Friday, October 19, 2018

வரம் தீர்ந்த கடவுளின் புராணம்-பொன்.காந்தன்




கடைசியாய்
திருடர்களால் களவாடிக்கொல்லபட்ட
விதவையின் பசுவை
உயிர்ப்பிக்கும்படி மன்றாடினேன்

முன்னொருநாள்
நந்திக்கடலோரத்தில் புதைக்கபட்ட
குழந்தைகளை
முற்றங்களில் விளையாட
அருளும்படி கேட்டுக்கொண்டேன்

தூண்களும் துரும்புகளும்
உடைத்தெறியப்பட்டபோதும்
அங்கிருந்தோர் ஆச்சரியத்தை
என் வாழ்நாளில் காணேன்

நேற்றென் தெருவில்
வாகனம் மோதித்தள்ளி
உயிருக்குப்போராடிய நாயை
தூக்கி ஓரமாய்
நீர் தெளித்துக்கொண்டிருந்த
அவனாய் இருக்குமோ என
கடைவிழியில் நீர் அரும்ப
பார்த்தபடியே நின்றேன்

சிறுவயதில் கதாப்பிரசங்கி
நெஞ்சில் பதிய வைத்த அம்சங்களில்
என்னை கடந்து செல்லும் அழகிகளை
கல்லில் உயிர்த்த
தேவதைகளாய் இருக்குமோ
என்றெண்ணி சந்தேகம் படர
பின் தொடர்ந்தேன்

எல்லாப்பயணத்திலும்
பேருந்தின் சாளரத்தால்
எல்லாச்சந்நிதிகளிலும்
எட்டி எட்டி பார்த்து
களைத்துப்போயிருக்கின்றேன்

வரம் தீர்ந்து போயிற்றா கடவுளே!!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...