எல்லாக்கனிகளும் எனக்காகவே படைக்கப்பட்டிருப்பதாய்
காட்டின் ஆழத்தில் இருந்து பாடல் கேட்டது
தீங்கனிச்சாறு பிளிந்துண்டு
உச்சிக்கனிவரை சர்ப்பமென கிளர்ந்தெழும்
மோக நிலைத்தவம் விழித்த கணம்
மந்திகளை துரத்தினேன் காடுகளை விட்டு நெடுந்தூரம்
மலர்வேர்களின் முடிச்சவிழ்த்து
மர்மத்தீயின் காம்புகளில் பற்றவைத்து
மழையென கிளைவழி தழுவும்
முகில்புணரும் தூறல் தெளித்து
ஆழ்மனத்துயில்கலைத்த அரக்கத்தில் தவிக்கவிட்டு
காடுருகிக்கனிந்த சுவை உணரக்கவிந்தேன்
முயல்குட்டிகள் கடந்து பாய்ந்தன
உச்சிசிலிர்த்த புரவிகள் படையென கடந்தன
மதம் கொண்ட களிறுகள் பிளிறி அசைந்தன
என் அணையுடைத்து
மலை கிளர்;த்தும் நதிகளை பாயவிட்டேன்
அதன் கரைகளாகி ரசித்தேன்
ஆழத்தில் மூழ்கி மூச்சு முட்டக்குளித்தேன்
நிறைந்தங்கு வழிந்தேன்
எறும்புக்கும் மிச்சமின்றி
பசித்த மிருகம் யாரென்று
வேட்டைக்காரர்களின் குரல்களினால்
சிலிர்த்துக்கிடந்தது காடு
கீழ்த்திசையில் எழுந்த செங்கதிரை இழுத்துப்புதைத்து
ஒரு ராஜகுமாரனென கட்டளையிட்டேன்
மொழியற்ற இரவின் முன் நின்றேன்
No comments:
Post a Comment