Tuesday, March 8, 2022

பஸ் ஸ்ராண்ட் புராணம் -பொன்.காந்தன்

 

பழைய நண்பர் ஒருவரை
பஸ் ஸ்ராண்டில் கண்டேன்
தலையை ஆட்டியவர் பிறகு
தடவினார் கண்களாலே
துளையில் பார்ப்பது போல
துகிலை உரித்து துளைத்து
முளையிலான சினேகத்தை
முடிவாய் கண்டு விட்டார்
குழையை கண்ட ஆடாய்
குதூகலம் போல் ஆளுக்கு
எடேய் என்றென் பெயரோடு
இடை வெளி குறைத்து வந்து
மடையா மாஸ்க்கில் தடுமாறி
ஒரு மாதிரி சுளையாயுனை
ஊ கித்து விட்டேன் என்றார்
தலை பாதி சொட்டை நரை
விலை வாசி ஒமிகுரோனூசி
சளியோடு இருமல் இளைப்பு
சாமத்திய வீடு கலியாணம்
சுழியோடிப் பிடித்த புதினம்
சுகர் விபி கொலஸ்ரோல்
சுதி பண்ணும் பெடிபெட்டை
மெசெஞ்சரிலவள் ஆரோ
மின்னக்கெட்டு இதயம்விட
மனிசியின் கண்ணில் பட்டு
மதவடியில் நின்றென்னை
மணி கணக்காய் மன்றாடி
ஒருவாறு மசிய வைத்து
ஊர் கோயில் சந்நிதியில்
கருவாயன் உனை ஏற்று
கைப்பிடித்த நாள் தொட்டு
பெறு மாதம் எப்போதும்
பிடயன் நீ கடித்த தாலே
இதுபோதா தென்றுனக்கு
இன்னொரு சில்மிஷமோ
கலை கொண்டு நின்றாடி
கதவடி சுவர் திசையில்
காளி ஆத்தாள் வீசி விட
வடிவான போன் டிஸ்பிளே
பதினாறு துண்டு வெடிப்பு
பல கதைகள் சொன்னவரோ
முடிவாக என்னை பார்த்து
பதின் மூன்றோ சமஸ்டியோ
பரஸ்பரம் எதுவுனக்கு
சமரசம் ஆகும் என்றார்
பொறு வாறன் என்று நானும்
புராணம் ஒன்று பாடலானேன்
பெரும்பாலும் என் நாட்கள்
சரி பாதி முழுக்க மண்ணில்
கர்த்தாலும் ஊர் வலமும்
கை குண்டும் கல் எறியும்
தெருவோரம் பிண நாற்றம்
வயதிரண்டு வேளையிலே
வட்டு கோட்டை தீர்மானம்
வயித்துக்குள் இருக்கும் போது
முளை கொண்ட போராட்டம்
மண்ணளைந்த பருவத்தில்
என்பத்தி மூன்று கலவரம்
எழும்பி நடக்கும் போது
எரிகிறது யாழ் நூலகம்
என்ன சொல்ல நானுனக்கு
எது பொருத்தம் எனக்காகும்
டிப்போ சந்தி பக்கமாக
கொப்பே கடுவா நிக்கிறாராம்
அப்பர் வளவில் ஓர் இயக்கம்
ஆயத்தமாய் நிக்கிறதாம்
பக்கம் பக்கமாய் கேட்டதிது
படுக்கும் வேளை நாய் குரைப்பு
புத்தகத்தை வீசி விட்டு
வெடி சத்தம் கேட்ட வேளை
எத்தனை நாள் ஓடியிருப்பேன்
எது பொருத்தம் எனக்காகும்
அப்பாவின் தொப்பையிலே
ஆற அமர அமர்ந்து மாலை
வானத்தை பார்க்கும் போது
ஆனையிறவு போகும் காகம்
அயல் காட்டு வவ்வால் கூட்டம்
கொய்யா தேடி கூடி வரும்
மெய்யாயிது நிலைக்குமென
மென் மனம் சிலிர்க்கும்போது
ஐயாமார்கள் அமர் கொண்டு
அனுப்பினரே வானில் கெலி
வெடி வைத்து ஊரெல்லாம்
விசர் கொண்டு அது திரிய
மரம் வழிய மறைந்தபடி
புலி வந்து போனதென்று
புது சிலிர்ப்பு உலவுகையில்
பதின் வயது தொடக்கங்கள்
தெரு வழிய நோடீச்சு
தெரியாமல் வாசிச்சு
எணை அம்மா என்று வந்து
எடுத்துரைத்த அக்கதைகள்
படு கொலை இரத்த கறை
விடிவானம் தேடும் வரி
ஒரு விதமாய் தீ விதையும்
எப்பாலும் இருந்தொரு நாள்
இடைவெளியாய் வசந்தநாள்
அப்போது காத்தவ இராயன்
கச்சான் திருவிழா தியேட்டர்
நிலைக்காமல் வெறிச்சோடும்
அப்போது வானில் புக்காரா
பொம்மர் சகடை சீ பிளேன்
இப்படி பல வெள்ளோட்டம்
எம் ஊரில் குண்டு கொட்டி
குழி பறித்து போர் ஆளும்
எது பொருத்தம் எனக்காகும்
இடைவிடாமல் பட்ட துயர்
எப்போதும் இனி வராதிருக்க
முப்பதாண்டு போர் வாழ்வில்
முடிவாக வட்டு வாகல்
ஒட்டு துணி ஒன்றோடு
ஒரு சல்லி காசுமின்றி
வாழ்க்கை பட்டு அகதியாக
ஒரு பார்சல் சோத்துக்கு
வரிசையில் நின்ற வாழ்வு
இப்போது ஏதோ தினமும்
எழும்புவதும் தூங்குவது
என்றாகி கழி கையிலே
அப்போது இருபதாண்டு
அடிபட்டு நண்பரோடு
பாண்டியனில் நாணுண்ட
குளிர்களியின் சுவைதேடி
அலைகிறது என் மனது
வளர் மதியின் கைபடவே
வைப்பகத்தில் போயெடுத்த
பத்து ரூபாய் தாள் கொண்டு
ரொற்றிக்கோ திடல் முன்னே
பெட்டிகடை மறைவில் நின்று
இழுத்து விட்ட வீடிப் புகை
கற் பூரம் போல் மனதில்
கரைகிறது இவ் வேளை
அப்போது காவல் துறை
அரை கண் வைத்து விட்டு
பொறுப்பாளர் வரை போய்
புகைய விட்ட என் லீலை
கதை கேட்டும் காணாமல்
அவன் கவிதை வேண்டுமென
அணைத்து நின்ற அக்கரத்தை
இத் தீரா வெளியெ ங்கும்
தேடினாலும் கிடைக்காது
எது பொருத்தம் எனக்காகும்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...