப்பட்டபோதும் எதிர்நீச்சலடித்து தன்னுடைய சுயஉணர்ச்சிகள் தொடர்பில் ஒரு சமுகம் போட்டிருந்த வளையங்களை கடந்து தன்னை சினிமாவில் சிறந்த நடிகையாக நிரூபித்துக்கொண்டிருப்பவர்.அதனால் நயனின் மீது எனக்கு ரொம்பபிரியம் உண்டு.ஒரு குட்டி சாவித்திரியைபோல அவர் உலாவருகின்றார்.ஒரு மு;க்கால் மணிநேரத்தின் பின்னாக இந்தகோலம்மாவு கோகிலா பேரூந்தைவிட்டு இறங்கிச்செல்கிறாள்.பேரூந்தின் அநேகரின் பார்வையும் அவளில் ஒரு முறை மொய்த்து அடங்குகின்றது.சிலர் அவள் பேரூந்தை விட்டு இறங்கிய பின்னும் சாளரத்தினூடாக அவள் செல்லும் பாதை வழியே பார்க்கின்றார்கள்.கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது கண்ணே வெட்கத்தை விட்டு தள்ளு பாடலும் முடிந்து விட்டது.

இப்பொழுது உண்மையை சொல்கிறேன்.இந்த கோலம்மாவு கோகிலாவை எனக்குத் தெரியாது.ஆனால் இவளை பற்றி சிலவிடயங்கள் தெரியும்.மெஸ்மெரிசம் கிப்னாடிசம் எனக்குத் தெரியுமென எண்ணவேண்டாம்.இவளுடைய கணவன் வெளிநாட்டில் இருக்கின்றார்.இவளுடைய தங்கைக்கும் ஒரு வெளிநாட்டு சம்மந்தம்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.இரண்டு வீடுகளில் ஒன்றை வாடகைக்கு கொடுத்துவிட்டு நகரையண்டிய வீட்டில் இவள் இருக்கிறாள்.வாடகைக்கு இருக்கிற வீட்டுக்கார அண்ணனும் நல்லவர்.வாடகையை குறித்த தேதியில் கொடுத்துவிடுகின்றார்.அண்மையில் கோயில்திருவிழாவுக்கு போவதற்காக நகைகளும் உடைகளும் புதிதாக வாங்கியிருக்கிறாள்.அவளுடைய பைபேசியைகூட மாற்றியிருக்கிறார்.புதிய பைபேசியின் விலை எண்பதாயிரம்.அதில் எல்லாம் இருக்கிறது.பூங்கன்றுகளுக்கு நீர்பாய்ச்ச ஒருவரை புதிதாக பிடித்திருக்கிறாள்.யாரோ வட்டிக்கு பணம் கேட்டுள்ளார்கள்.சின்னத்திரை தொடர்கள்தான் இவளது பொழுதுபோக்கு.விடுமுறை என்பதால் பிள்ளைகளை தனது தாயார் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.பிள்ளைகளை ஆட்டோக்கள் ஏற்றி இறக்குகின்றது.இவளுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் உண்டு.ஊர் சிரமதானத்திற்கு கூலிக்கு ஒரு ஆளை பிடித்துவிட்டுள்ளாள்.மாமியாரோடு அவ்வளவு நல்லாக இல்லை.இவளை பற்றி இன்னும் தெரிந்தகொண்டது உண்டு.எனக்கு மட்டுமல்ல பேரூந்தில் பயணித்த எல்லோருக்கும் யாருடனோ உரத்து சாகவசமாக கால்மணித்தியாலம் உரையாடி தன்னை விளம்பரம் செய்து இறங்கிச்சென்றிருந்தாள்.இதை எழுதும் போது நிமலன் வாத்தியார் நினைவுக்கு வந்தார் அவரும் பேரூந்து தொலைபேசி உரையாடல் பற்றி இரண்டு வரியில் முக்குநூலில் பதிவு செய்திருந்தார். நான் இறப்பர் பாண்ட் ஆக்கியிழுத்துள்ளேன்

சிசிலியா சொல்கிறாள் நீ கொஞ்சம் மோசம் ஆனாலும் Awesome

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...