அப்பிராணி மாதிரித்தான்
வந்தது இரவு மழை
சொட்டு நேரத்துக்குள்
சுப்பிரபாதத்தை தொடங்கின தவளைகள்
விடிவதற்குள் மரங்களின் அக்கிரகாரமெல்லாம்
புகுந்து விளையாடிவிட்டது
உட்பிரகாரங்கள் பல இடத்தில் ஊற்றெடுக்கிறது
கள்ளியென கிள்ளுகிறது காற்று
புதுப்பொண்டாட்டியாய்
போர்வைக்குள் புகுந்து
முக்காடு போட்டபடி முகில்
இன்று முழுதும்
எக்கி பார்த்து ஏழுவர்ணம் கிறுக்க
மச்சான் சூரியனுக்கு மயங்கவில்லை மழை
இரவு முழுதும் விநோதம்தான்
இன்றெல்லாம் இளந்தாரியாகிவிட்டது
வாத்சாயனரையும் படித்திருக்கிறது வானம்
தாகங்கள் புரிந்து
தணித்திருக்கிறது இரவு
மோகம் தீர்ந்ததாய் முற்றத்து செடிகள்
மாரியின் மாடலிங்கே காளான்கள்தான்
இன்னும்
ஆடைக்குள் இப்படி எத்தனையுண்டு
கோடைக்குள் மறைந்திருந்த குமரி
சாறி மாத்துவதை காணும்போது
சதா
தூறினால் என்னென்றதுபோல இச்சை
ஏதா நினைப்பில்
எம்பெருமான் மேகச்சாவிதொலைத்தால்
சீலம்பாயென்று சினமும் வந்துவிடும்
இந்தமுறை எப்படி
வெயிற்றிங் என்கிறது வெள்ளியற்ற வானம்
முன்னமொரு மாரியில்
விதானையார் வேலியடியில்
வீட்டுக்கூரையிலிருந்து
குடும்ப அட்டை காட்டினோம்
அடுத்த சீசனில்
அதக பள்ளியொன்றில்
அவிச்சதும் பணிசும் சாப்பிட்டோம்
திரும்பும்போது
திண்ணையை காணவில்லை
குற்றாலமாயிருந்து
குப்புறக்கிடந்தது கூரை
மப்புக்கட்டும் போது
ஒரு கூட்டத்துக்கு இன்னமும்
மனசுக்குள் இடியிடிக்கும்
ஏற்றத்தாழ்வு இல்லை மழைக்கு
ஒரே எமோசன்தான்
காணிவேலியென்று
கந்தப்பு மாக்கிரேட்டென்று
முகம்பார்த்து மோசமில்லை
மொத்தமாய் ஒரே காப்பெற்தான்
கப்பல் விடுவதும்
கவிதை எழுதுவதும்
தத்தளிப்பதும் மழையின் கையிலில்லை
மரங்கள் அடர்ந்த காலத்தில்
மாறாட்டமிருக்கவில்லை காட்டாறுக்கு
பணம் வந்த கொளுப்பில்
பாதையை மூடி பலஸ் கட்டியெழுப்ப
சினம் வந்தது அதற்கும்
சீண்டியது பிறகு
சிறுமழைக்கும் பெருவெள்ளம்
வரத்தை தவறாக்கிய
வானரங்களும் நாங்கள்தான்
இருக்கட்டும்
இனி என்ன செய்யலாம்
இம்முறையும் இரணைமடு பொங்கிப்பூரிக்கும்
தடிமன் காய்ச்சல் வருத்தமென்று
அம்மாவின் காலத்து அறிவுரைகள்
இந்நாளோ வருத்தம் வேறு
பின்னால் பேய் நின்றாலும்
பேமசாக செல்பி வியாதி
இடையிட்டு வந்ததுதான் இது
இருக்கவிடாது
கொண்டோடித்திரியும் கொடுர நோய்
இன்று ஒருவர் பாலத்திலேறினார்
பாஸ்ட் எவே
செமயாய் இருக்கும்
இயமனோடி கூடி எடுக்கலாமா செல்பி
குளங்களினி
கொப்பளிக்கத் தொடங்கிவிடும்
இரணைமடு மாஸ் காட்டி
இழுபட்டு விழுந்தால்
சவம் கிடக்கும் ஊரியானில்
சரிபாதி முதலைக்கு லஞ்ச்
சித்திரபுத்திரர்க்கு
சிமாட்போனில் ஒரு கண்
கவனம்
முத்தையன் கட்டிலும்
முகாமிட்டுள்ளார் இயமன்
கள்ள மண் குழியிலும் காவலிருக்கிறார்
மீசாலை தண்ணியென்று
மின்சாரக்கம்பத்தை அணைக்கப்போய்
மிஸ் யூடியென்று
மோட்சப்பிரார்த்தனைக்கு ஏன் அவசரம்
எகிறும் லைக்கென்று
விசரில்போய் துருசுக்குள் துலாவலாமா
மசிரே போகட்டும்
மச்சான் எடடாவென்று
வவுனிக்குள வானுக்குள் பாய்ந்தால்
விதி விக்கெட்டை பிடுங்கிவிடும்
நின்றாடவேண்டும்
வாழ்க்கை ஒரு டெஸ்ட் மச்
வானவில்லை இரசிக்கும் விழியே
வைரலாகும் ஆச்சரியம்தான்
முன்னமும் போனாமே
வெள்ளம் அங்கு நின்றது
நாம் இங்கு நின்றோம்
பின்னங்காலால் சேறடித்திருந்தது
சிலிர்க்கின்ற காலவண்ணமன்றோ அது
No comments:
Post a Comment