Sunday, July 9, 2023

பத்து புள்ளி பதினைந்து ரிச்டரும் இஸ்தான் புல்லுக்கு இரங்கலும்-பொன்.காந்தன்



அங்காராவுக்கு அனுதாபங்கள்
அரைசல்லி கூட அனுப்புவதற்கு இல்லை
இஸ்தான்புல் நோக்கி எம் அஞ்சலிகளும்
ஏடோகனுக்கு என்ன சொல்ல
அதிகாரம் சிலவேளை
ஆறுநாள் துக்கம் அறிவிக்க மட்டுமே உதவும்
கையறு நிலைக்கும்
எல்லையில்லைத்தான்
கனவுகள் ஓடிவரும் அதிகாலைப்பொழுதில்தான்
காலமும் பகைத்திருக்கின்றது
தூக்கத்தில் இருந்து பலர் எழவில்லை
இனி எழப்போவதும் இல்லையென்றானது
கதவு நோக்கி ஓடினார்கள்
கதவு இருக்கவில்லை
படியில் இறங்க நினைத்தார்கள்
அதுவும் கூட இல்லை
சாளரத்தில் வழியே குளிர்காற்றும் இல்லை
மீதியை யார் சொல்வார்
கற்களைத்தவிர
துருக்கிய குழந்தைகளுக்கு
தூளி கட்டவிரும்புகின்றது உலகம்
அநாதைகள் இல்லையென
அன்பையும் அறிவிக்கின்றது
இடிபாடுகளுக்குள் துடிக்கும் இதய ஓசையை
எப்படிக்கேட்பது
வறண்ட நாவில் வார்த்தைகள்
வற்றி முடிந்திருக்குமா
இயற்கை எழுப்பியது பெரிய கல்லறை
நினைவுகள் மீட்டெடுக்கவும்
நிறைய காலம் ஆகும்
ஒரு காலையில் பல்லாயிரம் அஸ்த்தமனம்
துருக்கியையும்
மட்டக்களப்பு யாழ்ப்பாணம் காலியையும்
ஒப்பிட்டால் உச்சிகுளிரும்
பூமி ஒரு சாமியாய் தெரியும்
வஞ்சகமின்றி வாரிக்கொடுத்த
இயற்கை வரம்
இலங்கைக்கு மட்டும்தான்
சாபம் ஒரு சட்டியாய் கூட கிடையாது
தேங்காய் விழும் அதிர்வை தவிர
வேறு வில்லங்கமுமில்லை
பள்ளம் திட்டி பஸ் குலுக்கத்தை தவிர
நிலம்
ஒரு நிலை கதவை கூட கழற்றவில்லை
எலி தட்டி இரும்பு சட்டி உருள
தடக்குபட்டு எழும்பியதுதான் உண்டு
குண்டு கொட்டித்தான் மண் பிளந்தது
ஏத்குவாக் ஏதுமில்லை
பங்கர் மூடி செத்ததுக்கும்
பாவம் இந்த பூமிக்கும்
எந்த சம்மந்தமுமில்லை
கண்ணை மூடிக்கொண்டு
சில வேளை மழை பொழியும்
அதுவும் காத்தால வடிந்துபோய்விடும்
வங்காள விரிகுடா சூறாவளிகள்
தென்னையோடு வந்து தெனாவட்டுக்காட்டி
பின்னேரக்கையாய் கடந்துவிடும்
மண்சரிவு மிரட்டும்
பிறகு மலையும் அமைதியாகவிடும்
அடுப்புக்குமேல்
இலங்கையின் அடிப்பக்கம் இல்லை
பிறகு புன்னகையும் அமைதியும் பூரிப்பும்
எந்த பூகம்பத்தில் புதைந்தது
பத்து புள்ளி பதினைந்து ரிச்டர்
இப்போதும் கூட
இலங்கையில் இனவாதம்
பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்ந்துவிட்டன
காவி நிறத்தில் இருள் சூழ்கிறது
அதிர்கிறது பீரித் ஓசை
அல்லாடுகிறது தெரு
அணைய விடாமல் ஊதுகிறார்கள் பேரினவாதத்தை
இயற்கை மேவி நிற்கும் ஒரு சாபம்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...