என் பாட்டனாரின் அடிதாங்க முடியாமல்
முல்லைத்தீவுப்போரில்
முதுகுகாட்டிய வொன்றிபேக்
வள்ளங்களில் ஏறி
பிழைத்தது உயிர் என்று
பின் வாங்கினன் யாழ்ப்பாணம்
வென்ற நிலத்தினை
வெற்றிக்கொடி நாட்டி
குமாரசிங்க வன்னி யாருக்கு
பொறுப்புக்கொடுத்த
என் பாட்டன் பண்டாரவன்னியன்
கற்சிலை மடுபோய்
ஆனையிறவை வீழ்த்த
ஆயத்தம் செய்தார்
வன்னியன் எம்மை வீழ்த்தவா
நேற்றுப்போலவே வேற்று நாட்டான்
தோற்றுப்போவதை ஜீரணிக்க மனமின்றி
மூட்டினான்போர் வன்னிமீது
திருக்கோணமலை மன்னார் யாழப்பாணம்
திசையிருந்த கிளம்பின
வெள்ளையரின் பெரும்படை
செட்டிகுளம் பனங்காமம் துணுக்காய் வழி
கற்சிலை மடுநோக்கி பறந்த
வொன்றிபேக் படை கண்டும்
அவ்வழி இருந்த வன்னியனார்களும் முதலிமாரும்
ஒன்றும் பேசாமல்
ஒரு வார்த்தையேனும் பண்டாரவன்னியனாருக்கு
அறிவிக்காமல்
வாய்மூடி இருந்தனராம்
நேற்றுப்போலவே
முள்ளிவாய்க்காலில் தன்னினம் மடிய
பக்கத்தில் இருந்து கொண்டு
தானும் தன்வேலையென்று
சுயநலமாய் வாழந்த கூட்டம்போல...
ஏனடா வன்னியர்களே முதலிமாரே
வக்கற்று இருந்தீர்
எதை எதிர்பார்த்தீர்
சாபம் உங்களுக்கு!
1803 ஓகஸ்ட் 31 அதிகாலை
கற்சிலை மடுவில்
அந்த கானகத்தில்
என் பாட்டன் பண்டாரவன்னியனின்
வெற்றிப்படைகள்
இளைப்பாறி தூக்கத்தில் இருந்தன
சுற்றிவளைத்தன ஆங்கிலப்படை
அதிர்ச்சியடைந்தனவன்னியனார் படை
வழி எங்கும் என்னினம் இருந்தபோதும்
ஏன் எனக்கு எதிரிபடை பற்றி சொல்லவில்லை
எண்ணுவதற்கிடையில்
எல்லாம் நடந்துமுடிந்தது
ஒன்றரை இறாத்தல் குண்டுகள்
போடக்கூடிய
கண்டிராஜதானியில் முத்திரை பொறித்த
பீரங்கித்துப்பாக்கி
வெள்ளையரை வெளியேற்ற
கண்டியும் கரிக்கட்டுமூலையும்
ஒன்றாய் இணைந்தன
55ஆயுதந் தாங்கிகள்
பன்னிரண்டு ஈட்டிகள்
இரண்டுவாள்கள்
இரண்டு கிறிஸ்கத்திகள்
ஒரு துப்பாக்கி வாய்ச்சரிகை
ஒரு துப்பாக்கி குழாய்
இரண்டு கூடை துப்பாக்கி ரவைகள்
வீரச்சாவடைந்த
என் பாட்டனார் படையின் உடல்கள்
கைப்பற்றின ஆங்கிலப்படை
46 பேரை கைது செய்தன
சைனைட் இருந்திருந்தால்
46 வீரச்சாவடைந்த உடல்களை
வெள்ளையர் கைப்பற்றி இருப்பர்
பண்டார வன்னியரின் உடல்
கைப்பற்றப்படவில்லை
அவர் எங்கே
நேற்றுப்போலவே அன்றும்
ஒரு பெரிய கேள்வி
பின்னும் அவர் இருந்தார்
தாக்குதல்கள் செய்தார்
உடையாவூரில் நடந்த
நேரடி மோதல் ஒன்றில் விழுப்புண்ணடைந்து
என் பாட்டன் பண்டார வன்னியன்
1811ல்
பண்டார இலுப்பைக்குளத்தில்
வீரச்சாவடைந்தான் என்ற
குறிப்பை விடடுச்செல்கிறது வரலாறு
ஆயினும் கற்சிலை மடுப்போரின் பின்
அவர் இருந்தாரா எங்கு இறந்தார்
என்பது எழுத்துமூல ஆதாரம் இல்லை என்கிறது மீண்டும் வரலாறு
நாம்
தலைவர்களை சரியாக பயன்படுத்தாத இனம்
நாம் முழுமையாக வீரர்கள் ஆகாத இனம்
நாம் சுயநலம் கொண்ட இனம்
என்றைக்கும் விடியாத இனம்
நன்றி
பண்டாரம்+ வன்னியனார்-ஒரு வரலாற்று ஆய்வு
திரு.அருணா செல்லத்துரை அவர்களின்
கட்டுரையை ஆதாரமாகக்கொண்டு...
No comments:
Post a Comment