முதல் முறை ஒரு ஊருக்குப் போனேன்
பேரூந்தில் ஏறி அமர்ந்தபோது
நடத்துனர் இறக்கத்தை கேட்டார்
புளியடி என்றேன்
அப்படி ஒரு இடம் இல்லை என்றார்
பிறகு
வேம்படி என்றேன் உரூபா நாற்பது என்றார்
ஊர்களுக்குள்
புளியடி வேம்படி அத்தியடி
கொண்டலடி கூழாவடி மருதடி ஆலடிகள்
நிச்சயம்
நினைவுப் பழங்களை
கனிந்தபடியே இருக்கும்
இப்போதெல்லாம்
ஆலடிக்கு வாவென்று
தொலைபேசி சிணுங்கும்போது
முன்புபோல
அலங்காரம் செய்வதில்லை
வாசனை தடவுவதில்லை
இழுத்து லுங்கியை முடிஞ்சுகொண்டு
முடி காற்றில் பறக்க பறக்க
சில ரூபாய்களோடு போய்விடுகிறேன்
No comments:
Post a Comment