எனது பயணத்தில் ஏன் எமது பயணத்தில் என்றாலும் பரவாயில்லை.கூ இஸ் த பிளாக் சீப் பல தடவைகள் சொல்ல மனம் எண்ணியிருக்கின்றது.அந்த வெள்ளாட்டு மந்தையில் கறுப்பாடு அது யார் யார் இப்போதும் சொல்ல எண்ணுகின்றது.யூ ரூ புறூட்டஸ் எம்மை விட்டுப்போவதாக இல்லை.
எனக்கு ஐந்தாறு வயது இருக்கும் என நினைக்கின்றேன். பைலட் பிறேம்நாத் படம் வந்த புதிது இது 1979 1980 1981 காலப்பகுதி.அன்று படம் பார்ப்பது என்றால் அது ஒரு பண்டிகைபோலத்தான்.எந்த வீடுகளிலும் எங்கள் கிராத்தில் தொலைக்காட்சிப்போட்டி கிடையாது.எங்கள் வீட்டுக்கு முன்னுள்ள வீதியால் பெண்கள் அரச உத்தியோகங்களுக்கு போவதை பார்ப்பது அரிது.அநேகமாக ஆண்கள்தான் துவிச்சக்கர வண்டிகளில் சென்றார்கள்.மிக உயர்ந்த வாகனம் அதுவாகத்தான் இருந்து.ஊருக்குள் ஓரிரண்டு மோட்;டார் சைக்கிள்கள் நின்றன.அதிலும் ராசையா அண்ணன் என்று அழைக்கப்படுகிற மீன் வியாபாரம் செய்யும் அவரிடம் ஒரு ஊரையே கூப்பிடுகிற கொண்டா ஒன்று நின்றது.அதிகாலையில் மீனுக்கு செல்லும் அது ஸராட் செய்யும்போது இரத்தினபுரம் எழுந்துவிடும்.கிபிர் போவதுபோல வீதியால் அது போகும்.ஊருக்குள் ஒரிரு கார்களும் ஏபோட்டி ஒண்டு முத்தையர் வீட்ட நின்றது.மற்றது ராசையா அண்ணன்ர மகன் ராசா அண்ண வைத்திருந்தார்.அது தங்க ரதம் போலவே இருந்தது.பாடசாலை விட்டு நடந்துவருகிறபோது அந்த தங்க ரதத்தில் நானும் நண்பர்கள் ஏற அரிதான வாய்ப்புக்கள் கிடைத்தது.உள்ளே வாசனை நெஞ்சை அள்ளும் எனக்கு பின்னாளில் கொலோன் வாங்கி கமக்கட்டுக்குள் சேட்டில் அடிக்க வேணும் எண்டு தூண்டியதில் இந்த காருக்கும் என் காதலிக்கும் பாதிபாதி பங்குண்டு
80ம் ஆண்டு என்னுடைய பிறந்த நாளுக்கு பைலட் பிறேம்நாத் படம் பார்ப்பதாக எங்கள் வீடு முன்வீடு அயல்வீடு முடிவெடுத்தது.சொன்னது போல பண்டிகைதான் என்பிறந்த நாளல்ல படம் பார்ப்பது.அதாவது கிளிநொச்சியில் கரடிப்போக்கில் இருந்த ஈஸ்வரன் தியேட்டரில் படம்பார்ப்பது.ஈஸ்வரன் தியேட்டர் எங்கள் வீட்டில் இருந்து ஒரு ஐந்தாறு கிலோ மீற்றரில் இருந்தது.திருவையாறுக்குப்போகும் வீதியில எங்கள் வீடு இருந்து.கிளிநொச்சி பட்டணத்துக்குப்போகும் எங்கள் செம்மண்வீதியில் அநேகமாக காடுகள்தான் காட்டோரமாக இராமசாமி அண்ணன் வீடு. இராமசாமி அண்ணன் வீடும் அது காட்டோர இயற்கையோடு இருப்பதும் எனக்கு மனதில் ஒரு சிலிர்ப்பை தரும்.இராமசாமி வீட்டில் நான் இருந்தால் என்ன என மனம் ஆவல்படும்.ஆனால் மழை காலத்தில் வெள்ளத்தில் இராமசாமியின் வீடு அரைவாசி மூழக்கிவிடும்.அவர்கள் எல்லோரும் வீடுக்கூரையில் ஏறியிருப்பதும் தண்ணீர்வடிய இறங்குவதும் அவர்களின் மாரி கால வாடிக்கையாகவும் எனக்கு அது வேடிக்கையாகவும் இருந்தது.
