ஏன் ஹர்த்தால்
எழுதப்பட்ட
எல்லா வாசகத்திலும்
வாசித்துக் கொண்ட
எல்லா விழிகளிலும்
நாளை உணரப்பட்டது
துண்டுப்பிரசுரங்கள்
சே யின் நிறத்திலும்
ஜீசஸின் பாரத்திலும்
புத்தனின் ஞான விழியை
நோக்கியும்
ஒட்டப்பட
சாலைகள் வெறிச்சோடியது
வெறிச்சோடிய சாலையில்
எங்கும்
அதிகார வெறியின்
பார்வை பரந்திருந்தது
எல்லாவற்றையும்
பறித்தெடுக்கும் வன்மமும்
எதையும் இழக்க முடியா
வைராக்கியமும்
சாலையில் நிறைந்திருந்தது
ஹர்த்தால்களின் பின்
இரவுகளில்
நாய்கள் குரைத்தன
துப்பாக்கிகளும்
மதில்களை துளைத்தன
ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரங்களில்
குருதியின் வாசனை
தீர்வுகளும்
தீர்ப்புக்களும் வாசகங்களாயின
இங்கே அன்று
புரட்சி இருந்தது
புரட்சி முடிந்ததாயும்
புரட்சி மெளனித்ததாயும்
புரட்சி முடிக்கப்பட்டதாயும்
புரட்சி வேறு வழி கண்டதாயும்
புரட்சி பதுங்கி இருப்பதாயும்
புரட்சி வானில் தோன்றுமெனவும்
ஆளாளின் புரட்சிகளின் மத்தியில்
இன்றும்
ஹர்த்தால்
இனி.......
No comments:
Post a Comment