நாய்க்கு வேலையுமில்லை நடக்க நேரமும் இல்லை என்பதுபோல என் தோள் பைக்குள் கனநாளாக கிடந்த அப்பா திரைப்பட சிடி யை சில நாட்களுக்கு முன் போட்டுப்பார்த்தேன்.தமிழ் சினிமாவில் இப்படியும் எடுக்கலாம்.அதை இப்படியும் கண்வெட்டாது ரசிக்கலாம்.ஏதோ ஒரு மனத்திருப்தியோடு எழும்பலாம் என்பதற்கு சமுத்திரக்கனியின் சிந்தனை வெற்றிபெறுகிறது அப்பாவில்
ஒரு வைத்தியன் ஒரு நோயாளிக்கு சாப்பாட்டையும் குளிசைகளையும் பத்தியங்களையும் சிபாரிசு செய்வதுபோல நானும் அப்பாவை அப்பாக்கள் அம்மாக்கள் அப்பா ஆக இருக்கிறவர்களுக்கும் அப்பாவாய் இருக்காது போனவர்களுக்கும் அப்பாக்களின் பிள்ளைகளுக்கும் நான் துணிந்து சிபாரிசு செய்கிறேன்.
இதுக்கு முன்பு அண்மையில் அம்மா கணக்கு படம் பார்த்தேன்.அது நான் அம்மாக்களுக்கும் அம்மாவின் பிள்ளைகளுக்கும் அம்மா ஆக போகிறவர்களுக்கும் சிபாரிசு செய்கின்றேன்.நெஞ்சில் நிலைத்திருக்கும் படங்கள் இவை.
சமுத்திரக்கனியின் வார்ப்புக்கள் பாத்திர நடிகர் தெரிவுகள் அருமை.அண்மைக்காலமாக தம்பி ராமையா நெஞ்சைத் தொடுகிறார்.தம்பி ராமையாவுக்கு நகைச்சுவை வில்லனிசம் குணச்சித்திரம் எல்லாம் பொருந்துகிறது.தம்பி ராமையா நடிக்கிற படத்தில் நகைச்சுவைக்கென யாரும் தேவையில்லை என நினைக்கின்றேன்.சமுத்திரக்கனியின் படங்களில் வருகின்ற குழந்தைகள் மனதை நெகிழ்த்துகிறார்கள்;.அம்மா கணக்கில் வரும் சிறுமி.அப்பாவில் வரும் எல்லா சிறுவர்களும்.
சில மாதங்களுக்கு முன்பு 36 வயதினிலே படம்பார்த்தேன்.சந்திரமுகியில் ஜோதிகாவை பார்த்து சிலிர்த்தபின்பு 36 வயதினிலே படத்தில் சந்திக்கிறேன்.திருமணம் பிள்ளைகள் என்ற ஆனபிறகு ஒரு தமிழ் சினிமா நாயகியின் மீள்வரவு ஜோதிகாவுக்கு 36 வயதினிலே வெற்றி தருகின்றது.ஜோதிகாவை நடிகை என்று சொல்லலாம்நாயகி என்பதைவிட. சாவித்திரியை சிலாகித்துப்பேசுவதற்குரிய காரணங்களைப்போல ஜோதிகாவுக்கும் ஏதோ இருக்கின்றது.
ஆட்டா கிராப் சொல்ல மறந்த கதை பள்ளிக்கூடம்...சசிகுமாரின் சில படங்கள்....இப்போது சமுத்திரக்கனி இட்டுக்கொண்டிருக்கும் பொன் முட்டைகள் என மனதில் இடம்பிடித்திருப்பன இன்னும் பல ஆயினும் நான் சொல்லவந்தது அப்பா அது எழுப்புகின்ற நினைவுகள் பற்றி.
அம்மா கணக்கு படத்தில் நீண்ட நாளுக்குபிறகு ரேவதியை காண்கிறேன்.ரேவதிக்கு என் மனதில் ஒரு தனியிடம் உண்டு.அம்மா கணக்கில் ரேவதி நெஞ்சில் நிலைத்த எஜமானி அதிகாரமற்ற அன்பான ஒரு எஜமானி.ரேவதி என்னை கொள்ளையடித்தது கிழக்கு வாசலில். தனியே அவர் கொள்ளையடிக்கவில்லை.இளையராஜாவின் பின்னணி இசையுடன் பாடல்களுடன் சேர்த்து கொள்ளையடித்தார்.
கிழக்கு வாசலில் ரேவதி ஒரு தேவதைதான்.கிழக்கு வாசலில் ரேவதியின் கண்கள் உதடுகள் மௌனம் என்பன மிக அதிகம் நடித்தன.
சமுத்திரக்கனியின் படங்களை பார்க்கும்போது விசாரணை அம்மா கணக்கு அப்பா .....இதில் வருகின்ற பாத்திரங்கள் நடிப்பு எல்லாம் பாலுமகேந்திராவின் கதை நேரத்தை நினைவு படுத்துகின்றது.பாலு மகேந்திராவின் கதை நேரம் ஒரு காலத்தில் எங்களது மிகச்சிறந்த நேரமாக இருந்தது.
