Sunday, March 6, 2022

காக்கா கடைச்சந்தியும் ஏற்றமும் இறக்கமும்-பொன்.காந்தன்

 

காக்கா கடைச் சந்தி
சூப்பியோடு நிற்கிறது
சொட்டும் எதுவும் தெரியாததாய்
செவாலியர் நடிப்பு
வெட்டித் திருப்பினால் விரகமாய் வளைவுகள்
ஐந்தடிவானடி அழகிய கொங்கை
இரணைமடுவரை இன்ப ஊற்றுக்கள்
வட்டக்கச்சி தாண்டியும்
தொட்டால் தொடரும்
கோவிந்தன் கடை இடையில்
மதகுப் பொலிவு மயக்கம் தரலாம்
மொட்டைப்பாலமா முரசுமோட்டையா
முக்கால் வாசியில்
மூச்சுவாங்கவும் வைக்கும்
காக்கா கடைச் சந்தி
வாழ்க்கை பட்டதே கிளிநொச்சிக்கு
பள்ளிப் பிள்ளைகளோடு
பழக்கம் அதிகம்
முந்திவந்து இறங்கி
முதல் பாடமெடுக்கும்
பிந்திவரா யாழ்ப்பாணத்தை
பெருமையோடு கண்டிருக்கும்
குந்தியிருந்து நிழற்குடையில்
குசுகுசுக்கும்
மன்மதர்களையும் அறியும்
முந்தியிருந்த முகமிழந்த
தங்கச்சிகளின் ஏழ்மையுமுணரும்
அந்தி சாய்ந்தால்
மின் விளக்கில்
அந்த நாளை இரைமீட்டும்
பூச்சிகளோடும் பூரிக்கும்
சண்டினத்தனங்களும்
சமர்களும் கூட தெரியுமதற்கு
வென்ற குளிர்ச்சியும்
விடையற்ற துயர்களும் பல
போட்டுக் குமையும் முகமுமது
காற்றடித்ததன் மேனியில்
கனிஸ்டாவின் மலைவேம்பிலைகள்
மீண்டும் துளிர்போமென
பேசிக்கொள்ளும் சில வேளை
அகாஸியும் சொல்கெய்மும்
நேற்றுக் கடந்தது போல்
நெஞ்சில் நினைவின் ஈரம்
ஏமாற்றிவிட்டதாயும்
எரிச்சலுமுண்டு பயணங்கள் மீது
காக்கா கடை சந்தியின்
கண்ணசைவின்றி
பரவிப்பாஞ்சான் காதல்
பள்ளியறைக்கு ஒப்பேறா
செல்லும் வழியொன்றாய்
திரும்பும் இடமல்ல
நினைவுகள் பெருக்கெடுத்து
அரும்புமிடமது
வண்டிலில் திரும்பினார் சுப்பர்
வால் கிளப்பி சாணமும் விழுந்தது
பெண்டிலோடு டபிளாய்
பெரிய கரியல் கீறோவில்
பிறக்போட்டு திருப்பினான் பெரியதம்பி
நிண்டு கொண்டுழக்கி வந்து
குண்டு குழி பார்க்காமல்
குமரிகளுக்காய் திரும்பினான் சூரி
அங்குமிங்கும் பார்த்து
அமசடக்காய் திரும்பினாள் ராணி
சொண்டுக்குள் சிரித்தபடி சுமதி
கண்டிப்பான முகத்தோடு
அதிபர் செயராசா ராசேந்திரம்
ஏகேயோடும் கொஞ்ச இளசுகள்
இறுதி ஊர்வலங்களும்
எத்தனையோ திரும்பின அச்சந்தி
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...