Friday, October 19, 2018

இந்த மண்ணில்தானா அந்த கந்தக கடவுள்கள் கருத்தரித்தனர்!! -பொன்.காந்தன்




எல்லாவற்றையும் நினைத்துப்பார்க்கும் போது அருவருக்கின்றது
இந்த மண்ணில்தானா
அந்த கந்தக கடவுள்கள் கருத்தரித்தனர்
இவர்களுக்காகத்தானா
அந்த இளமையின் இரகசியங்கள் இனிய கனவுகள் எல்லாவற்றையும்
கடாசி  எறிந்துவிட்டு காற்றாகினர்
விட்ட இடத்தில் இருந்து தொடங்கி
வெட்கித்ததலைகுனியும்படி களவெடுக்கவும் கற்பழிக்கவும்தானா
அந்த தற்கொடை வள்ளல்கள் விடைபெ;ற்றனர்
கல்லிடித்து காயப்பட்டவனெல்லாம்
செல்லடித்த சிதறல்பட்;டு சிந்தினேன் குருதியென்று
ஊரை ஏமாற்றும்போது
தேதி குறித்து சென்று உயிரை படைத்த உத்தமர்களை
எந்தச்சிகரத்தில் ஏற்றி உரக்கப்பாடுவேன்
கப்பூது வெளியில் பேய் உலாவகண்டேனென
பிரமையில் கிடக்கிறது ஒரு கூட்டம்
நானும்தான் கண்டேன்
வல்லை வெளிவானில்
மண்ணில் வீழ்ந்த கண்மணிகள்
வண்ண தேரொன்றில் தோன்றி
என் கண்ணிருந்து மறைந்தாரே
இன்று நினைத்தாலும் மில்லரின் புறப்பாட்டில்
மேனி சிலிர்க்கின்றது
என்ன பிறவி அவன்
சிற்றின்ப வாழ்வில் அவனொத்தவர்கள்
மூழ்கி முத்தெடுக்கையில்
போகிறேன் என்றானே
புல்லரிக்கின்றது
சாவை அல்லவா பன்னீர்தெளித்து  வரவேற்றான்
எத்தனை பாசம் இந்த மண்மீது அந்த மகத்தான பிறவிக்கு
பிறகு எத்தனை கற்பனைக்கெட்டாத காவியங்கள்
கறுத்தவரியோடு களத்தினில் குதித்தார்கள்
அங்கயற்கன்னிக்கு என்ன
கட்டழகை காட்ட கெட்டப்புக்களை மாற்றி
காற்று வாங்க கசூரினா போகத்தெரியாதா என்ன
முற்றுத்துறந்த முனிபுங்குவமாயா மண்ணில்வந்தாள்
அந்த மாவீரி
கச்சான் விற்கும் ஒரு தாயின்வயிற்றில் வந்தாள்
காலத்தை உணரும் கோலத்தை உடுத்தாள்
கண்ணிலொற்றும்படி தன் கடமையை செய்தாள்
எங்கள் மண்ணின் பேரழகியின் பெயர்தான் அங்கயற்கண்ணி
கொற்றவைகள் கொழுந்துவிட்டெரிந்து
குலத்தைக்காக்க உயிர்விட்ட மண்ணில்தான்
பியர் அடித்துவிட்டு தெருவில் தடுமாறும்
தேவதைகளின் பெருமைகள் அரங்கேறுகின்றது
எத்தனை பெருமானார்கள் இன்றுவரை முகமும் முகவரியும்
உனக்கும் எனக்கும் எதிரிக்கும் கூட தெரியாமல்
உயிரை படைத்துவிட்டு காற்றிலுறைகிறார்கள்
நினைக்கும்போது நெஞ்செரிகின்றது
சலம்விட்டாலே அறிக்கைவிடும்
ஆலவட்டங்களோடு அலையும் எங்கள்
ஆஸ்கார் நாயகர்களுக்கு மத்தியில்
சரித்திரத்தைக்கூட எழுத முடியாதபடி
சாதித்துவிட்டுப்போய்விட்ட சந்தணங்களை எப்படியுரைக்க
வாளெடுத்து தனக்குத்தானெ கீறி விளையாடுகிறது
நாறிப்போய்விட்ட நம் சமுகம்
காறி உமிழ்கிறான் எதிரி
பிரபாகரன் இந்த பேய்க்குஞ்சுகளை எப்படி
கட்டுக்குள் வைத்திருந்தார் என்று விழி உயர்த்துகிறது உலகம்
யாழினி என்றொருத்தி இருந்தாள்
மாங்குளக்காடுகளில் வீசும் காற்றை சுவாசித்துப்பாருங்கள்
பூவின் இனிதும் புயலின் வலிதும்
உங்கள் இதயங்களில் ஒருங்கே சங்கமமாகும்
தாய்வழிச்சமுகத்தின் தலைமைத்துவம் பற்றி
வாழ்கின்ற நாட்களில் நாம் நேரிலேயே பார்க்கும் பேறுபெற்றோம்
இன்று கட்டிவைத்து எங்களுர் காவாலிகள் கற்பழிக்க
கையாலாகாதவளாய் ஆகிற்றாளே என நினைக்க வலிக்கிறது மனம்
வெட்டி எறிய வேண்டமா அந்த வேதாளங்களின் ஆண்குறிகளை
