Friday, October 19, 2018

கறுப்பு யூலையும் காதலாகி கசியும் பொழுதும் -பொன். காந்தன்




இரவுகளில் ஒரே கனவு
எலிகள் என் கோவணத்தை இழுத்துச்செல்வதுபோல்.
திடுக்குற்று எழுந்து
கந்தனின் விபூதியையும்
மடுமாதாவின் மந்திரித்தோதிய நீரையும்
கலந்தொன்றாக்கி என் மேனியில் தடவினேன்
எல்லாம் அமைதியாக இருக்கிறது
ஏதோ நடந்து கொண்டிருக்கின்றது
கடித்தவனும் குதறியவனும்
கண்களை பிடுங்கியவனும்
எங்கள் கால்களுக்குள்ளேயே
சுற்றிச்சுழன்று கிடக்கின்றான்
கட்டிப்பிடி வைத்தியம்தான்
இக்காலத்திற்கேற்ற ராஜதந்திரம் என்று
வகுப்பெடுக்கின்றார்கள் வரலாற்றுத் துரோகிகள்
செம்மணியில்
ஒரு கிழவியை சிதையில் எரிக்க கிடத்திவிட்டு
கழுத்தில் காதில் ஏதும் இருக்கிறதா என
சேலை விலக்கியபோது ஐயகோ
அவள் வற்றிய மார்பினில் சிங்கள ஸ்ரீ
காடாத்து செய்யப்படவேண்டியவர்களை
நாடாளவிட்டுவிட்டு
தமிழ் தேசியம் தன்னாட்சி அரசியல் யாப்பு என்று
பக்காவாய் நடித்துக்கொண்டிருக்கின்றோம்
சுத்த தமிழ் தேசியம் செத்து பல ஆண்டுகள்
பாட் ரைமாய் தமிழ் தேசிய பேசுகின்ற ஒருவனுக்கு
நேற்று அரச நியமனம் கிடைத்துவிட்டது
கால் நிலத்தில் இல்லை அவனுக்கு
தன் நீண்ட நான் கனவு இதுவல்லவோ என்று
நெடுங்கேணிப்பொயிலையாக ஒரு ரையை கட்டி
எடுத்து விட்டான் சிந்தனையை முகநூலில்.
எனக்கும் மகிழ்ச்சிதான்
இனி அவன் சொந்த காலில் நிற்ப்பான்
நிரந்தரமாய் சோறு கிடைக்கும்
பாங் லோன் எடுக்கலாம்
பாக்கிகளை கொடுத்து முடிக்கலாம்
வாடி என் ராசாத்தி என்று
நம்பிக்கையோடு ஒருத்தியை அணைக்கலாம்
பென்சனியர் என்ற பெயரோடு வாழ்க்கையைமுடிக்கலாம்
வேறொன்றும் கிழிக்கமுடியாது
கொழும்பில் இருந்து கொச்சைத்தமிழோடு வரும்
சுற்று நிருபங்களுக்கும் குனிந்து நிமிரவேண்டியிருக்கும்
புலிவருமெனும் குரல் கேட்டு
கைதட்டி கெக்கெட்டம் விட்டு சிரித்தாலே
கவனிக்க!
சீவ் கிளாக்கெண்டாலும் சிக்கல்தான்
பி.டி என்றாலும் பிரச்சனைதான்
விதிவிலக்காக சிலர்
அரச நியமனத்தை வைத்துக்கொண்டு
மக்களின் ஆன்மத்தில் குடிகொண்டுவிடுகின்றார்கள்
சேக்கிளர்;களை தூக்கி எறிந்துவிட்டு
சேற்றில் இறங்கி விவசாயிகளின் வேதனைகளை
அனுபவித்து ஆணையிடுகின்றார்கள்
காலத்தை உணர்ந்து கந்தகத்தை கூட
கோப்புகளோடு சேர்த்து கொண்டுபோனவருள்ளார்கள்
கொடுஞ்சிறையிலும்கூட பலர் வாடுகின்றார்கள்
வேலையில்லாமல் கூட போகலாம்
விசாரணைக்கும் முகம் கொடுக்கலாம்
ஏன் நாலாம்மாடிவரைகூட போய்
நாரிப்பூட்டு உடைக்கப்படலாம்
ஐம்பத்தாறில் பண்டா தனிச்சிங்கள சட்டத்தை
கொட்டத்துடன் கொண்டுவந்தபோது
இந்தா பிடி வைத்திரு அரச உத்தியோகத்தை என
