இன்று காலை கொத்மலை பேரூந்தில் குந்தியிருக்கின்றேன்.கூடவே சில பெரிய சிறிய தண்ணீர் வெற்று போத்தல்களையும் தண்ணீர் வியாபாரி போல அள்ளிக்கட்டிக்கொண்டு புறப்பட்டிருக்கின்றேன்.பேரூந்தில் ஏறுகின்றவர்கள் சற்று என் மீது பார்வையை மொய்த்துத்தான் அமர்கின்றார்கள்.சிலர் குசுகுசுக்கவும் செய்கின்றார்கள்.கொத்மலை போய்விட்டு பேதுறுதாலகாலமலைக்கும் போவதாக உத்தேசம்.தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிர பரணி தண்ணியை விட்டு என்று ஒரு பாடலை பாடவேண்டும்போல இருந்தாலும் மொழிச்சிக்கலால் தஞ்சாவூரும் தாமிரபரணியும் வேறுமாதிரி விளங்கப்பட்டு என் எலும்புகள் முறிக்கப்படலாம் என்பதால்.எத்தனையோ பொம்மை செய்தேன் கண்ணம்மா அது அத்தனையும் உன்னைப்போல மின்னுமா என தொடராமலே நெஞ்சுக்குள்ளேயே நிறுத்திக்கொண்டேன்.யார் நீ என்ற அவர்களின் கேள்விகளுக்கும் எங்கேபோகிறாய் என்ற உங்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டியிருக்கின்றது.ஓம் நான் தண்ணி எடுக்க போய்கொண்டிருக்கின்றேன்.அதுவும் மகாவலி தண்ணி அதுவும் அது தோன்றும் மலையிலேயே எடுத்துவர போய்கொண்டிருக்கின்றேன்.ஏனென்றால் எங்களில் சிலபேருக்கு அவசரமாக மகாவலி தண்ணீர்தாகமாக இருப்பதால் அதை எடுத்துக்கொடுப்பது தார்மீகம்.தவிச்சவனுக்கு தண்ணீர் கொடுக்கவேண்டுமல்லவா.மகாவலி தண்ணீர் வராவிட்டால் எதிர்காலத்தில் பூவரசு கருகிவிடும் பூநகரி சகாராவாகி விடும் பொமேரியனை குளிப்பாட்ட முடியாது என சிலர் புலம்பஆரம்பித்துள்ளார்கள்.தண்ணீரை யாருக்குத்தான் பிடிக்காது.குளிர்ந்த தண்ணீர் வீட்டைசுற்றி ஓட அதில விழுந்து குளிச்சு நீராடி அந்த நீரின் குளிர்மையில் இலைகளும் புற்களும் பயிர்களும் மகிழ்ந்திருக்கும் காட்சியும் அனுபவமும் யாருக்குத்தான் பிடிக்காது.சில நாட்களுக்கு முன் வேர்த்து விறுவிறுக்க எல்லைக்கிராமங்களில் இருந்து கால்நடையாகவும் அகப்பட்டதில் ஏறியும் வந்து மகாவலி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு ஒன்றும் நீர்வெறுப்பு நோய் கிடையாது.சிங்களவர்களோடு சேர்ந்து வாழக்கூடாது என்ற வன்மமும் கிடையாது.சிங்கள இனவாத தலைமைகளை பொறுத்தவரை மகாவலி திட்டத்தின் ஊடாக தமிழர்கள் நிலத்தை சனத்தொகை பரம்பலை குறைத்தல் சிங்கள பிரதிநிதித்துவத்தை தமிழ்நிலத்தில் ஏற்படுத்தல் சர்வஜன வாக்கெடுப்பு என்று வருகின்றபோது வடக்கு கிழக்கில் சிங்கள மக்களின் மூலம் காத்திரமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துதல் என்பன அவர்களின் நோக்கம்.இதற்காக அவர்கள் மகாவலியை பயன்படுத்துகின்றார்கள்.அவர்கள் இந்த விடயத்தில் தெளிவான கருத்துடன் உள்ளார்கள்.நம்மில்தான் பலகருத்துக்கள்.பல கருத்துக்களும் அவசியம்.அந்த ஜனநாயகம் உள்ளபோதுதான் தெளிந்த கருத்துக்கு முடிவில் வரலாம்.
