Friday, October 19, 2018

முதல் நாள் வாசனை-பொன்.காந்தன்




பள்ளி தவணை விடுமுறை முடிந்து
மீண்டும்
பள்ளிக்குப் போகும் புதிய நாளில்
சலவைத் தொழிலாளியிடம்
கொடுத்தெடுத்த
மடமடத்த சீருடையில் எழும்
ஒரு வித வாசனை
என் நாசித்துவாரங்களில் இன்றுமிருந்து
நினைவுகளை பரப்புகின்றது

அந்த முதல் நாள்
பலவேளைகளில்
சாலையில் பனித்துளிகள் காயாத
இளங்காலைகளாக
வீதிகளில் படுத்திருக்கும்
பெரிய கொம்பு மாடுகளுக்கு
அச்சமுற்று கடப்பதாக
நாய்களை விரட்ட
ஒரு சிறிய கம்புடன் பயணித்ததாக
புளுதி கிளம்பாத அமைதியான
மெல்லிய இழையினதாய் இருந்திருக்கின்றது

அப்பாவின் கட்டளையில்பேரில்
நடுவகிடெடுத்த முடி சீவிய
கன்னங்களில் சற்று நரை பற்றிய
வாடிக்கையான சலூன்காரர்
சுற்றி சுற்றி கட்டையாய் வெட்டி
என் பிடரியில் பிளேட் படும்போது
புல்லரிக்க புல்லரிக்க
பூனைமயிர்களை வழித்த
என் மொட்டந்தலை
புதிய சப்பாத்தும்
சொக்சுக்குள் புதைந்த விரல்களின் அந்தரமும்
புத்தகப்பைக்குள்
புதிய அழகிய உறைகளுடன்
என் பெயர் வகுப்பு பாடம் எழுதப்பட்ட
அப்பியாசக்கொப்பிகளும்
விடுமுறைநாளில்
அம்மாவின் பர்சில் திருடிய
ஒரு ரூபாக்களால் ஆன மொத்தம் பத்துரூபா
முதல் நாள் வசந்தங்களில்
என்னை ஆனந்தத்தில் மூழ்கடித்திருக்கின்றன

எல்லா வகுப்புக்களையும் எட்டிப்பார்ப்பதிலும்
புதிதாய் சேர்ந்தவர்களை
புதினம் பார்ப்பதிலும்
ஒரு புன்னகையை தூவி பார்ப்பதிலும்
என்னை வெல்ல வந்த
போட்டியாளனாய் இருக்குமோ என
எண்ணிப்பார்ப்பதிலும்
தும்புக்கட்டைகளை எடுத்துவந்து
பெடியளுக்கும் சேர்த்து
வகுப்பை சுத்தம் செய்யும்
தோழிகளான வரங்களுக்கு
எடுபிடி வேலை செய்வதிலும்
அம்முதற் காலைகள் கரைந்து போயிருக்கிறது

இட்டு நிரப்ப முடியாத
அந்த
முதல் நாள் வசந்தங்களில் இருந்து
இடைக்கிடை நினைவு
வெட்டப்பட்ட கானகத்தின்
அடி கட்டைகளான இன்றைய
வாழ்வின் கன்னத்தில்
பொட்டிட்டு பார்க்கிறது
மயிலிறகு எடுத்து வந்து
ஆசுவாச படுத்த பார்க்கிறது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...