யுத்தம் இல்லை.சத்தமில்லை.பூனையின் மென் பாதங்களை கொண்ட ஒரு இராட்சச மிருகம் எனது காடுகளிலும் தெருக்களிலும் கடலின் கரைகளிலும் அமர்ந்து தூங்கி எழ ஆரம்பிக்கிறதான அச்சம் நெஞ்சில் பரவுகின்றது.ஈராயிரத்து பதினெட்டின் ஆவணி மாதத்தின் பொழுதுகளில் இதை எழுத வேண்டுபோல ஏதோ ஒன்று என்னை உந்தித்தள்ளுகின்றது.எட்டு ஆண்டுகளுக்கு முன் போர்களமாய் இருந்த வலைஞர் மடத்தின் கடற்கரையில் கொட்டிக்கொண்டிருந்த மகிந்தராஜபக்சவின் முப்படைகளின் குண்டுமழை நிறைந்த மரணகளத்தில் நான் உயிர்காக்க பதுங்கியிருந்த
வெண்மணல் நிறைந்த பதுங்குகுழி இருந்த இடத்தில் கடலின் காற்று வருடிச்செல்ல கண்களை விரித்தபடியே சரிந்திருக்கின்றேன்.ஒரு போத்தல் பனங்கள் அருந்தியிருந்தேன்.இன்னொரு போத்தல் இருந்தது.போதை ஏதுமில்லை.போதை ஏறுவதாயும் இல்லை.நிதானமாய் சிந்திக்க வைக்கின்றது அந்த மணல் வெளி.அந்த மணலுக்கும் பனைகளுக்கும் கடல் அலைகளுக்கும் பேசத்தெரிந்தால்.இந்த உலகம் தினமும் அழும்.அந்த மணலில் புதைந்துபோன உயிர்கள் எத்தனை எத்தனை.இரத்தத்துளிகள் எங்கும் சொட்டிச்சொட்டி கிடந்த அந்த கரையும் கடலும் இன்று போரின் அடையாளங்களில் இருந்து மீண்டு கொண்டிருந்தன.வேள்விக்கு வளர்க்கப்படும் பிராணிகளைப்போல முல்லைத்தீவின் கிராமங்கள் குண்டும் குழியும் மறைந்து எங்கும் தார்வீதிகளும் மின் ஒளிகளும் நிறைய செழித்துக்கொண்டிருக்கலாம்.ஒரு பேரச்சம் ஒன்றினால் அந்த நிலத்தின் மனம் அதிர்ந்துகொண்டிருப்பதை அடங்காப்பற்றின் வேரின்வாசம் அறிந்த பலரும் உணருவார்கள்.சில தசாப்தங்களின் பின் முலைத்தீவ என்ற பெயர்ப்பலகை மாட்டிய பேருந்தில் ஏறிஅமர்ந்த எனது இளவல் ஒருவன் பேருந்தில் நிறைந்த சிங்கள வியாபாரிகளாலும் குடியேற்றக்காரர்களின் சிரிப்புக்களாலும் ஒரு ஓரமாய் இருந்து
நெஞ்சு வதையுண்டு பின்னிரா ஒன்றில் முல்லைத்தீவு பட்டணத்தில் வந்திறங்கும்போது பனிக்குளிராலும் பயணக்களைப்பாலும் சோர்ந்திருந்த அவன் ஒரு சூடான தேனீருக்காக ஒரு தமிழ் கடையை தேடி அலைந்து இறுதியில் தே பொன வத கேட்கும் குரலுக்காய் ஆம் என தலையாட்ட வேண்டியிருக்கும்.
விசுமடுவ ஊரைக்கடந்து பயணிக்குப்போது அநேகமாக இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரியும் முல்லைத்தீவின் அழகிய கானகங்களின் அடர்ந்த மரக்கிளைகளின் மேல் விகாரைகளின் முகடு வெள்ளையாக எனது வானத்தின் பின்னணியில் தென்படும் காலத்தை எனது இளவல்கள் தரிசிக்கக்கூடும்.இந்த மனப்பிராந்திக்கான எல்லா ஆதாரங்களும் கண்களில் படுகின்றன இப்பொழுது.