1997 1998 என்று நினைக்கின்றேன்.அப்பொழுது முள்ளியவளையில் இருந்தோம்.எங்களுக்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் டிஸ் அன்ரனாவும் இருந்தது.அது தவபாலனின் அறையில்செய்தி பிரிவில் இருந்தது.நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்து விட்டு தவபாலனின் அறைக்குப்போவாம்.பாலுமகேந்திராவின் கதை நேரத்தை எனக்கும் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் அறிமுகம் செய்தது அவர்தான். தொலைக்காட்சியில் வாராவாரம் அதுபோகும் பாலுமகேந்திராவின் அந்தப்படைப்புக்கள் சினிமா கமரா நடிப்பு பற்றிய ஒரு காத்திரமான விம்பத்தை எமக்குள் பரவியது.கதை நேரம் போல சப்தஸ்வரங்கள் பார்ப்போம் இப்பொழுது சுப்பர் சிங்கர்போல அன்று அது எமக்கு விருந்தளித்தது.சப்தஸ்வரங்களில் பாடிய பல சிறார்கள் இன்று பிரபல பிண்னணி பாடகர்கள்.
தவபாலனின் அறையில் சத்தியா ரட்ணா கோகுலன் நாவண்ணன் திருமாறன் வரன் சிவராசா விரிஏ விஸ்வா நான்தயாளன் பத்மன் கலிஸ்ரஸ் அப்பொழுது நிகழ்ச்சி செய்ய வருகின்ற இளங்கீரன் உள்ளிட்ட கூட்டங்கள் ஒன்றாய் இருந்தால் சொல்லவா வேண்டும் இதில் பலரை தவறவிடுகிறேன் மன்னிக்கவும்.
ரட்ணா வாஜ்பாய் போல அவர் நடந்து வந்து உரையாற்றுவது போல அற்புதமாக செய்வார்.சீலன் என்ற திருமாறன் கலா நடிகன் பத்மனும் அப்படியே தமிழ்மறவன் எங்களுக்குள் இளையவன் ரகுவரன் போல கதைத்துக்காட்டுவான்.அதிலும் அஜித்தின் அன்றைக்கு ரொமான்ஸ் நடந்ததே என்று தொடங்கி உன் மெளத்தே ஒர்கன் மாதிரி என்று கிஸ் பண்ணிட்டேன் என்று முடியும் வசனத்தை அருமையாக சொல்லிக்காட்டுவான் தமிழ்மறவன்.கதை நேரம் பார்ப்பதும் இவர்களின் மிமிக்கிரிகள் பார்ப்பதும் எங்களுக்கு அலாதியான பொழுதாக இருந்தது.அந்த அறைக்கு பெண்கள் வாறது மிக குறைவு.அப்படி செய்தித் தொகுப்புக்களில் சந்தேகங்கள் தெளிவு படுத்த ஜனனியோ கிரிஜாவோ வதனி சர்மியோ தூரத்தில் இருந்து கூப்பிடுவார்கள்.அதற்குள் உடைகளை சீர் செய்து கொண்டு வாங்கோ என்போம்
அக்காலங்களில் கிபிர்கள் அறிமுகமாகவில்லை என்று நினைக்கின்றேன்.ஆளில்லா வேவுவிமானங்களும்(வண்டு)அறிமுகமாகவில்லை என்று நினைக்கின்றேன்.அப்பொழுது எங்களுக்கு உணவுக்கு மட்டும்தான் எங்களுக்கு கிச்சின் ஐயாவின் அலேட் வரும்.ஜவான் வருகிறார் என்றும் அலேட் வரும்.ஜவான் சிறந்த பொறுப்பாளன்.என் கவிதைகளின் முதல் ரசிகர்களில் அவரும் ஒருவர்.அடிக்கடி வந்து எனக்கு கைதருவார்.இராத்திரி கேட்டேன்.கலக்கினீங்கள்.இன்னும் செய்யுங்கோ எனக்கு தட்டிக்கொடுத்த மிகப்பெரிய ரசிகன் ஜவான்.என்னை ஒரு தம்பி போல நல்லூர் திருவிழா நாட்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் திலீபன் நினைவு சிறப்பு முத்தமிழக்கலையரங்கத்தில் என்னை தலைமை தாங்க வைத்து பார் என்ர ஆளின்ர கவிதையை என்று ஓரத்தில் ஒற்றைக்காலுடன் என்னைப்படம் பிடித்து பெருமைப்படும் பரந்தவன் ஜவான்.ஜவானால் நிகழ்கிற பேராச்சிரியமும் அங்கு நடக்கும்.நான் கவியரங்க மேடையை விட்டு இறங்க மணலில் மனைவியோடு குந்தி இருந்து பார்த்துவிட்டு நல்லா இருந்ததடா என்று ஒருவர் கைதருவார்.அவர் ஆணைபெண்ணென்று பேசக்கூடிய வல்லமை படைத்த எம மண்ணின் மகா சொத்து பொன்.கணேசமூர்த்தி.
தவபாலனும் அப்படித்தான் தவபாலனின் அறைக்கு நான் செல்வதற்கு காரணம் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை தவபாலன் சொல்வார்.தொலைக்காட்சி பத்திரிகை ஏனைய வானொலிகள் தவபாலனின் அருகில் எப்பொழுதும் பார்வையில் இருக்கும் செய்திகளில் யாரும் பிழை விட்டால்.பன்னாடை என்ன செய்தனி என்பார் தவபாலன் தவபாலனின் ஆக மிஞ்சின தூசணம் பன்னாடைதான்.நல்ல படங்களை பார்;க்கிறபோது தவபாலனின் அறையும் அந்த மனிதர்களும் அந்த நாட்களும் என் நெஞ்சோரம் உரசிச்செல்லும்.
நன்றி அப்பா படத்துக்கு!
No comments:
Post a Comment