Tuesday, October 23, 2018

கனம் அல்குசைன் மேற்பார்த்து ஐயா அந்தோனியா குத்தேரசவுக்கு!-தியின் கதை,




வணக்கம்
உடைக்கப்பட் அகிம்சைப்போராளி திலீபனின்
கற்குவியலில் இருந்து
கனத்த மனதுடன் எழுதும் மடல்
கனம் ஐயா அல்குசைன்  மேற்பார்த்து
மேதகு அந்தோனியா குத்தரசுவுக்கு!
இன்று
எங்கள் இளைய மகன் திலீபன்
அன்னம் தண்ணியின்றி
ஆறிரண்டு நாள் கிடந்து
வண்ணமுகம்வாடி உயிர்துறந்தநாள்
என்ன காரணமாம்
எம் தாய் நிலத்தில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு
வேண்டாமென்றான்
ஏனைய உலக மனிதர்போல
வாழும் சுதந்திரம் கேட்டான்
வேடிக்கை என்னவெனில்
ஐயா குத்தரசு
காந்தி தேசமே அகிம்சையை புரியவில்லை
உயிர்கரைந்துபோனான் எங்கள் இளம்கொடியொன்று
இலையுதிர்கால செனிவாவும்
வசந்தகால நியூயோர்க்கும்
உலகின் தொல்குடியில் துயரத்தை விளங்கிடுமா

கொசோவாவின் உள்ளம்போல்
கிழக்கு திமோரின் கனவு போல்
காஸ்மீரின் தாய்நிலக்காதல்போல்
இப்பொழுது குர்திசுக்களின் முழக்கம்போல்
எங்களுக்குள்ளும் ஒரு ஏக்கம்
மசிடோனியா பொஸ்னியா எரித்திரியா மொன்ரிநீக்நோவுக்குஇரங்கிய ஐநா
எங்கள் பக்கமும் திரும்பாதா
நாமொன்றும் வல்லரசுக்கான கனவுடன்
ஒரு வாடகை நிலம் கேட்கவில்லை
எங்கள் பாட்டன் வாழ்ந்தநிலத்தில்
இருந்து சிரித்து மகிழ்ந்து மடியக்கேட்கிறோம்
இஸ்ரேலாக நாம் மாறப்போவதில்லை
உயிர் கொல்லிகளுடன் உறவு கொள்ளப்போதில்லை
அணு ஆயுதத்திற்கு அத்திபாரம் இடப்போவதில்லை
வடகொரியாபோலும் குடைச்சல் தருகிற குணமும் வேண்டாம்
எல்லாவல்லமையும் எம் வேருக்குள்ளபோதும்
புன்னகையோடு வாழ புதிதுடுக்கிறோம்
அதனால் ஐயனே!
அமைதிப்பூங்கா ஒன்றிற்கு அங்கீகாரம் தரக்கேட்கிறோம்

மகாத்மா காந்தியை அறிவீர்
அந்தோனியாகுத்தரசே
எங்கள் ஆரம்பம் அகிம்சைதான்
அந்த வழியில்தான்
அரைநூற்றாண்டு முன்பாக
கனவை எடுத்துவைத்தோம்
கிடைத்ததோ அடியும் உதையும்
அசிங்கமான வார்த்தைகளும்
சிறையும் சித்திரவதையும்
அதன் பிறகுதான் நாம் வெடித்தோம்
வில்லங்கமானவரை மாறினோம்
இடித்து நொறுக்கும் இறுக்கமான மனது படைத்தோம்
அதற்குள்ளும் ஈர நதியை ஓடவிட்டோம்
அன்னை நிலம் தமிழீழம்
அதன் சுதந்திரத்தின் அழகை
என் கண்களால் இரசிக்கவேண்டுமென்றான்
குட்டிமணியெனும் குலக்கொழுந்து
குத்திஎடுத்தனர் அவன் விழியை
நிலத்தில் கொட்டி
எட்டி மிதித்த்தனர் பூட்ஸ்களால்
இத்தனைக்கும் பிறகுதான்
சிங்கள இனவாதத்துக்கு
எம் இளவல்கள் சொன்னபதில்
மின்னல் இடியாகியது
அம்பா இசைத்த கரை
கரும்புலியாக கடலில் இறங்கியது
நிலாவை இரசித்த காதல் விழிகள்
நீறுபூத்த நெருப்பாகி
வானிலேறியும் வதம் செய்யத்தொடங்கியது
நாங்கள் யாருக்கும் குந்தகம் கிடையாது
அப்படியானதுதான் எங்கள் அடிவேரின் குளிர்ச்சி
சும்மா விட்டிருந்தால்
இரணைமடுவில் ஏறி பலாலியில் இறங்கி
பணியாரமும் பருத்தித்துறை வடையும் நிரப்பி
கோணமலையில்போய் கொடுத்திருப்போம்
அன்னபூரணி அமைதியாய் அமெரிக்கா வந்ததுபோல்
பண்டி இறைச்சி வத்தலும் பனங்கட்டியும் கொண்டு
வெள்ளை மாளிகைப்பக்கம் ஒரு விசிற்அடித்துவிட்டு
முடிந்தால் மல்லையாவை கூப்பிட்டு
வியாபாரம் பேசிவிட்டு
தண்ணியில் வந்தும் தலையணையின்றி படுத்து
என்ன மகிழ்ச்சியாய் இருந்திருப்போம்
தாய்லாந்து அழகிகள் பற்றி ஒரு டயறி நிரப்பியிருப்போம்
எங்கே விட்டார்கள்
எங்கள் இதயம் குளிர்மையாக
கந்தளாய்ப் பக்கம் எங்கள் காணியை பிடித்தார்கள்
வெலிஓயாவென்று விலாசங்களை இட்டார்கள்
அம்பாறையில் பாதியை வறுகினார்கள்
எங்கள் பெண்கள் நெஞ்சிலும்
சிங்கள ஸ்ரீயை குத்தினார்கள்
அதுக்குப் பிறகும் நாம் சும்மா இருக்கவோ
சொல்மின் பெரியீரே

