Tuesday, March 8, 2022

போகன்விலா நாட்கள்-பொன்.காந்தன்

 

அப்பாவின் சம்பள நாளில்
நான்கு புது எவரெடி வீட்டுக்கு வரும்
அனோட் கதோட் தெரிந்திராத நாட்கள்
கறுத்த பூனையை ரசித்த விழிகள்
பனசோனிக் ரெடியோவின்
பழைய பற்றரியின் தகட்டில்
நூல் கோர்த்து
இழுத்து சுற்ற பொழுது சாய்ந்தது
ஒரு மூன்றாம் வாய் பாடு
பாடம் செய்தால் போதும் என்ற இரவு
உணவு தட்டில் ஓரத்தில்
பாவக்காய் துண்டுகள்
குறிஞ்சா வறையில் கொஞ்சம் இருக்க
அம்மாவின்
ஆரோக்கிய வகுப்புக்கு இடையே
முட்டை பொரியலை மட்டும்
கிளறி தின்று விட்டு
கடவாயில் புட்டோடு தழுவிய தூக்கம்
பிபிசி என்ன சொல்லும்
வெரித்தாசுக்கு காத்திருப்பு
எதுவும் இல்லாத
தேன்கிண்ணம் கேட்க
அம்மா மீட்டர் பிடித்த முன்னிரவு
சாமக்கோழி
ஒவ்வொரு வீட்டு கோடியிலும்
சிலவேளை மர நாய் வந்தால்
அப்பாவின்
ஐந்து பற்றரி டோச்
வளவு முழுக்க பாயும்
அயல் வீட்டு செருமல் ஓசைகள்
இரவுக்கு அழகாய்த்தான் இருந்தன
மண் கிணற்று தவளை சத்தங்கள்
சில் வண்டுகள்
கும்பிடு பூச்சிகள் வெட்டு கிளி
பாம்பு கொட்டாவி மணம்
இரவுகளை சொந்தம் கொண்டாடின
போகன் வில்லா
சிலவேளை பாவாடையோடு மட்டும்
சந்தி கடையில்
மா அரை கிலோவும்
புல்டோவும் ஆட்டுக்காலும் வாங்கி
தோடம் பழ இனிப்பை
கொடுப்புக்குள் வைத்து போனது
இந்த அலறி
அறுநாக் கொடி தெரிய
பொத்தான் வைத்த கழுசானோடு
தூக்கனாங் குருவி கூடு பார்க்க
அம்மாவுக்கு தெரியாமல் ஓடியது
புளுதி படிந்த கால்கள்
எதை எதையோ வேலிகளில்
பிடுங்கி உண்டு
காலத்துக்கு வர்ணமான கறைகள்
குரும்பைகள் ஈர்கில்கள் சிறட்டைகள்
கொப்பி தாள்கள்
அம்மாவுக்கு தெரியாமல்
பொவினுக்குள்ளும் களவெடுத்த நூல்
பின் வேலி முள் முருக்கில்
சிக்கி அல்லாடிய கொக்கு பட்டம்
அப்பாவின் பழைய வெட்டி கிழித்து
கட்டிய அதன் வால்
எதிர் காலம் எப்படி இருக்கும் என்று
எதையும் நினைக்க விடவில்லை
இப்படியே
அழகாகவே இருக்குமென்று
போகன் விலாவுக்கும் அலறிக்கும்
ஒரே ஒரு பொய் மட்டும் சொல்லி இருக்கிறது
இன்றைக்கு முற்றத்து மணல்
பூனை பொந்துக்குள்
எப்படி நம்பி கைவிடுவது
அது புதை குழியாகவும் இருக்கலாம்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...