Saturday, October 20, 2018

குளத்து மீன்-பொன்.காந்தன்




இன்று காலை அக்கராயன்குளத்தடிக்கு போனேன்.அந்த குளத்து வெளியை பார்க்கிறபோது அக்கராயன்என்ற பண்டைய தமிழ்மன்னனின் சேனைகள் திரண்டு நிற்பதுபோல தூரத்தே காடுகள் புகார் மண்டிக்கிடந்தன. வள்ளத்துக்குள் இருந்து அவர் மீன்களை அள்ளி வெளியே ஒரு விரிப்பில் போட்டுக்கொண்டிருந்தார்.கொளுத்த யப்பான் மீன்கள் விரால் மீன்கள் மூக்கில் மீசை முளைத்த மீன்கள் சிலவும். நாறல் மீனை பூனை பார்த்ததுபோல பார்த்துக்கொண்டிருந்தேன்.யப்பான் எனக்கு பிடித்தமான மீன்.நீண்ட நாளுக்குப் பிறகு யப்பானை பிடிக்கும் இடத்திலேயே பார்க்கும்போது எனக்கு வாய் ஊறிக்கொண்டிருந்தது.வாங்கவும் விருப்பவும் அதை எங்கே பொரிப்பது என்பதுதான் பிரச்சனை எங்கள் குளம் எங்களுக்கு தெரிந்தவர்கள் பிடித்தமீன் எங்கள் குளத்துமீன் அதை பொரித்து சாப்பிட உடனடி முடிவுகளை எடுக்கமுடியாதபடி குளத்துமீனுக்கு நெடுங்காலமாக இந்தச்சோதனை உண்டு.சிறுவயதில் யாரோ கவிஞர் யப்பான் பற்றி எழுதிய வரிகள் எனக்கு நினைவில் உண்டு எல்லோரும் யப்பான் உற்பத்திகளை தேடிவாங்குகிறார்கள்.யப்பானின் தயாரிப்புக்கள் அத்தனை திறம் என்பது எல்லோரதும் கணிப்பு ஆனால் யப்பான் மீனை மட்டும் கண்டால் மறுபக்கம் திரும்பிக்கொள்கிறார்கள் என்னே மனிதர்கள் என்று அந்த கவிதை சலித்துக்கொண்டிருந்தது.

