Tuesday, March 8, 2022

தேற்றுவார் அற்ற தெருவில் தேம்பியழுது பலனில்லை -பொன்.காந்தன்

 

ஏரியா பொறுப்பாளரும் ஏற்றவரும் பேருந்தும்
கண்ணுக்குள் புறப்பட்டு
காத்து நிற்கின்றன இன்று
தடைகளை எல்லாம்
தடிமன் போல சீறி எறிந்திடுங்கள்
வரலாற்று முனிவனுக்கு
வக்கீல் நோட்டீசு அனுப்ப முடியாது
சேரன் செங்குட்டுவனும் சோழப்பெருவழுதியும்
கல்லூரியில் எங்களோடு சகபாடிகளா
வள்ளுவன் என்ன
வருகை தருவிரிவுரையாளரா நமக்கு
இல்லையே
காலத்தில் வாழவில்லையா
வயிரம் பாய்ந்த இதயத்துள்
வடிவால்களை வெட்டிவிடுவோம்
ஈயமாக்கி
இந்த கண்ணீரை ஊற்றிவைப்போம்
அந்த நள்ளிரவு நாட்களை
நடுநிசியை
பெட்டகத்தில் வைத்து மூடி
பெருங் கால நதியில்
கரை சேர அனுப்புவோம்
கல்லறை இல்லைத்தான் இன்றெம் கண்மணிகளுக்கு
என்றாலும்
கோடி ஆண்டுகளுக்கான திருவாசல்
எங்கோ
இந்த இருளுக்குள் இருக்காமல் போகாது
நம்பியாண்டானின் திருமுறைகளாய்
நமக்கும் ஓர் இடமிருக்கும்
கொன்றவனின் சட்டத்துக்குள் நின்று
கோட்டால் துலக்கி இன்று பயனில்லை
இன்றெங்கிருக்கிறது மனுநீதி
எவன்தான் சிபி
எங்கள் சமர்ப்பணங்களுக்கெல்லாம்
காலம்தான் நீதிபதி
காத்திருக்கவேண்டும் தீர்ப்புக்கு
கால்நூற்றாண்டு அரைநூற்றாண்டு
காலம் பெருத்தும் நீளலாம்
சந்ததிகளுக்காகத்தானே சாவுகள் நடந்தன
சரித்திரம் சிரிப்பை அவர்களுக்கு திருப்பிக்கொடுக்கும்
தேற்றுவார் அற்ற வீதியில்
தேம்பி அழது பயனில்லை
போற்றிப்பாடிய காலத்தின்
பாகம் ஒன்று முடிந்தது
நேற்று இந்த தெருவில்
யாரோ ஒரு இளவல்
அம்மா அப்பா என்றழைக்க
உகுந்த கண்ணீர் உருண்டு நிலம் நனைய
இறந்த பிள்ளையாய்
அணைத்த ஈரம் இருந்தது
பாரமும் சற்று கரைந்தது
கட்டிணைத்து முத்தமிட்டு
வட்டில் அப்பமும் வடையும்
சில்வரில் பிடித்த சோடாவும் படைக்க
கல்லறைகள் இருந்தன
கத்தி அழுது புறப்பட
நெஞ்சில் கல்லொன்றிருந்து விழுந்ததாய்
கவலைகள் கொஞ்சம் தொலைந்தது
இன்றெதுவும் இல்லை
எலும்பையும் விட்டுவைக்கவில்லை
ஓநாய்களுக்கு
எப்படி பூங்காற்றை தெரியும்
எருமைகள் சேற்றில் படுக்கும்
பாலாவது தரும் பண்படுத்தும் நிலம்
கழுதை பொதி சுமக்கும்
அதுகளின் பேராலெல்லாம் திட்டமுடியாது
புதிதாய் தேடவேண்டும்
சவத்தையும் கிளறும்
சனியன்களை வசைபாட
இன்றுமெம்
இனியர்களை நினைக்கிறோம்
இறந்தோரை மறந்தோரில்லை நாம்
நடுகல் ஊன்றுவோம் நெஞ்சில்
நம்மையும் திரும்பிப்பார்ப்போம்
கண்ணில் ஒழுகுவது
கலப்படமா என்றும் காண்போம்
உள்ளத் திரியெரிய
உன்னதரை வணங்குவோம்
கண்ணில் தோன்றுமவர் கனவுக்கு
சத்தியமாய்த்தான் வாழ்கிறோமோ
இல்லை
இதுவும் ஒரு கடைச் சரக்கா
ஏமாற்றவும் நன்றாய் பழகிவிட்டோமா
வெள்ளையடித்து
வீழ்ந்தோர் பெயரால்
சொறிகளை மறைக்கிறோமா
என்னென்று சொல்லத் தெரியவில்லை
என்னையே
எனக்கும் விளங்கவில்லை
நல்லவழி காட்டுக காவல் தெய்வங்களே!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...