பற்றுக்களால் ஆன முல்லைத்தீவாய் அதற்கு ஒரு கம்பீரம் உண்டு.கூத்தாடும் பாதங்களால் ஒரு கலை நயம் உண்டு.தண்ணீருற்றெனும் பெயரால் அதன் செழிப்புணரப்படும்.வற்றாப்பளையின் கண்ணகியால் இதிகாச புராண பதிகங்கள் காற்றில் கலந்த அமைதியை இதயம் சுவாசிக்கும்.கடற்கரைகளில் எல்லைவரை காக்கும் கரங்களை விரித்த மாதாவின் சந்நிதிகளால் படகுகள் கடலேறும் கரையேறும் நம்பிக்கையின் சுவடுகளில் நடந்துவந்த காலம் கரைகளில் ஒட்டிக்கிடக்கின்றது.கற்பூரப்புல்வெளியும் கற்சிலை மடுவும் பாலியாறும் வடகாடும் பண்டாரவன்னியன் கைலாயவன்னியனின் புரவிகள் உலவிய நினைவுகளை ஆழத்துள் புதைந்தபடி காத்திருக்கின்றன.அன்னிய படை எடுப்புக்களால் சிதைந்துபோன தமிழர் ஆட்சி பண்டாரவன்னியனால் மீண்டும் தளிர்த்தபோது வன்னியின் முல்லைத்தீவின் கானகங்கள் வீரத்தின் விளைநிலமாக மாறியிருந்தது.வன்னியின் எல்லா சிற்றரசுகளும் வெள்ளையர்களுக்கும் அன்னியர்களுக்கும் அடிபணியாமல் போரிட்டன என்பதில்லை.சில பற்றுக்களின் தலைமைகள் அன்னியருக்கு திறை செலுத்தி ஒரு அடிமைத்தனத்துள் வாழ சம்மதித்த சாபக்கேடு உண்டு.பண்டாரவன்னியனோ என்நிலத்தின் வளங்களை சுரண்டும் அன்னியர்களுக்கு எதிராக திறை செலுத்த மறுத்த சிந்தனையை விதைத்து எதிர்த்து போராடியவன்.தமிழர்களின் தொன்மை மரபில் இருந்த பெருவீர மரபை தன் தோள்களில் ஏற்றி காட்டினான்.முல்லைத்தீவின் கானகங்களின் வேர்கள் நன்றே அறியும்.
1803ல்
முல்லைத்தீவின் அன்னியர் கோட்டையை தகர்த்து அங்கிருந்த பீரங்கியை எடுத்துச்சென்று வெள்ளையத்தளபதியையும் புறமுதுகிடச்செய்துவிட்டு கற்சிலை மடுவில் தன் படைகளுடன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பண்டாரவன்னியனுக்கு பின்வாங்கிய வொன்றிபேக் மன்னார் ஊடாக தன் படைகளுடன் முல்லைத்தீவின் மேற்கில் இருந்த பற்றுக்களை கடந்து பண்டாரவன்னியனை நெருங்கும்வரையில் ஒரு சேதியைதானும் அப்பற்றுக்களின் தலைமைகள் அந்த மாவீரனுக்கு சொல்லியனுப்பவில்லை என்பதுதான் துரதிஸ்டம்.அன்றும் ஒட்டுமொத்தமாக வன்னியின் பற்றுக்கள் அன்னியர்களுக்கு எதிராக போராடவில்லை என்பதுதான் வரலாற்றை படிக்கும்போது எழும் கேள்விக்கு விடை.இது தமிழ் சமுதாயத்திடம் முள்ளிவாய்;க்கால்வரை ஒரு மரபணு நோய்போல தொடர்ந்துவந்துள்ளது.அந்த நோயை குணப்படுத்த இன்றுவரை ஈழத்தமிழர்கள் விரும்பவில்லை என்பதும் சாபக்கேடு.இதோ முல்லைத்தீவு முலைத்தீவ ஆகிக்கொண்டிருக்கின்றது.முல்லைத்தீவு கோட்டையை தகர்த்து எதிரிகளை அழித்து கைப்பற்றிய பீரங்கியை கொண்டு மீண்டும் முல்லைத்தீவை கைப்பற்ற வந்த வொன்றிபேக் படையை எதிர்க்க முடியாத படி தமிழர்களின் சுயநலம் பண்டாரவன்னியனை தனித்துவிட்டிருந்தது.இந்த வரலாற்று வழுவை 2009ல் நிறைவு பெற்ற மூன்று தசாப்பதங்களில் ஈழத்தின் நிகரற்ற பெருவீரராக விளங்கிய முப்படைகளையும் வரலாற்றில் கட்டிஎழுப்பி வைத்திருந்த பிரபாகரன் என்ற தமிழ் மன்னன் திருத்தினார்.எவ்வாறு திருத்தினார்.