என்னுடைய சிறுபராயத்தில் என்னுடைய பெரியப்பா தனது யப்பான் சைக்கிளில் என்னை ஏற்றிக்கொண்டு மாலைக்கருக்கலில் கறுப்பையா அண்ணையிடம் போவார்.கறுப்பையா அண்ணைக்கு ஒரு கால் கொஞ்சம் இழுத்தமாதிரி.இழுத்து இழுத்து அவர் சீவல் கூட்டை இடுப்பில் கட்டியபடி தென்னைகளில் ஏறுவதும் இறங்குவதும் இடைக்கிடை அன்றைய கிண்டல்களும் கேலியுமான கதைகள் சொல்வதும் சலிக்காமல் பார்த்துக்கொண்டிருக்கமுடியும்.கறுப்பையா அண்ணையில் கள்ளை பிளாவில் அருந்தி மெல்லமெல்ல பெரியப்பாவுக்கு வெறியேறும் பிறகு என்னுடைய உதட்டிலும் கள்ளின் துளியை செல்லமாக தடவி என் வாய்கோணுவதை பார்த்து மகிழ்வார்.பின் அவரின் வெள்ளைத்தொடை தெரிய சண்டியை கட்டி சத்தங்களை கொஞ்சம் கூட்டி கோவிந்தன் கடைச்சந்தியில் கொஞ்சம் அவர் தள்ளாடியபடி நிற்கிறபோதுதான் நான் முதன்முதலாய் யப்பான் மீன்களை கண்டேன்.அந்த மீன்களை அந்த சந்தியில் கோர்வையாக கோர்த்து விற்றார்கள்.இந்தக்கோர்வையில் ஒன்றை ஒரு நாள் பெரியப்பா வாங்கினார்.வாங்கும்போது பெரியப்பாவுக்கு வெறி.பெரியப்பாவின் கள்ளடி நண்பர் ஒருவர் யப்பான் பற்றியும் அதை வெடுக்கு மணக்காமல் காய்ச்சுவது பற்றியும் வகுப்பெடுத்ததன் விளைவுதான் அது.பெரியப்பா அந்த யப்பான்களை ஒரு மாட்டுத்தாள் பை வாங்கி அதில்போட்டு சைக்கிள் காண்டிலோடு பிடித்தபடி வீடு வந்து பெரியம்மாவை பெரியதொனியில் அழைத்துக்கொடுத்தபோது வில்லங்கமானது.என்ன செத்தவீட்டுக்கு இது என்று அவர் தொடங்கினார்.பொத்தடி வாயை என்று இவர் முழங்கி கட்டின புருசன் விருப்பத்தோட வாங்கிக்கொண்டு வாறன் அதை காய்ச்சித்தர முடியாத பொம்பிள எண்டு பெரியப்பா நீட்ட இயமன் இயமன் என்று பெரியம்மா திட்டத்தீர்க்க பின்பு எங்கள் வீட்டில் ராணி என்ற பெயரோடு நின்ற சடை நாய்க்கு உணவாக பையோட தயாரான நிலையில் பெரியம்மா ஒருவாறு அதை கொண்டு சென்று இயமனுக்கு காய்ச்சினார் புறுபுறுத்தபடி.யப்பானை பத்துத்தடைவ கழுவினார் ஒவ்வொரு கழுவலுக்கும் பெரியப்பாவுக்கு திட்டுக்கள் வீழந்தன.பின்பு அதை வெட்டி தோலுரித்து மஞ்சள் தடவி பொரித்தார்.அந்த மணம் இப்பொழுதும் என்நாசியில் இருக்கிறது.புட்டும் யப்பான் பொரியலும் பெரியப்பா சாப்பிட்டார்.அது போல் சுவையை நான் இதுவைர நான் கண்டதில்லை.இயமன் என்று பெரியம்மா திட்டினாலும் அந்த இயமன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.அதுபோலவே பெரியப்பாவும் பெரியம்மாவின் மீது கொள்ளை அன்பு கொண்டிருந்தார்.இந்த ஊடலும் கூடலுமான வாழ்க்கையில் அவர்கள் காடு வெட்டி காணி உருவாக்கி காட்டு மிருகங்களுக்கு ஈடுகொடுத்து வீடு கட்டி கிணறு கட்டி தென்னைவைத்து போரை எதிர்கொண்டு இந்த மண்ணுக்கும் தங்களால் முடிந்த எல்லாம் செய்து வாழ்ந்து முடித்து சென்றுவிட்டனர்.அவர்களது வாழ்வு அற்புதமானது.