எனது வீட்டில் இருந்து கிளிநொச்சி பட்டணத்துக்கு போகும் பாதை மிக அழகானது பசுமையானது.எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கின்றது.போகிற வழியில் இருந்த தூக்கணாங்குருவி கூட்டுமரம்.அந்த மரம் நிறைய காலமாக இருந்தது.நான் இளைஞர் ஆகும்வரையும் தூக்கணாங்குருவிகளின் கூடுகளும் அவை முட்டையிடுவதும் குஞ்சுகள் வளர்ந்து பறப்பதும்.அவை கூடு கட்டுவதும்.சந்ததி சந்ததியாக அவை அந்த மரத்தில் இருந்தன.இடப்பெயர்வுகளின் பின் அந்த தூக்கணாங்குருவிகளை என்னால் காணமுடியவில்லை.இன்றும் எனக்கு மனவருத்தமாக இருக்கின்றது.சில வேளை அகதி வாழக்கையின் போது என்னை தினமும் பார்த்துப்பழகிய
தூக்கணாங்குருவிகள் என்னைக்காணாமல் தேடிதேடி எங்கேனும் புலம் பெயர்ந்து போய்விட்டனவோ என நினைக்கின்றேன்.
என்;னுடைய பிறந்த நாளில் 1980 என்னில் பாசமுள்ள அயல்கள் எல்லாம் திரண்டு பைலட் பிரேம் நாத் படம்பார்க்க புறப்பட்டது.போகிற வழிகள் அழகானது.பிரதான வீதியில் ஏறினால் கரடிப்போக்கு மட்டும் வரிசையாக ஒளிரும் மின்விளக்குகள்.அது கண்கொள்ளாக்காட்சி.
கட்டிடக்காடுகள் அல்லாமல் காடுகளில் இருந்து சில் வண்டுகளின் ஓசையும் இனிமையான சில்லென்ற காற்றும் என்னுடைய பிறந்தநாள் பனிக்காலத்தில் என்பதால் பனிக்குளிரும்
நடைக்கு இதமாக இருக்கும்.மாலைவேளையில் பஸ் ஸ்ராண்டில் இருந்த சாப்பாட்டு;கடைகளில் போடப்படும் கொத்து ரொட்டியின் வாசனை இன்றுவரை தேடியும் கிடைக்காதது.அந்தக்கொத்து ரொட்டிகளின் சுவைக்கு நிகரில்லை.வருடத்தில் என்றாவதுஅந்தக் கொத்து ரொட்டி சாப்பிட வாய்ப்புக்கிடைக்கும்.அந்தக் கொத்து ரொட்டிகளை கையெடுத்து வணங்கலாம்.
கமலா ஸ்ரூடியோவில் படம் எடுத்தார்கள் என்னை ஒரு கூடையில் இருத்தி பின்னே எல்லோரும் நின்று.ஓ வென்று அழுதுவிட்டேன்.கமரா லைற் எல்லாம் என் உயிரை எடுக்கப்போவதாக நினைத்தேன்.பின்னாளில் அந்த கமராக்களுக்கு முன்னும் உயர் ஒளி அமைப்புக்களுக்கு முன் நின்றும் தினமும் தமிழ் தேசியத்துக்காக வணக்கம் சொல்வதே வாடிக்கையாகும் என்பதை நான் எண்ணியதில்லை.நடந்துவிட்டது அந்த வரலாற்று பேறு.
ஈஸ்வரன் தியேட்டர் கிளிநொச்சியில் புகழ்பூத்த திரையரங்கு கரடிப்போக்க சந்தியில் இருந்தது.சுற்றிலும் வயல்கள்.முன்னே வாய்க்கால் குளிர்மை.அருகில் கோட்டல் காகங்கள் மின்சார கம்பிகள் அணிவகுத்திருக்கும்.ஈஸ்வரன் தியேட்டர் முகப்பில் சிவாஜி கணேசன் சிரித்துக்கொண்டிருந்தார்.மாலினி பொன்சேகா சிறீதேவி அசோகன்.....கூடவே.அதை பார்ப்பதே ஒரு அலாதி இன்பம்.அந்தக்கட்டவுட்டுகள் மனசை விட்டு அகல்வதாயில்லை.
கிளிநொச்சியில் பராசக்தி தியேட்டர் பன்னங்கண்டி வீதியில் இருந்து அதில் சுவரில்லா சித்திரம் பார்த்த நினைவு.சண்முகா தியேட்டரில் அலாவுதீனும் அற்புத விளக்கும் பார்த்ததாக நினைவு.சண்முகா தியேட்டரின் பின் புறமாக ரயில் வீதி படம்போகும்போது ரயில்போனால்தியேட்டர் கழன்று விழுவதுபோல இருக்கும் அலாவுதீனும் அற்புதவிளக்கும் கிளிநொச்சி கனிஸ்ட் மகா வித்தியாலயத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பாடசாலையாக கூட்டிச்சென்றார்கள் வெள்ளை சீருடையுடன் இருந்து படம்பார்த்தோம்.பின்னாளில் (1994) க.பொ.த உயர்தர பரீட்சை நடந்துகொண்டிருந்தது. எக்கெனமிக்ஸ் பாடம் எழுதிவிட்டு நானும் சசியும் இவர் தற்பொழுது அதிபராக இருக்கின்றார்.குட்டி அண்ணையின் வெண்ணிலா தியேட்டரில் சரத்குமாரின் கட்டப்பொம்மன் படம் பார்த்தோம்.பிரியா பிரியா பாட்டை வாங்கி வந்தேன்.....வகுப்புக்களில் படம் பார்க்கிற சந்தர்ப்பம் குறைவாக கிடைக்கிற எங்களுக்கு படம்பார்த்துவிட்டு கதை சொல்கிற கதை சொல்லிகள் சிலர் இருந்தார்கள் ஒருவர் சசி மற்றவர் உதயகுமார் மலையகத்தில் கல்விப்பணிப்பாளராக இருக்கிறார்.வகுப்பு தோழர்கள்.
