Tuesday, October 23, 2018

பிட்டுக்கு மண் சுமந்த சிவனும் மண்ணுக்காய் பசிசுமந்த இவனும்!!-தியின் கதை,





என்ன ஆவாய் என சின்னவயதில்
வாய் நிறைய என் அம்மையும் அப்பனும்
பத்துவயதுவரை மனசில் ஊறும்படி
கேட்ட கேள்விக்கு டாக்டராய் டாக்டராய் என
சொல்லிப்பழகிய எனக்கு
வளர்ந்த பிறகு அந்த கனவு கைகூடவில்லை
அதனால் கவலையுமில்லை
புண்ணுக்கு மருந்திடும் அந்த புனித தகுதியைவிட
மண்ணுக்கு மருந்துகட்டிய
ஒரு மருத்துவ மாணவனுக்காய்
பண்ணுக்கு பாட்டெழுதல் வரமென்பேன்
கண்ணுக்கு எட்;டியவரை
காலத்துக்கு எட்டியவரை
திலீபனைப்போல் தீர்க்கமானவனை காணமுடியவில்லை
புட்டுக்கு மண்சுமந்த சிவனைத்தான்
இரக்கத்துக்கும் எளிமைக்கும்
ஏழேழு யுகத்துக்கும்
எடுத்துச்செல்ல முடியுமென எண்ணியிருந்தபோது
மண்ணுக்காய் பசிசுமந்த
ஒரு பரமவள்ளல் பக்கத்தில்
எங்கள் தொப்பூளடியில் உதித்தபோது
என் தெரிவை மாற்றிக்கொண்டேன்
மட்டற்ற ஒரு ஈகை மனத்தானை
மாதரசி ஒருத்தி எங்கள் மண்ணில் ஈன்றுவிட்டு
ஒன்றும் சொல்லாமல் விண்ணேகிவிட்டாள்
மண்ணரசியோ அந்த மாதவனை
நல்லூரில் கண்டு உச்சிமுகர்ந்தாள்
வாடிக்கிடந்த வண்ணமுகம்தான்
ஈழத்தின் வரலாற்று அழகு
கோடிகளுக்கு குளைந்து
ஆடித்தள்ளுபடி பருவங்கள்போல
ஆழகான வார்த்தைகளோடு
வேளைக்கு வேளைக்கு விழுங்கிவிட்டு
நாளைக்கு வரும் விடியலென
அவன் நாக்கு வளைப்பதில்லை
வீடுபடிப்பு என ஒரு விதியை வைத்திருந்தால்
இன்று எங்கோ பெரிய ஆசுப்பத்திரியில்
காரில் வந்திறங்கி கழுத்தில் மாட்டிக்கொண்டு
பார்த்தீபன் டொக்டராய் பவனிவந்திருப்பான்
கோடி சீதனத்தோடு
கோதை ஒருத்தியொடு குடும்பம் நடத்தியிருப்பான்
குழந்தை குட்டியென்று
அவன் வம்சமும் வளர்ந்திருக்கும்
என்ன அம்சமோ அவன் பிறப்பு
மண்ணுக்கு மருந்திட வந்தான்
மறக்களமொன்றில் குண்டுபாய
பாதிக்குடல் ஈந்து
எல்லாம் வேருக்கென்று இருந்தான்
நீதி கிடைக்காமல் நான் நித்தியத்துள்
நித்திரையானால்
என செத்த உடலை
சந்ததி வெட்டிப்படிக்க
மருத்துவத்துறைக்கு மனதார ஈந்தான்
இப்படி ஒரு புண்ணியன் மண்ணில்
இராப்பகலாய் திரிந்த தெருக்களிலே
இப்பொழுது
கத்தியும் கஞ்சாவுமாய் காவாலிகள்
பெட்டையா பெடியனா என பிரித்துப்பார்க்கமுடியாமல்
கட்டவிழ்ந்து கிடக்கிறது எங்கள் கனவுகள்
வெட்டுகள் விட்டு விளைச்சலை வெளியே காட்டி
கொட்ட கொட்ட குருரப்பார்வைக்கு தீனிபோட்டு
கூட்டில் அடையாமல் அலைந்து
ஈற்றில் மரநாய்களுக்கும் இரையாகிறது
உதடு விளிம்புவரை வந்து குந்தியிருக்கின்றது
களிம்புகளின் சாம்ராச்சியம்
பட்டுப்போகிறது எங்கள் பாரம்பரியம் என்று
தட்டிக்கேட்டால்
தற்கொலை செய்துவிடும் என்று
செத்தவீடுகளை பார்த்துச்சகிக்கிறது பல மனம்
இப்படித்தான் மகனே திலீபா
நீ கண்ட மக்கள் புரட்சியின் ஒரு கூட்டம்
மதம் கொண்டலைகிறது
எப்படியும் அந்த ஈகைப்பேரொளியை
காவிச்செல்ல வேண்டும் காலமெலாமென்று
கனவுடன் திரள்கிறது
இனத்தினை உணர்ந்த இதயங்கள் பல
பைசா கோபுரம்போல்
பார்த்தீபன் தோற்றத்தை
வல்லைவெளியிலும்
பதினெட்டாம்போரிலும்
எல்லைகடந்து எழுப்பினால்தான்
கண்ணில்படும் போதெல்லாம்
எண்ணத்தில் மாற்றம் இளைய சந்ததிக்கு ஏற்படும்
வெசாக்கூடு பார்க்க விழுந்தடிக்கிற கூட்டத்தை
ஒரு ஈகை மண்டபத்தில் எழுந்தருளச்செய்ய வேண்டும்
காலம் பலரை பாற்சோற்றுக்கு பழக்கப்படுத்துகிறது
பழசை மறவென பதப்படுத்துகின்றது
திலீபா உன் நினைவு இருப்பவர்;க்கு
இந்த குறளிவித்தைகள் நிச்சயம் குனிந்துபோய்விடும்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...