இது எனது சுயபுராணம்தான்.எனினும் எழுத வேண்டியதாயிற்று.இந்த எழுத்துக்களை எழுதுவதற்கும் பேசுவதற்கும் எனக்கு என் தாய்மொழியையும் சிந்தனைகளையும் அறிவித்தவர்களையும் நினைவுபடுத்தஇப்பொழுது எனக்கு
வசப்படுகிறது என நினைக்கின்றேன்.இதில் பல எனது நண்பர்களும் எனது ஊர்தெருக்களும் அந்த மனிதர்களும் மட்டும் உணரக்கூடியன.பாலர் பருவத்தில் அகரத்தை அறியச்சென்ற நாட்களில் அந்த குச்சொழுங்கைகளில் பூநாறி மரங்கள் அடர்ந்திருந்தன.பூநாறியின் மலர்கள்அழகானவை.நாயுண்ணிபோல இருக்கும் அதன் பழங்கள் இருப்பதால் அதை நாயுண்ணி பழம் என்று அழைக்கப் ப ட்டது.அப்பழங்களை உருவிச்சுவைக்கும் பழக்கத்தை அத்தெருக்கள் எனக்கு கற்றுத்தந்தன.நாவல் பழத்தையும் பாலைப்பழத்தையும் சூரைப்பழத்தையும் புளிய மரத்தையும் கண்டவுடன் கல்லெறியத்தூண்டுவதையும் நின்று ரசித்து நண்பர்களோடு சுவைக்க வைப்பதுமான பழக்கம் இந்த பூநாறித்தெருக்களில் ஆரம்பித்தன.பூநாறி மரம் கூட எனக்கு ஒருவகையில் ஆசான்தான்.பூநாறியின் நினைவுகள் இன்றுவருவதுபோல அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருக்கும் அதிலொரு சந்தர்ப்பம்.வெற்றிலை இல்லாவிட்டால் கப்பல் கவிண்டதுபோல இருக்கும் வெற்றிலைப்பிரியர்களுக்கு முள்ளிவாய்க்கால் நோக்கிய போர்க்கால பயணத்தில் இந்த பூநாறி இலைகள் வெற்றிலைகளாகவும்
மாறியிருந்தன.ஏன் அதற்கு விலையும் இருந்தது.
பாலரில் எங்கள் வீட்டுக்கு அருகாக ஈசுவரி அக்கா வீட்டின் வேலியோடு போய்கொண்டிருந்த குச்சொழுக்கையில்தான் சங்கரப்பிள்ளை வாத்தியார் வீடு இருந்தது.சங்கரப்பிள்ளை வாத்தியாருக்கு அப்பொழுதே பேரப்பிள்ளைகள் இருந்தார்கள்.அவர்களுக்கு அவர்தாத்தாவாக இருந்ததால் எங்கள் வீட்டிலும் தாத்தா என்றே அழைக்கப்பட்டார்.தாத்தாவிடம்தான் என் அகரவரிசை செப்பினப்பட்டது.தாத்தாவீட்டில் ஒரு மைனா வளர்தார்கள்.அந்த மைனா கதைக்கும்.படிக்காதவர்களை அந்த மைனா கொத்தும் என்பதுதான் அன்றைய தாத்தாவின் மிரட்டல்.இதனால் அடிக்கடி மைனாவிற்கு பயந்து ஒழுங்கையில் வீட்டில் வெளிக்கிட்டு வந்து பூநாறிக்குள் ஒழித்திருந்துவிட்டு பின் திரும்பி ஒளித்த களைப்பில் பூநாறி இலைகளும் பூக்களும் தலையில் தடயங்களாக காவிக்கொண்டு வீட்டில் பொய்கள் அம்பலமாகி தண்டனைகள் கிடைத்ததுண்டு.பிறகு எனது பாலர் பருவ காலத்திலேயே அந்த வெள்ளை நாசனலும் வெள்ளை ஜிப்பாவுமாக தோன்றும் சங்கரப்பிள்ளை தாத்தா வயோதிபத்தில் இறந்துபோனார்.இறப்பதற்கு முன்னான நாட்களில் தாத்தா எனக்கு கொடுத்த வாய்மொழி சான்றிதழ் என்னை படியாதவனும் கிடையாது ஒளியாதவனும் கிடையாது என்பதுதான்.பின்னாளில் அவரின் வாசகம் பொய்த்திருக்கலாம்.அது எனது துரதிஸ்டம்.அது பொய்த்திருக்கக்கூடாது.