சொல்கெய்மெக்கு எல்லாம்
விலாவாரியாய் தெரியும்
அன்ரன் பாலசிங்கம் அடிவளவு புராணத்தை
செம்மையாய் அவருக்கு செப்பியிருக்கிறார்
ஏலாவாளி என்றாலும்
பாலாண்ணையிருந்திருந்தால்
ஐநாவில் எங்கள் மண்ணின் மணத்தை
ஆழுகையை விம்மலை ஏக்கத்தை
கண்ணீரை என்னவிதமாய் என்றாலும்
எடுத்துவைத்திருப்பார்
இழுபாடு இல்லாமல் உலகம் எங்களுக்கு
இறுதி முடிவெடுத்திருக்கும்
எல்லாம்போச்சு
ஆயினும் மண்ணை தமிழ் மானத்தை சுமக்கும் உறவுகள்
இடைவிடாதெழுப்பும் ஏக்கக்குரல்
ஐநாவை கரைக்கும் என கனவுடன் உள்ளோம்

கனம் அந்தோனியாகுத்தரச ஐயா
அல்குசைனையும் அழைத்தபடி
ஈழ மண்ணுக்கு வருவீராக
நவநீதம்பிள்ளையார் வந்திருந்து அளாவிய
வட்டுவாகல் மரத்தடியில் வந்திருங்கள்
கதைகதையாய் காட்டிகாட்டி சொல்கிறோம்
கரைந்துபோவீர்
இரட்டைவாய்க்காலின் இரத்த ஆற்றை
ஓரிரண்டு வார்த்தையிலேயே உணரவைப்போம்
ஓற்றைப்பனையடியை பாருங்கள்
நந்திக்கடலின் நரபலி கதையை கேளுங்கள்
போகும் வழியெலாம்
எங்கள் விடுதலைக்காய் நாம் விதைத்த வீரர்களின்
கல்லறைகள் பல்லாயிரத்தை உடைத்தெறிந்து
கட்டாந்தரையாக்கிய கயமையை எழுதிச்செல்லுங்கள்
கொக்கட்டிசோலையில் சத்துருக்கொண்டானில்
வவுனிக்குளத்தில் செம்மணியில் வள்ளிபுனத்தில்
இப்படி எங்கள் இனிமைகளை
சமாதி ஆக்கியவர் கொடுரத்தை கொண்டு செல்லுங்கள்
நாம் பட்டாம்பூச்சிகள்
இரட்டை கோபுரத்தை இடிப்போமென கனவு கண்டவர்க்கு
எங்கள் புல்வெளி பசுமைகளை பகிரப்படுத்துங்கள்
கைக்குண்டுகளை
மீண்டும் எங்கள் கரங்களில் திணித்துவிடாதீர்கள்
பூச்செண்டோடு புன்னகையோடு
வரவேற்கவே எங்கள் நிலம் நினைக்கிறது
குருதியில் குளித்த எங்கள் நிலத்தின்
உரிமையின் வேட்கையை உணர்ந்து
எமக்கும் ஒரு கொடிபறக்க ஐநாவின் இடம் அருள்வீர்!!



No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...