இன்றொரு கணக்கு போட்டுப்பார்த்தேன்
நாளையும்
இந்த பூமி நகரும் யுகமெல்லாம்
மாற்றமுடியாத முடியாத முடிவொன்றை பெற
கூட்டினேன் கழித்தேன் பெருக்கினேன் பிரித்தேன்
ஆடிப்போய்விட்டேன்
அதிர்ந்தும் நெகிழ்ந்தும் போனேன்
இமைவழி சொரிந்த என் இதயக்கசிவு துடைத்து
நிமிர்ந்து உட்கார்ந்தேன்
வியாசா பிடி வேதத்தை எழுதென
தந்தம் ஈந்த அந்தத்தைப்போல
என் கைக்குள் இறங்கியது காலம்
வெட்கத்தைவிட்டு எழுதுகிறேன்
மிளகும் தண்ணியும்தான் என்னுச்சம்
அதுவும்
அழகியொருத்தியை அடையவும்
ஆடம்பர மாளிகை அமைக்கவும்
நிலவிலிருக்க நீள்விழியாள்
என் முடிகோதிவிடவும்
பதவியில் உயர்வு காணவும்
பவுசுகள் பல சேரவும்
இரவு விருந்துகளில் மயங்கிச்சரியவும்
இனிய கனவில் மிதக்கவும்
எனது விரதம்
எல்லாம் சுயநலம்
மனதில் நெளிகின்றது ஆயிரம் புளுக்கள்
காலக்கணக்கில்
பாஸ் மாக்ஸ் இல்லை எனக்கு
பழி பற்றி தவிக்கிறேன்
இழிவு
நான் ஏன் பிறந்தேன் ஈழத்தமிழனாய்
வாழத்தகுதியிருந்த வாழைக்குருத்துக்கள்
நாளைய தளிர் சிரிக்கவென
உயிரை ஊதி எறிந்த இனத்தில்
தாழ்வாரத்திலேனும் இருக்க தகுதியுண்டா எனக்கு
பொபி ஆன்ஸ்
புரட்சி நதி ஐரிஸ்சின் அழகு
நீரருந்தி நித்திய விரதமிருந்து
சிறையொன்றில் சிறகுதிர்ந்தான்
அண்ணல் காந்தி
பாரத மண்ணில் பாதம் தேய
தண்டியாத்திரை போனார்
தளராத அகிம்சை பாசையில் பழகினார்
இளகாத பல நெஞ்சுகளை இளகவைத்தார்
ஜின்னா கேட்டதை
இந்தா என்று கொடுத்துவிட்டு
வெற்று மேனியோடு நின்ற விலாசம் அவர்
சுபாஸ்சந்திரபோசும்
பகத்சிங்கும் சிறுத்தையானபோதும்
காந்தி சத்தியாக்கிரகமே சாத்தியம் என்றார்
கோட்சேயின் கோபத்தில் கொலையுண்டார்
அண்ணல் காந்தி அத்தேசத்தின் மகாத்மாதான்
ஏன் காந்தியில் பிள்ளைகளுக்கு
திலீபனின்
சாந்தி சமாதானம் சத்தியாக்கிரகம்
புரியாமல் போனது
அவன் குஜராத்தில் பிறக்கவில்லையா
அமீர்கான் போல் அழகாய் இல்லையா
ஊரெழுவில் பிறந்தால் உலகை வெல்லமுடியாதா
மணிப்பூரின் மாதரசி இரோம் சர்மிலாவுக்கு
நடந்த கதியில்
காந்தீயத்தின் முன் ஆயிரம் கேள்விகள்
கதரெல்லாம் காலவாதியாவிட்டதா
மாமாங்கத்தில் பூபதி உயிரும்
கசிந்து கசிந்து வேரோடு கலந்ததில்
விழித்துக்கொண்டது காலம்
வேடதாரிகளை கண்டு கொண்டது
இப்பொழுது மூர்த்தி வரலாம்
முகம் மலர்ந்து நடராஜர் வரலாம்
மோடிவந்து எங்கள் சாமியறையில்
பால் காய்ச்சி பரவசப்படுத்தலாம்
பாதைபோடலாம்
நாம் அதில் எதுவும் குலுங்காமல்
உல்லாசமாகலாம்
மிக்க மகிழ்ச்சி
இப்போதேனும் இதயசுத்தியோடு
ஈழத்தில் அடியாட்கள் தேடாத
மாண்புமலருமா
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்போல
பொற்காசு ஈந்து
எப்பொழுது;ம் உங்களுடன் இருப்பேனென்ற
இதயம் பிறக்குமா
இப்பொழுதுதான் முப்படை கொண்ட
கரிகாலன் இல்லையே
சற்று ஆறுதல் தானே சவுத்புளக்குக்கு
இரட்டைக்கோபுரத்தில் வாணம்விட
எங்கள் பூந்தோட்டத்து வண்ணத்துப்பூச்சியையும்
அண்டத்தை அழிக்கும் பட்சியென பட்டியிலிட்டு
கண்டபடி கொல்ல கண்மூடியிருந்த
வெள்ளை மாளிகைக்கும் வெருளல் இல்லைத்தானே
வள்ளல் ஒருவன் மொழியால்
ஈழத்தமிழினம் எண்பத்தேழில் பேசியது
வந்த பார்;த்தசாரதி பாதியோடு திரும்பாது
நல்லூருக்கு வந்திருந்து நலம்விசாரித்து
தம்பி எழும்பு
தாகத்துக்கு நீரருந்து
எல்லாம் சுபமாய் ஆக ஒத்துழைப்போம்
என்றுரைத்திருந்தால்
பின்னாளில் வந்த எத்தனை வில்லங்கம்
அவலங்கள் கசப்புக்கள் அடியோடு கரைந்திருக்கும்
எங்கள் மானாட மயிலாட எவர் விட்டீர்
தாயில்லாத பிள்ளை ஓர் பிள்ளை
தமிழினத்துக்காக
உருகி உயிர்கசிய சம்மதித்த மூன்றாம்நாள்
அவன் சிறுநீர்கழிக்க முடியாமல்
இருபது நிமிடம்வரை முக்கி வலிக்க நின்றதை
எங்கள் பிள்ளையின்
உதடு பிளந்து கிடந்ததை
எந்த நிலையிலும்
என்னை நீரருந்து எவரும் கேட்காதீர்
என சொன்னதை
மண்ணுக்காக மனதார சாகிறேன் என பட்டிணி கிடந்ததை
மறப்பமோ நாம்
இலட்சம் மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் மத்தியில்
ஒரு மெல்லிய புதல்வன்
மெல்லமெல்ல மரணத்திடம் வீழ
கையாலாகாதவராய் நாம் காத்திருந்ததை
எம் காலம் மறந்திடுமா
என்னால் முடிந்தவரை
எல்லாவழியிலும் கணக்கிட்டேன்
எல்லையற்ற வியாபகமாய் எழுந்து நிற்கிறான் திலீபன்
கையெடுத்து வணங்கினேன்
கண்ணீரில் உறங்கினேன்
No comments:
Post a Comment