1981ம் ஆண்டு நான் கிளிநொச்சியில் குளத்தடி பாடசாலை என்று
நாம் அன்றழைத்த கனிஸ்ட மகாவித்தியாலயத்தில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன்.உண்மையில் அது எனது பொற்காலத்தின் ஆரம்பம் என்பதை பின் னாளில் நானுணராது போய்விட்டது எனது தவறு.அப்பாடசாலையில் இரண்டாவதாக
வெள்ளை நாசனலும் ஜிப்பாவுமாக இன்னொருவரை கண்டேன்.அவர்தான் அப்பாடசாலையின் அதிபர் அவருக்கு நாம் வைத்திருந்த பட்டம் மூக்குப்பேணி.அவருடைய மூக்கு மிக நீளமானது.மெல்லியவர்.அதிபர் தோரணைக்கு ஏற்ற மிடுக்கு அவருடையது.கையில் பிரம்பு இருக்கும்.நடுவகுடெடுத்து தலைமேவி இழுத்திருப்பார்.அதிபரின் அலுவலகத்தை கடந்துதான்
கிணற்றடிக்குப்போகவேண்டும்.கடக்கும்போது மாணவர்களுக்கு இருக்கும் பயபக் த்தியை சொல்ல வார்த்தை இல்லை.அவரின் முன்
அன்றைய உயர்தர வகுப்பு மாணவர்கள் நின்று கதைக்கும்போது அம்மாணவர்களின் கண்களில் கைகளில் வார்த்தைகளில் இருந்த கண்ணியத்தையும் பக்குவத்தையும் எனக்கு சொல்லவார்த்தை இல்லை.அக்காலத்தில் அதிபருடன் கதைத்தால் நாட்டின் ஜனாதிபதியுடன் கதைத்த மகிழ்ச்சி மாணவர்களின் முகத்தில் இருப்பதையும் அதிபர் தம்மோடு கதைத்ததை தங்கள் தாய்தந்தையருக்கு பெருமையோடு அம்மாணவர்கள் கூறுவதையும் நினைத்துப்பார்க்கின்றேன்.பின்னாளில் ஏகே ராஜேந்திரம் அவர்கள் 80களின் நடுக்கூறாக இருக்குமென நினைக்கிறேன்.கிளிநொச்சி நகரத்தில் இருந்த படைமுகாமை போராளிகள் தாக்கிய நாட்களில் போர்க்களமாகிவிட்ட பொழுதில் அப்பகுதியில் தனது பாடசாலையை விட்டு
போகமனமில்லாது தங்கியிருந்த ஏகே ராஜேந்திரம் அவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணித்து அவரது மரணத்தை நாலைந்து நாட்களின் பிறகு காகங்களே அறிவித்தன.பிறகு இறந்த இடத்திலேயே அவர் ஊர் மக்களால் எரிக்கப்பட்டதாக நினைவுகள் சொல்கின்றன.எனக்கு அவர் கையால் தவணைப்பரீட்சைகளின்போது எல்லா மாணவர்களின் மத்தியிலும் கிடைத்த தேர்ச்சி அறிக்கைகள்தான் இன்றுவரைபொற் காலத்தின் நினைவுப்பொக்கிசங்கள்.அவை அகதியாய் நான் அலைந்த நாட்களில் தவறுண்டு எங்குபோயிற்றோ.