வடக்கு கிழக்கு நிலத்தொடர்சியை இனவிகிதாசாரத்தால் கூறுபோடுவதற்கு மகாவலி எல்வலயம் தன் பங்கை விரும்பியோ விரும்பாமலோ ஆற்றும்.பண்டா செல்வா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் பிராந்திய சபைகளின் கட்டமைப்பில் தமிழர் நிலத்தில் வாழும் சிங்களவர்களின் விகிதமும் கணக்கில் எடுக்கப்படுகின்றது.இழுத்தடிக்கபட்;ட காலத்தின் பின் ஒரு தீர்வு முயற்சி முடிவுக்கு வருகின்றபோது தமிழர்நிலத்தில் சிங்கள மக்களின் சனத்தொகைப்பரம்பல் அதிகரித்த நிலையில் அவர்களின் தீர்மானங்கள் கருத்தில் கொள்ளப்படும் நிர்ப்பந்தத்துக்கு தமிழர்நிலம் தள்ளப்படும்.இதற்கு மகாவலி எல் வலயம் தன் பங்கை ஆற்றும்.எனக்குள்ள கேள்வி தமிழர் நிலம் என்ற ஒரு கருத்து நிலைப்பாடு இப்பொழுது உள்ளதா என்பதுதான்.தமிழர் நிலம் என்ற நிலத்துக்கான தீர்வு என்பது அருகி இப்பொழுது தமிழர்களுக்கான தீர்வு என்ற நிலைக்கு அதுவந்துவிட்டதுபோலும்.நிலத்தை விடுத்து தமிழர்களுக்கான தீர்வு என்றுவருகின்போது மகாவலி வந்தால் என்ன வராவிட்டால் என்ற நிலைதான்.நிலம் என்பது ஒரு தனி அடையாளம்.விடுதலைக்காக போராடுகின்ற இனம் தன்நிலத்தை தக்க வைத்துக்கொள்ளுதல் மிக அவசியம்.ஆக நமது நிலைப்பாடுதான் என்ன வென்று புரியாதபடி நிலைமை போய்கொண்டிருக்கின்றது.அதன் ஒரு வாசகம்தான் வடக்கு மகாவலி என்ற உச்சரிப்பு.இதுகூட
சிங்கள இராஜதந்திரத்தின் வெற்றியே.இந்த வடக்கு மகாவலி கருத்துருவாக்கமே தவறானது.அதன் மறுபொருள் ஒன்றுபட்ட இலங்கையின் மறுபாதி.மகாவலி இலங்கையின் சகல மக்களையும் இணைக்கின்றது.அது இலங்கை எங்கள் தாய்திருநாடு என சொல்லவைக்கின்றது.எமக்கு எது சாத்தியம்.மகாவலியை
தமிழர்களுக்கான இனப்பிரச்சனைக்கான தீர்வு வரைபின் அடிப்படையிலேயே அணுகவேண்டுமே
தவிர நீரின் அடிப்படையில் அல்ல.
துரதிஸ்டம் கடந்த கால வரலாறு தமிழர்களை தற்பொழுது ஒரு நீர்வெறுப்பு நோயாளிகள் ஆக்கியுள்ளது.இது தவிர்க்கவும் முடியாது.அவரசரமாய் மகாவலி தண்ணிவேண்டும் இல்லையென்றால் காவிரி கர்நாடகாவில் போய் அள்ளிக்கொண்டுவந்து பூநகரியில் வைத்துக்குடிப்போம் என்பவர்கள்
கொஞ்சம் பொறுமையாய்
இருங்கள்.இப்போதைக்கு நான் உங்களுக்காக மகாலி தோன்றும் மலையில் இருந்து ஒரு இனவாதமும் கலக்காத சுத்தமான நீர் கொண்டுவருகின்றேன்.குடித்து ஆறுதல் பெறுங்கள்.மகாவலி வரும்வரும் வரவேண்டும்.அது நீராக மட்டும் வரும்படி செய்ய அணைகளை உருவாக்க போராடியே ஆகவேண்டும்.சட்டதிட்டங்களில் திருத்தங்கள் செய்யவேண்டும்.அதற்கு அழுத்தங்கள் கொடுக்கவே வேண்டும்.அதற்கு மக்கள் திரள்வதை தவிர வேறுவழியில்லை.ஏனெனில் எமது மக்கள் பிரதிநிதிகள் கொழும்பில் ஐக்கியமாகி வடக்கு மகாவலி என்ற பிள்ளை பெறுகின்றபோது பத்தியம் பாக்க தயாராக இருக்கின்றார்கள்.
திரும்பி வருகின்றபோது கொத்மலை உக்குவளை விக்டோரியா இரந்தம்மை போன்வற்றின் அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கின்றேன.நீங்களும் சில அனுபவங்களை பகிரவேண்டும்.வடக்கில் பல பாழடைந்த காணிகளும் வீடுகளும் உள்ளன அங்கு நீருடன் பாழடைந்த பாவிக்கப்படாத கிணறுகளும் உள்ளன.ஒன்றல்ல பல நூறு இப்படி உள்ளன. அந்த வெற்றுக்காணிகளில் கிணற்றை சுற்றி நாலுவாழை நாலு கத்தரி நாலு வெண்டு நாலு மரவள்ளி நாலு ராச வள்ளி நாலு பூசணிக்கொடி நாலு வற்றாளை வைத்து நீரூற்றினால் வயிற்றுப்பாடும் ஆச்சு நிலமும் குளிர்ந்தாச்சு பல்சர் கங் எடுத்து வெட்டியாக சுத்துகிற பணத்துக்கு வெற்றுக்காணிகளை களனி ஆக்கினால் எத்தனையோ பிரச்சனை தீரும்.நீரில்லை என்று யார் சொல்வது எத்தனை வெற்றுக்காணிகளில் பாவிக்கப்படாத பாழடைந்த கிணறுகள்.என்ன நீங்கள் காணிக்குள் இறங்கினால் எங்கிருந்தோ வருவான் ஒரு சண்டியன் தமிழன் யாரடா எங்கட காணிக்கை கால்வைக்கிறது என அந்த அனுபவத்தை சொல்லுங்கள்
நீராக மட்டும் வந்தால்
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல என பாடி ஆடுவதாய் ஒரு ஆசை
No comments:
Post a Comment