என் சிறுபராயத்தில் பாடசாலைக்கு செல்கிறபோது எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்கு அடுத்த வீட்டு நண்பன் நடராசாவும் சேர்ந்துகொள்வான்.கொஞ்சம் தூரம் செல்ல நாகேந்திரன் காந்தரூபன் செல்வகுமார் இப்படி ஒரு அணி குளத்தை மரங்களை தாமரைப்பூக்களை இரசித்தபடியும் குளத்துக்கு கல்லெறிந்து அதில் எழும் குமுழிகளை இரசித்தபடியும் எட்டு மணிக்கு மணி அடிப்பதற்கு முன் நடந்து பாடசாலை சென்று சேர்ந்தவிடும்.அது அலாதியான நினைவு.இழந்துவிட்ட என் மண்ணின் இனிமையான நாட்கள்.
நடராசாவின் அப்பா இராமசாமி அவர் ஒரு நல்ல மனிதர்.மரியாதையானவர்.ஒரு மீன் வியாபாரி. குளத்துமீன் வியாபாரி.அவர் சைக்கிளில் கரியல் பெரியதாக இருந்தது.அந்தக்கரியலில் பெரிய மரப்பெட்டி கட்டி அதில் யப்பான் விரால் போன்ற குளத்து மீன்களை சுமந்து ஊருக்குள் பீம் போம் என்ற கோண்அடித்து அதை விற்றார்.இராமசாமி அண்ணை பல ஆண்டுகளாய் குளத்து மீன் விற்றார்.அந்த குளத்துமீன் வியாபாரத்தில்தான் அவர் குடும்ப சீவியம் நடந்தது.பிள்ளைகளை படிப்பித்தார்.இராமசாமி அண்ணை குளத்துமீன் வி;ற்றார் ஆனால் ஊரில் அநேகரும் குளத்துமீன் என்றால்சீ என்று அது ஏதோ துடக்குபோலவே கதைத்தனர்.அப்படி எனில் இராமசாமி அண்ணனின் குளத்துமீன்களை வாங்கி மஞ்சள் பூசி பொரித்தும் காய்ச்சியும் உண்டு மகிழ்ந்தவர்கள் யார்!எங்கள் சமுதாயத்தில் ஒரு பழக்கமுண்டு ஆசையிருக்கும் அதை நிறைவேற்றிக்கொண்டும் இருப்பார்கள் ஆனால் அதை வெளிப்படையாக காட்டாமல் வேறு ஒருவராகவே கடைசிவரையும் வாழ்ந்துபோய்விடுவார்கள்.இன்னும் சிலர் நிறைவேறாத ஆசைகளோடு மற்றவர்களுக்காய் நெளிந்து வளைந்து வாழ்ந்து முடிந்துபோய்விடுவார்கள்.இந்த குளத்துமீன் வெறுப்பாளர்களும் தின்னிகளும் அப்படி வாழ்வின் அடையாளங்கள்தான்.

இராமசாமி அண்ணை மீன் விற்றுவிட்டு சில வேளை பாடசாலை விடும் நேரம்வரும்போது தன் மகன் நடராசாவை பெட்டிக்குள்ளும் என்னை பாரிலும் ஏற்றி வீட்டில் இறக்கியுதுண்டு.இராமசாமி நல்ல மனிதர்.மரியாதையானவர்.சண்டித்தனங்களை விரும்பாதவர்.அவ்வாறே அவரின் பிள்ளைகளும் இருந்தார்கள்.இராமசாமி அண்ணையின் பிள்ளைகளை நினைத்துப்பார்க்கிறேன்.பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும் உருண்டு திரண்டு இருந்தார்கள்.மார்புகள் தோள்கள் அவர்களுக்கு புடைத்திருந்தன.கன்னங்கள்கொழுகொழுவென்றிருந்தன.நான் நினைக்கின்றேன் குளத்துமீன் ஆரோக்கியமானது போசாக்கு நிறைந்தது என்று நினைக்கின்றேன்.நடராசாவும் அவரின் அண்ணன் பிரபாகரன் என்ற பென்ஜோன்சன் பட்டப்பெயர் கொண்டவரும் நல்ல ஓட்டக்காரராக இருந்தனர்.விளையாட்டுப்போட்டிகளில் முதலிடங்களை தட்டிச்சென்றனர்.இப்பொழுதும் இராமசாமி அண்ணையின் பரம்பரை தொழிலை இரணைமடுவில் அவரின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் செய்வதாக அறிகின்றேன்.சிறுவயதில் நான் பார்த்த இன்னொரு குளத்துமீன் வியாபாரி சைமன் அண்ணை.அவர் ஒரு கிறித்துவர்.இராமசாமி அண்ணையின் பிள்ளைகளை போல இவரின் பிள்ளைகளும் கட்டுமஸ்தர்களாக இருந்தனர்.பெண் பிள்ளைகள் அழகிகளாக நடிக்கைகள்போல சிவப்பாக இருந்தார்கள்.அவரின் பிள்ளைகளும் அப்பாவின் தொழிலை விடாமல் தொடர்வதை பார்த்தேன்.சந்தித்திருக்கிறேன்.மிகவும் பொறுப்புணர்வும் மரியாதையும் உடையவர்களாக கண்டேன்.