எனக்கு ஓரளவேனும் சந்தங்கள் சீர் தளை தொடை அடிகள் வர முனைகின்றதெனில் அதற்கு என்ன காரணமாயிருக்கும் என தேடிப்பார்க்கின்றபோது எனக்கு கனிஸ்ட மகாவித்தியாலயத்தின் முற்றத்தில் நின்ற மிக பெருத்த பலாமரம்தான் நினைவுக்குவரும்.அதில் ஒருவகுப்பு நடைபெறும் நிலத்தில் இருந்து சிறுவர்களான நாம் ஆசிரியரை சுற்றி இருந்து கற்ற பாடம் இனிமையானது.அப்பொழுதுகளில்தான் அச்சிறிய கவிதையை சோதிநாதன் ரீச்சர் வாயிலாய் கேட்டேன்.அக்கவிதை (பாடல்) இதுதான்
முட்டை ஓட்டை கொத்தினேன்
முகத்தை வெளியே நீட்டினேன்
பட்டென அம்மா கொத்தினா
சட்டென வெளியே வந்தேன்
இப்பாடலும் என்னை கவிஞனாக்கி பார்க்க கனவு கண்டிருக்கலாம்.சோதி நாதன் ரீச்சர் மறைந்துபோய்விட்டார்.இந்நாளிலும் அருக்கு என் அஞ்சலிகள்.
கொழுத்த பலா முற்றத்தில்
கொடுத்த பாடல் தொட்டதில்
அடுத்துக் கவிதையானேனோ
அந்த நாளை மறப்பேனோ
80களில் என் நினைவுக்கு என்றும் இனிமையாய் இருக்கும் அதிபராலும் ஆசிரியர்களாலும் நிறைந்த கனிஸ்ட மகா வித்திலாயத்தின் முன்னே மலைவேம்புகள் பாதையில் இருமருங்கிலும் அடர்ந்திருக்கும்.அது மிக உயர்ந்த மரங்கள்.எங்களால் பம்பரக்காய் மரங்களாகவே அவை பார்க்கப்பட்டன.பாடசாலைக்கு வரும்போதும் விட்டுபோகும்போதும் அந்த மரங்களில் காய்த்திருக்கும் பம்பரங்களில் கண்ணிருக்கும்.விழுந்திருக்கும் பம்பரங்களை பொறுக்கிச்சென்று இடைவேளைகளில் பாடசாலை வகுப்பறை
சீமேந்து நிலத்தில் பம்பரப்போட்டிகள் நடத்துவோம்.பம்பர மரங்கள் இலையுதிர்காலத்தில் நிலத்தை அழகுபடுத்தியிருக்கும்.இலைதுளிர்காலத்தில் நிழலையும் மரத்தையும் வானத்தையும் என் மொத்தத்தில் என் மனதையும் அழகுபடுத்தியிருந்தியிருந்து.இந்நாட்களில் உறுப்பெழுத்துப்போட்டியொன்றில் எனக்கு மாவட்ட மட்ட சான்றுகிடைத்தது.அச்சான்றிதழ் பச்சை நிற மட்டையாக இருந்தது.அடியில் எம்.எம்.மன்சூர் என்பவர் கையொப்பமிட்டிருந்தார்.அதை ஒரு காலைப்பிரார்த்தனையில் ஜே.எம்.பி.ஜெயராஜா என்ற அதிபர் தந்தார்.இத்தோடு முற்றிற்று அப்பள்ளியின் ஒருபகுதி நினைவுகள்.உறுப்பெழுத்து நல்லதாய் உள்ளவர்களுக்கு தலையெழுத்து சரியாய் அமையாது என்பார்கள் உண்மைதானா!
