காலமானாலும் சிலரை கைப்பிடித்து அழைத்து வந்து
நியாயமுரைக்கும் வரலாறு
நந்திக்கடலில் பிரபாகரன் சிலையை
கட்டி எழுப்பினாலும் கவலையில்லையென
எட்டுவருசத்துள்
இயம்பினர் ஞானாசாரர்
அதிர்ச்சி யாபேருக்கும்
அவரா சொன்னார்
சரத் சொல்கிறார்
அது ஜகத்தான் எல்லாமென
குளிர்ச்சி பலருக்கு
இந்த குணமுமா இப்படியென
பட்டுத்தெளியும் போது
கட்டிக்காத்திடும் மரத்தை வெட்டித்சரித்தோமென
விளக்கம் தோன்றுமாம்
எட்டி நடவுங்கள்
எங்கள் வெள்ளி திசை திலீபன்
நல்லை முருகா ஞாபகமுண்டோ
சுக்கிளாம் பரதரம் விஸ்ணும் சசிவர்ணம் எல்லாம்
மண்ணுக்காய் பட்டுப்போய்க்கொண்டிருந்த
திலீபனைச்சுற்றியே அந்நாள் இருந்ததை
ஆயிரம் ஆயிரம் அர்ச்சனை அவன் பெயரில் நடந்தன
ஆளாளுக்கு அழுதுவடித்து
இளவலின் அருகே திருநீறு சந்தணம் வைத்து ஏம்பலித்தது
எங்கள் இளகிய உள்ளங்கள்
மாளாதையா அந்த நினைவு
ஓர் நாள் காந்தி தேசமும்
அவனை கையெடுத்து வணங்கும் திரும்பும்
வாசுதேவா நீயும் வந்தாயல்லவா அன்று
அந்த தேயும் நிலாவை
திரும்பி போகும் வழியெல்லாம்
புகழ்ந்து பாடிச்சென்றாய்
இன்று கூடி நிற்கிறாய் கொலை பாதகரொடு
தமிழருக்கும் எதுவும் கிடைக்கக்கூடாது
நீயும் சேர்ந்தே சன்னதம் ஆடுகிறாய்
ஆகட்டும் தோழரே ஆகட்டும்
அதர்மமும் ஆணவமும் தொடரும்போது
காலிமுகத்திடல்கூட
காதலர் இல்லாத காற்று வாங்காத
வேறுமாதிரியும் மாறலாம்
ஈழத்தில் இருந்து வீசும் தென்றல் இனிமையானது என்பது
ஏகப்பட்டோருக்கு புரியாது
இதுவரை இரத்தமும் ரணமுமாய் ஆக்கப்பட்ட பிணைப்பை
சில்வா செவ்வந்தி முத்தங்கள்
அவ்வளவு பெரிதாய் மாற்றாது
மொட்டையடிக்கபட்ட திலீபன் சிலையையும்
முட்டி நொருக்கப்பட்ட கல்லறை நிலமும்
எங்கள் கண்ணில்படும்போதெல்லாம்
பத்தி எரிகிறது எங்கள் மனதை எப்படித் தணிக்கலாம்
இந்த வித்தை இன்னும் புரியவில்லை
இரைப்பை கருகி இளைத்து மடிய ஒரு உயிரை
பார்த்தவர்க்கும் அவன் பசியுரையை கேட்டவர்க்கும்
அவர் சந்ததிக்கும்
எங்கிருந்தாலும் உள்ளத்தில் உறுத்தலாய் இருக்கும்
திலீபனின் மரணம்
தூக்கம் வராமல் துவள்தல் இனத்துக்கு இருக்கும்வரை
ஆட்சிபீடத்தில் எவருக்கும் ஆன்ம நிம்மதி இருக்காது
குடச்சலும் அலைச்சலும் கூடவே வரும்
வடக்கையும் கிழக்கையும் இணைத்து
நடக்கட்டும் அங்கு தமிழர் ஆட்சி என நல்லெண்ணம் வரும்போது
எங்கிருந்தெல்லாமோ தென்றல் வீசத்தொடங்கும்
பார்த்தீபன்
எடுக்க எடுக்க காலனுக்கு உயிரை கொடுத்துக்கொண்டிருந்த
எங்கள் காமதேனு
அந்த ஆன்ம வீச்சை அடக்கமுடியாது
என்னில் முட்டி ததும்பி
சந்ததியில் வழிந்தோடும் தீராநதி
இது அவன் காலம்
அகிம்சையின் காலம்
தீர்வுகளுக்காய் தெருவில் காத்திருக்கும்
அன்னையர்களில் அது குடிகொண்டுள்ளது
கண்டங்கள் கடந்த
ஐநா சபையிலும் அது பேசுகின்றது
அதுவும் எல்லைவரைதானே
கண்ணப்பா நில்லென
எவர் தடுத்தாட்கொள்வார்!!
No comments:
Post a Comment