-
அந்த நாள் மறக்கமுடியாத ஒன்றாயிற்று
அந்நாளில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன்
அந்நாளில் என்னிடம் ஒரு துவிச்சக்கரவண்டி இருந்தது
அது லுமாலா என நினைக்கின்றேன்
ஒரு கறுத்த பயணப்பை
ஒரு சிறிய வானொலிப்பெட்டி
அதிக ஆடம்பரமில்லாத
சில நீளக்காற்சட்டைகளும் சட்டைகளும் இருந்தன
தயாரிக்கவேண்டிய
வீரமரணமடைந்த போராளிகளின் கணப்பொழுது பிரதிகள்
எழுத வேண்டிய சில சிறப்பு நிகழ்ச்சி பிரதிகள்
என் மேசையில் கோப்புகளில் இருந்தன
தண்ணீரூற்றில் குளிர்மையான காற்று இருந்தது
உணர்ச்சி பூர்வமான ஒரு பரபரப்பு
புலிக்கொடிக்கான சல்யூட்
ஒரு அகவணக்கம்
சில கட்டளைகள்
என்னோடு கூட வந்துகொண்டிருந்தன
தண்ணீரூற்று சந்தியில் இருந்த பெரியபுளி
அதன் கீழ் நடக்கும்
மாலைப்பொழுகளின் இளைப்பாறல்
ஆனந்தன் கடையின்
இனிய வடையும் பிளேன்ரியும் இடியப்பமும்
மாமூலை வழியாக
நீராவிப்பிட்டிவழியாக நடக்கின்ற
ஒரு சிறிய நடை
காற்றில் ஏறி என் காதுக்கே வந்தொலிக்கும்
எனது குரல் நிரம்பிய இரவுப்பொழுது
அந்நாளில் இருந்தது
அந்நாளில் நான் என்ன செய்துகொண்டிருந்தேன்
கேப்பாபிலவின் வழியே
புதுக்குடியிருப்பு செல்லும் செம்மண் சாலையில்
கூட்டமாய் நிற்கும் எருமைகளை
குறுக்கறுத்து ஓடும் ஆறுகளை
கரும்பச்சையான கானகத்தோடண்டிய வயல்களை
ஒரு புறம் தெரியும் நந்திக்கடலை
ஆம் எனது நிலத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்
அந்நாள் பின்னாளில்
மறக்கப்பட முடியாத நாள் என்பதை
தினமும் உணர்த்த ஆரம்பித்திற்று
அந்நாளில்
தவபாலனின் அறையில் மட்டும்
ஒரு தொலைக்காட்சி இருந்தது
அதில்தான் ஓய்வான பொழுதில்
சின்னபாப்பா பெரிய பாப்பாவையும்
சப்தஸ்வரங்களையும்
பாலுமகேந்திராவின் கதை நேரங்களையும் பார்த்தோம்
அந்த அறையில் சிலவேளைகளில்
அனாமுனா இரட்ணா
வாஜ்பாயி போல நடந்தும் கதைத்தும் காட்டுவார்
பத்மனும் திருமாறனும் தமிழ்மறவனும்(நிக்சன் )
தங்கள் பங்குக்கு சிரிக்கவைப்பர்
சத்யா விழுந்துவிழுந்து சிரிப்பார்
சத்யாவை பார்த்து நாங்கள் சிரிப்போம்
தவபாலன் பன்னாடைகள் என
செல்லமாய் ரசித்து திட்டிக்கொண்டிருப்பார்
வரன் எனும் மணியத்தாரும் விஷ்வாவும் கூடவே
அந்நாளில் நானும் என்னை மறந்து
சிரித்துக்கொண்டிருந்தேன்
அந்நாள் மிக முக்கியமானது
அந்த அறையில்
ஒரு காலை கரைந்து கொண்டிருந்த பொழுதில்
தவபாலன் பரபரப்பாக அழைத்தார்
எழுதிய பிரதிகளை விட்டுவிட்டும்
ஒலிப்பதிவுக் கூடங்களில் இருந்தும்
நண்பர்கள் ஓடினார்கள்
நானும் ஓடினேன்
சி என் என்னில் அக்காட்சி
தோழிகளும் கடவுளே என அலமந்தனர்
ஆம் செப்ரெம்பர் பதினொன்று அந்நாள்
அக்கோபுரங்களில் பற்றிய தீயின் பொறி ஒன்று
எங்கள் பனந்தோப்புகளிலும்
வயல்வெளிகளிலும்
செம்மண் வீதிகளிலும்
கடல்கரைகளிலும் விழுந்ததையும்
அவை பற்றிக்கொண்டதையும்
அவ்வளவு ஆழமாய் சாமானியர்கள்
கண்டுகொள்ளா நாளில் நானுமிருந்தேன்
இந்நாளில்
என்ன இருக்கிறது என்னிடம்
என்று சொல்லமுடியாதபடி
எரிந்து சாம்பராக்கிற்று அப்பொறிகள் என் நிலத்தை
எனது வயல்களில் பட்டாம்பூச்சி
கழுகின் கண்களில்
எவ்வாறு தெரிந்தது
No comments:
Post a Comment