Tuesday, October 23, 2018

உண்மை உன் சாவில் வென்றது-தியின் கதை,


உள்ளம் ஒரு கோடி அழுதது
ஊரே திரண்டு துவண்டது
கண்ணை இமை மூடிச்சென்றது
உண்மை உன் சாவில் வென்றது
மண்ணை சுவாசித்த மகனே
மானம் அது காத்த இறையே
உன்னை மறவாது உள்ளம்
உலகம் இப்போதும் கள்ளம்
மக்கள் புரட்சி என்றாய்
மறுகணமே மறந்தது இனம்
துணிந்த களமாட ஒரு சிலர்தான்
துயிலுமில்லத்திலும் ஒரு சிலர்தான்
விழுந்து களத்தில் சிலர் விதையாக
பருந்துக்கு பலர் இரையாக
மாற்றானுடன் சமரசத்தில்
வாழ்ந்தன பல இலட்சம்
தாயிழந்த உன்னைப்போல்
தனயர்கள் போராட
பாய்விரித்து படுத்து
பகலிரவு எதிரிக்கு
பல்லிழித்து வாழ்ந்து
நாதியற்றுப் போனது நம்மினமே
எவரேனும் உயிர்சிந்த
ஏற்றுவோம் கொடியென்று
இன்றும் இருக்கிறது
ஈனப் பிறவிகள்
முற்றத்தில் மக்கள்
செத்து மடிய
தொப்பூள் கொடியென்று
தூரத்தே உள்ள
தமிழ்நாட்டு தம்பி
தன்னையே எரித்தான்
பக்கத்தில் இருந்தவன்
படுத்தே கிடந்தான்
ரத்தம் துடிக்கவில்லை
இலட்சமாய் இருந்தார்
ஒருவன் எழுந்து
பக்கத்தில் காவலரணுக்கு
பாறாங்கல்லாலும் எறியவில்லை
மகனே நீ நினைத்த
மக்கள் புரட்சி
முள்ளிவாய்க்கால் போனது
வாகரையிலும் வன்னேரியிலும்
மன்னாரிலும் மல்லாவியிலும்
வழிவழியாய் செத்தது
வெல்லும் தர்மமென்று
விழவிழவே போனது
மண்ணில் வீழ்ந்த
மாவீரர் குடும்பங்களில்
மண்ணை நிர்வகிக்க
ஒரு தலைவனில்லை
தம்புள்ள மரக்கறிபோல்
தலைவர்களும் இறக்குமதி
கொத்தாக வாக்கு வாங்க
மாவீரர் உச்சாடனமும்
குத்து விளக்கேற்ற மட்டும்
தூசி தட்டி இழுத்து வந்து
அங்கம் இழந்த
ஒரு முன்னாள் புலியும்
இன்று அவசியம் தேவை
மற்றெல்லா நாளிலும்
ஈகம் செய்தார் குடும்பம் ஏதிலி
இதுதான் மகனே
இன்றைய மக்கள் புரட்சி
மன்னித்துக்கொள்
நானும் ஈனம்தான்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...