பல இலட்சம் தமிழர்களை கொண்ட யாழ்ப்பாணத்தை 1995களில் சூரியக்கதிர் என்ற படை நடவடிக்கை மூலம் சிங்கள படைகள் கைப்பற்ற முனைந்தபோது பிரபாகரன் சில ஆயிரம் புலிப்படை வீரர்களை கொண்டு அவர்களின் அர்ப்பணிப்பையும் மனோதிடத்தையும் பலமாக கொண்டு பிரபாகரன் இயன்றவரை போராடினார்.ஆயினும் புலிகளின் ஆளணி போதா நிலை யாழ்;ப்ப்பாணத்தை சிங்கள படைகளிடம் பறிகொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.இவ்வேளை தன் படைக்கட்டமைப்பின் சிதைவை தடுத்து தக்கவைத்துக்கொள்ள வன்னிக்கு பிரபாகரன் தந்திரமாக பின்வாங்கினார்.பின்னர் பண்டாரவன்னியனைபோலவே வரலாற்றின் தொடர்ச்சியாக முல்லைத்தீவின் சிங்கள படைமுகாமை ஓயாத அலைகள் என்ற படை நடைவடிக்கை பெயரிட்டு பிரபாகரன் தன் வீரம்மிகுந்த புலிச்சேனையைக்கொண்டு தாக்கி அழித்தார்.பண்டாரவன்னியனைப்போலவே ஆட்லறி பெரும்பீரங்கிகளை கைப்பற்றினார்.புலிகளிடம் வீழ்ந்த படைமுகாமை கைப்பற்ற கேணல் ரத்துவத்த தலைமையிலான சிங்களப்படைகள் அளம்பிலில் தரையிறங்கின.பிரபாகரன் வரலாற்று வழுவை திருத்த கடலிலும் புலிச்சேனையை கடற்புலிகளாக இறக்கினார்.சிங்கள படைகளை காவிவந்த ரணவிரு என்ற கப்பலை ஐந்து கரும்புலி வீரர்கள் தம்மை தற்கொடையாக்கி தாக்கியழித்தனர்.அத்துடன் வொன்றிபேக் போல மீள கோட்டையை கைப்பற்றும் முயற்சியும் புலிகளை தோற்கடிக்கும் முயற்சியும் 1996ல் அடங்காபற்றில் அன்னியர்களுக்கு வெற்றியளிக்கவில்லை.இம்முறை பிரபாகரனுக்கு வன்னிமைகள் ஒத்துழைத்தன.
இரண்டாவது பனங்கள் போத்திலையும் தீர்த்துவிட்;டேன்.ஏனோ தெரியவில்லை தாகம் அதிமாக இருக்கின்றது.எனக்கு பூனையின் மென் பாதங்களை கொண்டு இருளைபரப்பி பதுங்கும் அந்த இராட்ச மிருகத்தின் அரவம் எனக்கு தெளிவாக கேட்கின்றது.மகாவலி கரைபுரண்டு வெறிதிரள நுரை உளற முல்லைத்தீவெங்கள்தீவே என பாய்ந்துவரும் ஓசை என் இதயத்தை உலுப்புகின்றது.பனையோலைகளும் முல்லைத்தீவின் தெரியும் கானகங்களின் இலைகளும் வேர்களும் பண்டாரவன்னியனின் பிரபாகரனின் சூட்சுமங்கள் என்ன சொல் பார்க்கலாம் என்னை பார்ப்பதுபோல இருக்கின்றன.எல்லைக்கிராமங்களில் பிரபாகரனும் பண்டாரவன்னியனும் வீரபத்திரர்கள்.கொக்குளாயும் நாயாறும் கருநாட்டுக்கேணியும் வீரபத்திரர்கள் இல்லாத வலியை நன்கு சொல்லும்.அவை அர்த்தபுஸ்டியுள்ள பூர்வீகத்துடன் கூடிய கதைகளை சொல்வன.மணலாறு இப்பொழுது யாருக்குச்சொந்தமாய் இருக்கின்றது.அந்த உரிமையை பண்டாரவன்னியனும் பிரபாகரனும் ஆழமாக மீண்டும் எழுதிவைத்தார்கள்.எல்லைக்கிராமங்களில் ஈழத்தமிழர்களின் கலாச்சார உடை சண்டிக்கட்டு.பசீலனும் அன்புவும் பால்ராஜ்யும் போர்க்கும் சண்டிக்கட்டின் மைந்தர்கள்.வரட்டும் பார்க்கலாம் என்று எல்லையில் இருந்து உறும ஒரு மிருகம் இல்லாத காடாயிற்று ஆயிற்று முல்லைத்தீவின் கானகம்.
சில வாரங்களின் முன் இணையச்சேதி ஒன்றில்
ஜெகான் பெரேரா மனம் திறந்து சிங்கள வரலாற்று புனைவான குமாரோதயா என்ற துட்டகைமுனுவின் கதையை நினைவுபடுத்தியிருந்தார்.சிறுவனான துட்டகைமுனு முடங்கிக்கொண்டு தூங்குகிறார்.நீட்டி நிமிர்ந்துபடு என அவனது தாயார் விகாரமாதேவி சொன்னதும்.எனக்கு அது இயலாது வடக்கில் தமிழர்கள் இருக்கிறார்கள்.தெற்கில் பெருங்கடலும் இருக்கிறது என்கிறான் துட்டகைமுனு.நான் பெரியவனானதும் தந்தைபோல கோழையாக இருக்காமல் வடக்கில் போய் தமிழர்களை அழிப்பேன் என்கிறான்.அதற்கு விகாரமாதேவி அப்படி செய்யாதே மகனே ஏனெனில் வடக்கிலுள்ள தமிழர்கள் மிககுரூரமானவர்கள் என்கிறார்.
அவர்கள் வரலாற்றில் கூறியதுபோல ஈழத்தமிழர்கள் பிரபாகரன் குரூரமாக இல்லாது
இருந்ததும் ஒரு தவறுதான்.அவர்களின் வரலாற்றில்; சொன்னதுபோல தமிழர்கள் குரூரமானவர்களாக இருந்திருந்தால் எமது எல்லைகள் எல்லைகளாக இருந்திருக்கும்.கொழும்பு இராவணபுரமாக இருந்திருக்கும்.
No comments:
Post a Comment