சிறுவயதில் பாடசாலைக்கு செல்லும் காலத்தில் கிளிநொச்சி குளத்தின் கீழ் கரைகளில் பனிப்புகார்களின் இடையே வரிசையில் குந்தி இருந்திருக்கின்றவர்களின் உருவங்கள் தெரியும்.அவர்கள் கையில் தூண்டில் இருக்கும் மீன் கொத்தி மிதப்புக்கட்டை தாளும் வரை கண்வெட்டாமல் காத்திருந்து உன்னி இழுக்கும்போது வெளியில் துடித்தபடி விராலோ யப்பானோ வரும்.அதை கண்வெட்டாமல் வேடிக்கை பார்த்திருக்கின்றேன்.நானும் நெடுங்காலமாய் தூண்டிலில்; மீன் பிடிக்கவேண்டுமென்று ஆசைப்பட்டு வீட்டுக்கு தெரியாமல் தங்கூசி வாங்கி நாக்கிளிப்புளு கொழுவி வீட்டுக்கு அண்மையில் உள்ள யானைப்பள்ளத்தில் குத்திஇருந்து பார்த்ததும் உண்டு.யப்பான் கர்ப்பிணிப்பெண்களுக்கு நல்லதாம் என்று ஏதோ குறிப்பொன்றில் பார்த்த நினைவு.கிளிநொச்சி குளத்தில் குளத்து மீனுக்கு வலைகள் கட்டிவிட்டு மீன்களை வலைகளை நோக்கி அணைப்பதற்கு இடுப்பில் காத்துஊதிய ரியூப்புக்களை கொழுவியபடி நீந்தி கையால் நீரில் அடிக்கு கும் என்ற ஒலி ஒரு இசையாகவே என்காதில் இன்றுவரை படிந்திருக்கிறது.இன்று அந்தச்சத்தங்களை கேட்பத அரிது.

இப்பொழுதெல்லாம் சந்தைக்குப்போகும் போது முன்னுக்கே யப்பான்கள்; குவிக்கப்பட்டிருக்கும்.இரணைமடு யப்பான் என்பார்கள்.ஒருகிலோ போடுங்கள் என்பேன்.சிலர் என்னை ஒருமாதிரி பார்த்துப்போவதுமுண்டு.எனக்கு அதை பற்றிக்கவலை இல்லை.எனக்கு குளத்து மீன்பிடிக்கும்.யப்பானை வாங்கிக்கொள்வேன்.ஆனால் மஞ்சள் பூசிஅதை பெரியம்மாபோல பொரிப்பது யார்?
இப்பொழுது கொழுத்த அந்;த யப்பான்களை நிறுத்து நிறுத்து ஒரு சிறு கொப்பியில் குறித்து இன்னொருவர் உந்துருளியில் வந்து ஏற்றிக்கொண்டிருந்தார்.அவர் சிங்கள ஊர்களில் இருந்து வரும் குளிரூட்டி வான்களுக்கு கொடுக்கிறவர்.இங்கு இந்த யப்பான்கள் அனைத்தையும் விற்று முடிக்கமுடியாது என்பதே அதற்கு காரணம்.குளத்து மீன் பிடிப்பவர்கள்.அநேகர் வறுமையில் உள்ளவர்கள்.அவர்களின் வலைகளை முதலைகள் சில வேளைகளில் அறுத்துவிடும்.குளத்தில் இருக்கின்ற மரக்கட்டைகள் அறுத்துவிடும்.

நான் ஒரு கனவு காண்கின்றேன் குளங்களுக்கு அருகில் ஐந்து நட்சத்திர விடுதிகள்.அங்கு எங்கள் குளத்து மீன்களில் தயாரிக்கப்பட்ட மிக நவீன உணவுகள்.அவற்றை தட்டில் ஏந்தியவாறு கோட்சூட் அணிந்த பரிமாறுகிறவர்கள்.வண்ணமயான வெளிச்சங்களுக்கு இடையில் விருந்தாளியாய் வந்த எந்த நாட்டானோ குளத்துமீன்களின் சுவையில் மயங்கிக்கிடப்பான்
குளத்தின் எல்லையில் ஒரு விடிவெள்ளிபூத்திருக்கும். பற்றைகளுக்கு இடையில் இருக்கும் வாடியில் கண்களை விழித்துக்கொள்கின்றேன்.


No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...