இதன் பிறகு போர் நாட்கள் அலைந்தேன்.கரவெட்டி மாணிக்கவாசகரில் கற்றேன்.சிவகாமி ரீச்சரிடம் படித்தேன்.கரவெட்டியின் அத்துலு வயல் வெளிகளிலும் நல்ல தண்ணிக்கிறுகளை சுற்றியும் பனந்தோப்புகளிலும் சில காலம் ஓடிற்று.கரவெட்டி நிலத்தின் சூழலும் வரலாறும் கல்விக்கான பெருமையும் எனக்குள் ஊற்றுக்களை திறக்க முனைந்தபோதும் மீண்டும் கிளிநொச்சியின் குளங்களும் கானகமும் ரம்மியமும் என்னை அழைத்தது.தரம் ஐந்தில் இருந்து மேல்மாடிப்பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டேன்.அநேகமாக நகரத்தில் ஒரேஒரு மேல்மாடிப்பள்ளிக்கூடம் கிளிநொச்சி மத்திய கல்லூரி என்று பின்னாளில் ஆன கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்.இதுகலாரசனைக்கூடம்.இயல் இசை நாடகம் விளையாட்டு
காதல் மோதல் புரட்சி அனுபவங்கள் என கற்கும் அனுபவ ஆசான்களால் நிறைந்த பாடசாலையாக இது அமைந்துவிட்டது.இத்தகைய பாடசாலைக்கு எனது காலத்தில் அதிபராக இருந்தவர்சோதிநாதன்.
சோதிநாதன் ஆங்கில மொழிப்புலமையுடையவர்.உயர்ந்த தோற்றமுள்ளவர்.கையில் பிரம்பிருக்கும் அடிக்கமாட்டார்.பிரம்போடு பாடசாலையை வலம்வரும்போது பாடசாலை அமைதியாகிவிடும்.பாடநேரங்களில் ஆசிரியல் இல்லாத வகுப்புக்களில் நுழைந்து மாணவர்களிடம் பாடங்களில் சில கேள்விகள் கேட்பார்.குழப்படிகாரரை ஒரு பார்வை பார்ப்பார்.அக்காலங்களிலும் மோகனின் மெல்லத்திறந்த கதவு படத்தையும் அலைகள் ஓய்வதில்லையையும் பயணங்கள் முடிவதில்லை.புன்னகை மன்னன் இப்படி காதல் படங்களை பார்த்துவிட்டு அந்தப்பாடல்களை உச்சரித்துக்கொண்டும் அந்த நடிகர்களை போல தலைமுடியை வெட்டிக்கொண்டும் டிஸ்கோ டான்சர் அணியும் ஆடைகளைபோல சீருடைகளை தைத்து அணிந்துகொண்டு அழகிய மாணவிகளுக்கு காதல் கடிதம் வரைகின்ற பின்னால் சுற்றுகின்ற வாலிப பருவவயது மாணவர்கள் இருந்தார்கள். இந்த பருவவயது கோளாறுகளை எல்லாம் அதிபர் சோதிநாதன் மிக இலாவகமாக கையாண்டு பாடசாலையை நடத்தினார்.
அக்காலத்தில்பாடசாலை வெளி விரிந்திருந்திருந்தது.பாடசாலையின் காலைப்பிரார்த்தினையின் பின் பாடும் திறமையுள்ள மாணவர்கள் பேசும் திறைமையுள்ள மாணவர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கபட்டது.பலர் காதல் பாடல்களை பாடி சில அழகிய காதலில் வெற்றிகண்டதும் உண்டு.இதை எல்லாம் ஓரமாயிருந்து அதிபரும் ஆசிரியர்களுத் ரசித்ததும் உண்டு.சோதிநாதன் காலை பிரார்த்தனையில் பேசும்போது சில வேளைகளில்
சொல்வார் நானும் காதலித்து திருமணம் முடித்தவன்.படிக்கும் காலத்தில் அதற்கு ஒருவரையறை உண்டு என அதை புரியவைப்பார்.அவர் காலத்தில் துறைசார்ந்த வல்லமையும் ஆளுமையும் உள்ள ஆசிரியர்கள் இருந்தார்கள்.என் குழப்படிகளையும் அவர்கள் நன்கறிவார்கள்.என் குழப்படிகளை வைத்துக்கொண்டு என்னை நாடகம் கவிதை விவாதம் பேச்சு விளையாட்டு எல்லாவற்றிலும் என்னை ஆசிரியர்கள் ஈடுபடுத்தினார்கள். 1994ம் ஆண்டு என நினைக்கின்றேன்.வடதமிழீழ தமிழ்த்தினபோட்டியை தமிழீழ கல்விமேப்பாட்டு பேரவை நடத்தியது.அதில் கவிதையில் நான் முதலிடம் பெற்றேன்.எனது சக மாணவ நண்பன் உதயகுமார் பேச்சில் முதலிடம் பெற்றான்.நாடகத்திலும் நாடகமும் முதலிடம் பெற்றது.அ;த்தருணத்தில் இரண்டு வடதமிழீழ சான்றிதழ்கள் என்கையில் இருந்தது.அடியில் பின்னாளில் காணாமல் ஆக்கச்செய்யப்பட்ட பிரான்சிஸ்யோசவ் அடிகளார் கையொப்பமிட்டிருந்தார்.பின்னாளில் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் கையொப்பமிட்ட சான்று ஒன்றும் எனக்கு கிடைத்தது.எல்லாம் ஆசிரியர்களால் ஆனது.