பச்சைப்பாலகியின் மேனியில் என்னத்தை தேடுகின்றது
கஞ்சா உண்ணும் களுசறைகள்
அம்மாவிடம் தங்கச்சியிடம் இல்லாத ஒன்றையா
கொண்டு திரிகின்றார்கள் ஒன்றுமறியா சின்னஞ்சிறுசுகள்
இந்த இளவுகளுக்காகத்தானா
இத்தனை உயிர்களை உயிராயுதமாக்கி உவந்தளித்தார்கள்
வட்டாரத்தேர்தல்களில் தங்கள் வாரிசுகளை இறக்கி
காவியம் எழுதுகின்ற
எங்கள் தாயகத்தின் தடுமாற்றங்களுக்கு
ரங்கனை தெரியுமா டாம்போவை தெரியுமா
அந்த ஆவிகளின் இலட்சியத்தின் ஆழம்தெரியுமா அழகு தெரியுமா
காந்த ரூபர்களின்
கனவின் வியாபகத்தை விளக்க முடியுமா
சத்தியத்திற்காய் சாகத்துணிந்து மட்டற்ற மகிழ்ச்சியோடு
உயிர்கொடுக்கப் புன்னகைத்த சத்திய வேந்தர்கள்
சாதித்து உறைந்த மண்ணில்
பதவிக்கும் பட்டாபிசேகத்துக்குமாய் முட்டிமோதுகின்றன ஒரு கூட்டம்
காட்டிலும் மேட்டிலும் களத்திலும் சாவினை அணைக்க துணிந்து
ஆண்டு பத்தாய் இருபதாய் போராடிய ஒருவனை
உயர்ந்த அரியாசனத்தில் வைத்து அழகுபார்க்கும் எண்ணம்
பதவி முதலைகளின் இதயத்தில் ஒரு துளியும் கிடையாது
கரும்புலிகளை ஈன்ற இல்லத்தில் இருந்து
ஒரு இளவலை அழைத்துவைத்து
இத்தேசத்தை நிர்வகி என கூறும் நெஞ்சங்கள் உள்ளனவா
ஈகைச்சுடரேற்றவும் புத்தக வெளியீட்டில் முதற்பிரதி வாங்கவும் என
மாவீரர் குடும்பங்களை மட்டுப்படுத்தியே
எங்கள் புதுகணக்கை தொடக்கி வைத்துள்ளார்கள்
தேர்தல் மூலதனமாக்கி தன்மானம் தலைவர் பிரபாகரன்
ஈகம் செய்தவர்களை மூட்டை கட்டி வைத்துள்ளார்கள்
பருவம்வரும்போதெல்லாம் தெருவெல்லாம் விதைக்கிறார்கள்
தேவை முடிந்தவுடன்
தமிழர் கதை முடித்தவனுடன் கைகோர்த்து பதவிபிடிக்கிறார்கள்
போராட பதவி எதற்கு
இதைத்தானே சேகுவராவும் பிரபாகரனும் யாசீரும்
இவர்களில் வழியில் விதைந்தவர்களும் எடுத்துரைத்துள்ளார்கள்
போர்க் வெடித்த இடத்தை கடக்கும்போது
அந்த வீதியின் நடுவே இப்போதும் ஒரு பள்ளம் இருப்பதுபோல ஒரு பிரமை
தார்பூசி அந்த தடங்கள் மறைக்கப்பட்டாயிற்று
கறுத்த கருங்காலியாய் சரித்திரம் படைத்த சேமமடுவானை
வாகனத்தை  விட்டு இறங்கி இன்றெவர் வணங்கியதாய் பதிவு உண்டு
வானேறிச்சென்று எதிரிகளின் வயிற்றை கலக்கிய
எங்கள் கருவண்ணர்களைவிட எவரிங்கு பெரியர்
வானேறிபறத்தல் என்ன சாதாரண சம்பவமா
அதுவும் இரணைமடுவிலும் பொக்கணையிலும்
பொட்டல் வெளிகளிலும் இருந்து புறப்பட்டுபோய் புல்லரிக்கச்செய்ய
எத்தனை தவம் செய்தார்கள் கற்றார்கள் காவியமானார்கள்
அந்த வித்தகர்கள்
இன்றைக்கு மண்டைக்குள் ஒரு மசாலாவும் இல்லாமல்
அலையும் சதத்துக்குதவாதவர்களை கல்லில் கட்டி கடலில் போட்டால் என்ன
கஞ்சாஒழிக்கவும் கற்பழிப்பை தடுக்கவும் கள்ளர்களை பிடிக்கவும்
இப்போது பலருக்கும்  புலி தேவைப்படுகின்றது.

யார் புலி நேற்று யார் புலி யார் கரும்புலி  யார் கடற்புலி யார் வான்புலி
யார் பெண் புலி நீ நான் அவன் அவள் நாம்தானே
எங்கே புலியை தேடுகிறீர்கள் வேடிக்கையாய் இருக்கிறது
விரித்துப்படி வரலாற்றை
வெடிக்கச் சித்தமான ஒவ்வொரு வேங்கையின் வாழ்க்கையின் நாட்களை
தேடிப்படித்துப்பார்
உனக்குள் இருப்பது பூனையா கழுதையா பூச்சாண்டியா என்ற ஞானம் பிறக்கும்!!



No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...