Saturday, October 20, 2018

ஒரு பயணம்-பொன்.காந்தன்



கட்டு நாயக்காவில் இருந்து அழைத்து வந்து கொண்டிருந்தேன்
அவர்கள் என் பேரப்பிள்ளைகள்
அன்னிய தேசமொன்றில் பிறந்தவர்கள்
இது கூட இன்று அன்னியதேசம்தான் அவர்களுக்கு
அவர்களுக்கு வயது பத்திற்குள்தான்
கொழும்பு தாமரைக்கோபுரத்தை காட்டினேன்
சுதந்திர சதுக்கத்தை சுற்றிக்காட்டினேன்
பழைய பாராளுமன்றத்திற்கு வழி சொன்னேன்
தேசிய அரும் பொருட் காட்சியகத்துக்கும்  போனோம்
களனி கங்கைக்கரைக்கும் அழைத்துச்சென்றேன்
ஆமர்வீதிக்கும் ஐந்து லாம்பு சந்திக்கும்
கொச்சிக்கடைக்கும் சுற்றிவந்தோம்
வெள்ளவத்தை வீதியாலும் வாகனத்தை ஓட்டச்சொன்னேன்
காபரை காட்டினேன்
காலிமுகத்திடல் சென்று
அவர்களுடன் காற்று வாங்கினேன்
கொழும்பை கரைத்துக்குடித்தவனென
என்னை என் பேரர்கள் எண்ணியிருக்கக்கூடும்
கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி கொண்டேன்
வடக்கு நோக்கி சொகுசு ஊர்தியொன்றில் பயணப்பட்டோம்
வரும் வழியெங்கும்
உயர்ந்த மலைகளை காட்டினேன்
மலைகளின் பெயரும் சொன்னேன்
மலைகளில் உள்ள விகாரைகளை பற்றி விளக்கம் சொன்னேன்
ஆறுகளை காட்டினேன்
ஆறுகள் போகுமிடங்களை புவியியல் பிசகாமல் எடுத்துச்சொன்னேன்
கிளைவிடும் வீதிகளை காட்டி
அவை சென்றுசேரும் ஊர்களின் பேர் சொன்னேன்
இத்தனை அறிவா தங்கள் தாத்தாவிற்கென
என் பேரர்கள் வியந்திருக்கக்கூடும்
காற்றில்  பறக்கும் என் நரைகளை தடவி கொஞ்சம் கர்வமானேன்
தம்புள்ள நகரத்தின் புகழ்சொன்னேன்
அந்தச்சந்தையின் பெருமையை கொட்டினேன்
குன்றுகளின் பின்னணியில் விரியும் வயல்களை மேவிவரும்
மெல்லி கூதற்காற்று என்னை வருடிச்செல்கின்றது.

என் பேரர்கள் என்னை தட்டி எழுப்பினார்கள்
ஓ அயர்ந்து தூங்கிவிட்டேனா
மதவாச்சி வந்துவிட்டோம்
இனி வவுனியா
எங்கள் இடங்கள்தான் என்றேன்
அனுராதபுரம் எங்கள் இடமில்லையா
எல்லாளன் எங்கள் மன்னனில்லையா
அவர்களின் கேட்டகேள்வியில்
திடுக்குற்று கண்களை கசக்கித் தெளிந்தேன்
மறுபடியும் நிச்சயமாய் நான் தூங்கியிருக்ககூடாது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...