இதே பாடசாலையில் நான் எட்டாம் வகுப்பு கற்றுக்கொண்டிருந்தபோது என நினைக்கின்றேன்.போட்டிக்கான ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்.அதை எனக்கு சித்திர பாட ஆசிரியராக இருந்த கனகமகேந்திரா நெறியாள்கை செய்தார்.எனக்கு தந்தையாக நகுலகுமார்(பின்னாளில் ஆசிரியர்) எனக்கு ஆசிரியராக சதானந்தன்(பின்னாளில் வைத்தியர்) தாயாக இளஞ்செல்வி(பின்னாளில் ஆசிரியர்)தந்தையின் மனச்சாட்சியாக கருணாகரன்(பின்னாளில் ஆசிரியர்)
இந்த நாடகத்தில் ஒரு காட்சி.
முதல்நாள் இரவு படம் பார்த்துவிட்டு வீட்டுப்பாடத்தை செய்யாமல் போய் வகுப்பறையில்அடுத்தநாள் நித்திரை தூங்குகின்றேன்.வகுப்பில் ஆசிரியர் கணக்கில் கேள்வி கேட்கிறார்.
ஒன்றும் ஒன்றும் எத்தனையென்று கேள்வி
எனது பதில்
மூன்று சேர்.ராத்திரி பாத்த படத்தில் அப்படித்தான் சொன்னது.
என்னடா படம் பாத்தனி ஆசிரியரின் கேள்வி
வாடிப்போன ரோசாவை கொண்டோடிப்போனவன் சேர்
அதை ஓடிப்போய் பார்பார் என ஆசிரியர் பிரம்பால் அடித்துவிடுகின்றார்
அழுதபடி அம்மாவிடம் முறையிடுகின்றேன்.அம்மா கோபத்தில் அப்பாவிடம் கொதிக்கிறார்.கொந்தளித்தபடி ஆசிரியடம் அப்பாவை போகச்சொல்கின்றது மனச்சாட்சி.அப்பாவை மனச்சாட்சி ஆட்டிவைக்கின்றது.
தந்தை-
தண்ணீர்பட்டால் வரும்
காய்ச்சல் என்றென் பிள்ளையை
மாதத்துக்கு ஒரு தடவைதான்
குளிக்க வாக்கிறனான்
ஆசிரியர்-
செல்லம் நீர் இப்படி
பிள்ளைக்குக் கொடுத்தால்
எப்படி நாளை
நிமிர்ந்தவன் நிற்பான்
தந்தை-
செப்படி வித்தைகள்
எனக்கிப்ப வேண்டாம்
செருப்பால அடிப்பன்
கதையினி வந்தால்
இப்பிடி இனிமேல்
நடந்திது எண்டால்
இருக்குது என் கத்தி
இப்ப நான் வாறன்
அந்நாடகத்தின் முடிவு அதில் ஆசிரியர் சொன்னதுபோல செல்லம் குடுத்த பிள்ளை நான் வாழ்வில் சீரழிந்ததாக அமைந்தது
No comments:
Post a Comment