Sunday, March 6, 2022

வீட்டில் இருந்தால் விசேட கழிவும் விதியை வரையும் சித்திரகுப்தரும்-பொன்.காந்தன்

 

பாசக்கயிறு திரிப்பில்
படு பிஸி எமலோகம்
பத்தரைக்கொன்று
பத்தே முக்காலுக்கொன்று
பயில் குளோஸ்
உத்தரவுச் சத்தமும் உச்சம்
ஒக்ரோபருக்குப் பிறகு
ஒரு மாதம் லீவும் கேட்கிறார்கள்
எமனின் அசிஸ்ரன்ற்
அக்கிர சந்தாணியை அகலவிரித்து
சித்திர குப்தனார் சீரியஸ்
இன்னும் ஓராண்டிருக்கும்
ஒல்லி ஆட்டையும்
எட்டு மாதமிருக்கும் எலியையும்
எடுத்ததற்கு
விசாரணையும் கமிசனும் அங்கு
போன முடக்கத்தில்
பிறந்த நாள் கும்மாளமிட்டவர்
குந்திக் கொண்டிருந்தார்
ஊரடங்கு வேளையில்
உள்ளொழுங்கை விட்டு
கள்ளடிக்க போனவரின்
கணக்கும் முடிக்கப்பட்டிருக்கிறது
மாஸ்க்கை
தலையில் கவிழ்த்தவரை
தடவிப்பிடித்தேத்தியதை
எமனின் ஆள் எடுத்துரைக்கிறார்
பாசக்கயிறுகள் ஏற்றியபடி
பல எருமை மாடுகள் தயாராய்
யாழ்ப்பாணப் பக்கமென்றும்
சித்திரகுப்தரின் சிண் குசுகுசுக்குது
கந்தசாமியின் பெடியனின்று
ஐந்தாறு பேரோடு
இரவு ஆட்டம் போடப்போவதாயும்
ஒற்றர்கள் வந்து
ஓதிக்கொண்டிருந்தனர்
தலைவிதி பக்கங்களில்
தடவிப் பார்த்து பார்த்து
சிவப்பு பேனாவிலும் கோடுகள்
சொர்க்க வாசல்
தற்காலிகமாய் தடைசெய்யப்பட்டதாக
அறிவிப்புப் பலகை
காட்டற்றாக் சலரோகம் பக்கவாதம்
இப்படியானவைகளுக்கு
இயமலோகச் சலுகையாம்
நித்தம் குடி நிற்காத கசிப்பு கஞ்சா
பாதியாய் ஆயுள் குறைத்து
பறிக்கப்போவதாய் முடிவு
கொரோனா விசேட பணிமனை
இரவு பகலாய்
இயமன் தலைமையில் இயக்கம்
வீட்டில் இருந்தால்
விசேட கழிவுண்டாம்
வீதியிலேயே திரிந்தால்
விதி மறுபரிசீலிப்பாம்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...