தியேட்டருக்கு போக முடியாதவர்களுக்கு கிராமத்தில் எஸ்ஆர் தான் தஞ்சம் எஸ் ஆர் என்பவர் கிளிநொச்சியில் 80களில் பெரிய ரிவி வைத்திருந்தார்கள்.அவர்கள் ஊர் ஊராக சென்று ஒரு காணியில் ரிவியில் படம் போடுவார்கள் ஒன்றல்ல மூன்று படம் விடியும்.சுத்தி படங்கு கட்டி கீழ படங்கு விரிச்சு ஆண்கள் ஒரு புறமாகவும் பெண்கள் ஒரு புறமாகவும் இருந்து பார்க்கிற காலம்.எங்கள் கிராமத்தில் ஜோசப் வீட்டுக்காணியில் படம் ஓடும் ரிக்கற்தான்.அதுக்காக எஸ்ஆரின் கார் ரிவியையும் ஏற்றியபடி ஊர்முழுக்க இன்று ஜோசப் அரங்கில் முத்தான மூன்று திரைப்படங்கள் ஸ்பீக்கரில் அறிவிப்பார்கள்.ஊரே பரபரப்பாக இருக்கும். அந்த ஸ்பீக்கரில்தான் இது ஒரு பொன் மாலைப்பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் என்ற பாட்டை பெரிதாக கேட்டேன் இன்றுவரை நெஞ்சில் குடியிருக்கும் பாடல்....
தியேட்டரில் பெரிய திரையில் நான் பார்த்த முதல் படம் பைலட் பிறேம்நாத் 1980ம் ஆண்டு.இந்தப்படம் இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பு மாலினி பொன்சேகா என்ற இலங்கை நடிகை ரிஎம்ஸின் காந்தக்குரலின்நடனம் என்பதெல்லாம் பின்னாளில் எனக்கு தேடல் வந்த பருவத்தில் அறிந்த விடயங்கள்.அந்த சின்னவயதில் பைலெட் பிறேம் நாத்தில் நான் வாங்கிக்கொண்டது சிவாஜியின் கூ இஸ் த பிளாக் சீப் ?... இலங்கையின் இளங்குயில் என்னோடு இசை பாடுதோ...... அழகி ஒருத்தி இளனி விக்கிற கொழும்பு வீதியிலே..... இவைதான் எனக்கு எப்பொழுதும் குடியிருந்தன.பின்னாளில் சங்கரின் எந்திரினில் பிளாக் சீப் பிளாக்சீப்....ரஜினி தன்னுடைய ஸரைலில் பேசக்கண்டேன்.
பைலட் பிறேம்நாத் படம் பார்த்துவிட்டு என்னை இனி அசோகன் என கூப்பிட சொன்னேன் என்ன ஆச்சரியம் சத்தியமாய் என்னை என்னூர் அயலார் ஊரோ அசோகன் என்றே கூப்பிடத்தொடங்கியது.முன் வீட்டு ஈஸ்வரி அக்கா கனகம்மா சாந்தி அக்கா சுவர்ணா அக்கா அருமை அண்ணை...இப்பொழுதும் எனது கிராத்தில் பல பேருக்கு எனக்கு என் அப்பா அம்மா வைத்த பேர் தெரியாது.அவர்களுக்கு தெரிந்தது அசோகன் பின்
பொன்.காந்தன்....என் சொந்தப்பெயர் எது நானே கேட்டுக்கொள்கின்றேன்.இப்பொழுதும் கிராத்தில் கடை வைத்திருக்கும் அருமை அண்ணை அசோகன் என்று அழைக்கும்போது மிகவும் உரிமையுடன் மண்வாசத்துடன் பசுமையான நினைவுகளுடன் திரும்பிப்பார்க்கின்றேன்.பொன்.காந்தனிடம் வறண்டுபோன நினைவுகளும் உண்டு.அசோகனிடம் எண்ணற்ற பசுமையான நினைவுகள்....இப்பொழுது நான் சிவாஜி போல ஆனால்.....கூ இஸ் த வைற் சீப் என்கிறேன்!
No comments:
Post a Comment