தூக்கி எறிந்துவிட்டு உரிமைத்தாகத்தோடு
ஊருக்குள் திரிந்தவர்கள் பலபேர்
அந்த மகான்கள்தான்
பின்னாளில் பெடியளின் நெருப்புக்கு ஆதர்சமாயானார்கள்.
இப்படி பழசை கிண்டுதல்
சிலருக்கு படு அலர்ஜி
லங்காராணியை வாசித்தவர்களைவிட
ஓவியாவின் கட்டைப்பாவாடையை பூசித்தவர்கள்தானே
இப்போது அதிகம்
நெஞ்சுக்குள் எரியும் கறுப்பு யூலையை
குமுறிக்கொப்பளிக்காதபடி
காதலாகி கசிந்துருகி நல்லிணக்கதேனை
மாந்தி மயங்கி எங்கள் மக்கள் பிரதிநிதிகள்
கலவி மயக்க குமெரியென
முனகிக் கொண்டிருக்கின்றார்கள் தமிழ்தேசியத்தை.
வள் வள் என்ற நாய்களையும் வசியப்படுத்தி
வாலாட்ட வைத்து
கள்ளுண்ட வண்டாய் மயங்க வைக்கும் மந்திரத்தை
சிங்கள தரப்பு வீசி எறிந்து வெற்றி காண்கிறது.
கட்டுநாயக்காவுக்குள் புகுந்து எங்கள் வாயு புத்திரர்கள்
வானமிடிய வைத்தபோது
போக்கிடமின்றித் தவித்த கூட்டம்
நாக்கு வளைக்கும் அளவில் நலிவுற்றுவிட்டோம்
வாக்கு அரசியலுக்குள் வீழ்ந்துபுதைந்துவிட்டது
எங்கள் வாளும் கவச குண்டலங்களும்
இந்தா இந்தா என்று சொல்லி
இழுபட வைக்கிறார்கள் அவர்கள்
அந்தா அந்தா என்றுரைத்து ஆணைகேட்டு
அப்பாவிகள் தலையில் சம்பல் அரைப்பதற்கு
அற்பப் பதர்கள் செத்துப்போனவர்களை முதலிட்டு
சொத்துச் சேர்ப்பதில் சூழ்ச்சி கற்றுள்ளார்கள்.
எண்பத்திமூன்றில்
மடிநிறையக்கனவோடு மலரும் தமிழீழத்தை
என் கண்கள் காணவேண்டும் என்றான் சிறையில்
எங்களுர் பகத்சிங் குட்டிமணி
கண்களை பிடுங்கி எறிந்தார்கள் காடையர்கள்
யாரை நம்பி
அந்த மாவீரன் வார்த்தைகளை உதிர்ந்தான்
தின்னவேலியில் கண்ணிவெடிவைத்து களமாடியபோது
கையில் இருந்தது சில ஆயுதமும் சிலபேரும்தான்
செல்லக்கிளி எந்த நம்பிக்கையில் அன்றுவீழ்ந்தான்
நந்திக்கடலில் எல்லாம் முடிந்தது
இனி நம் ஆட்டத்தை தொடங்குவோம் என்ற
சுயநலவாதிகளின் கையில்
தமிழரின் தலைவிதி தள்ளாடுகின்றது
மண்டெலாவை அறிந்தோம் கஸ்ரோவை படித்தோம்
யாசீரை கண்டு மெய்சிலிர்த்தோம் பிரபாகரனுடன் வாழ்ந்தோம்
முப்படையும் வைத்து களமாடினோம்
தற்கொடையாளர்களை நெற்றிக்கு நேரே கண்டிருந்தோம்
பத்துப்பாட்டு எட்டுத்தொகையை சிலப்பதிகாரத்தை
குறளின் அத்தனை அதிகாரங்களையும்
கரைத்துக்குடித்தவர்களாய் கர்வம் கொண்டோம்
ஆயினும் சுத்துமாத்தும் குழிபறிப்பும்
அன்னியனை அடிவருடுதலும்
வகைவகையாய் வாலாட்டுதலும் இன்னும்
பத்திரமாய் காத்து பாரம்பரியமாய் பேணும்
கேடுகெட்டவர்களாய் தமிழர் இருப்பதனால்
வரலாறு வயிறு குமட்டி வாந்தியெடுக்கும் ஒலிதான்
கறுப்பு யூலையில் காதுகளில் வந்து விழுகின்றது.



No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...