கையெழுத்தென்றுக்காய்
கதவடியில் வந்து நின்று
உய்வதற்கு ஒரு துணையாய்
உள்ளுக்கு அழைத்திருத்தி
ஐயங்கள் தீரப் பார்த்து
அடியிலோர் இடத்தில்
மையில் தோய்த்தழுத்தி
மடக்கிச் சுழித்திழுத்து
வெயிலிலும் மனம்குளிர
விடைபெற்ற நாட்களுண்டு
பொய்யில்லை
பட்டியலில் பெயர் வராமல்
பாழாப் போகவென்று
அட்டியலும் நகையும்
அறையில் வைத்தபடி
பட்டிணியில் கிடப்பதாய்
பருப்பு அவியாமல்
திட்டியும் தீர்ப்பார் சிலர்
பெட்டிசமும் கூட
எட்டுப் பத்து தாளில்
இரவிரவாய் எழுதும்படும்
மொட்டைக் கடிதங்களும்
போய்ச் சேரும் மேலே
எத்தனை தாங்குவீர் நீர்
கள்ளன் வந்தாலும்
பிறகு வெள்ளம் புகுந்தாலும்
வில்லங்கம் சுமப்பது
விதானையார்கள்தான்
வறட்சி என்றொரு
வரிசை நிற்கும்
கசிப்பென்றும் கடிதத்தோடு
கக்கூசு இல்லை
காணியொன்று வேண்டும்
உக்கியது தற்காலிகம்
ஒட்டுப்பொருத்து வேண்டாம்
மப்பில் வந்து
மனுசன் அடியுதை
இப்பிடி எத்தினைவரும்
பத்தியம் பார்க்கும்
பரியாரிகளும் நீங்கள்
கள்ளமண் முறைப்பாடு
கதியால் எல்லைப்பிரச்சனை
கரக்டருக்காய் காவல்
தற்கொலை முயற்சி
தண்ணீர்ப் பற்றாக்குறை
அல்பாபெற் ஓடரில்
ஆயிரம் பிரச்சனை
வாசலில் நித்தமிருக்கும்
புதிதாய் இப்போது
போதை கஞ்சா காவாலிகள்
இல்லா ஊரையாக்க
காளி திரிசூலி
ஊழிக்கூத்தன் அவதாரமும்
ஆகவேண்டும் விதானையார்
மீளாய்வு இடாப்பு
ஆராய்வு அட்டவணைகள்
தாராளமாய் வந்து சேரும்
தலையிடிக்கும்
வாழ்வாதாரம் கொடுப்பு
கணக்கெடுப்பு
கால்கையிழந்தோர்
கருணை மனுக்கள்
தாய்தந்தை இழந்தவர்க்கு
தயவும் துணையும்
ஓய்வின்றிப் பலகரத்தால்
ஒரு நாள் முழுக்க தேயினும்
வாயில் வந்தபடி
சிலபேசும்
வருத்தமாயுமிருக்கும்
ஆயினும் விதானையார்
நீரும் கடவுளென
நினதூர் நோக்கும் காலமிது
பேயும்கூட வெருளும்
பெரும் கொள்ளை நோய் வேளை
பாயிலெம்மைப்போல்
பருப்பும் சோறெனினும்
இருப்போம் வீட்டுக்குள்ளென
இருக்க முடியாது நீங்கள்
முடக்கத் தெருவில்
தனித்துப் போகிறார் விதானை
தனக்கும் கொரோனா வரும்
தனித்துப்போகும் தன்வீடு
என்று பணிக்குப் போகாமலில்லை
சமைக்கப் பல வீடுகளின்
பட்டியல் போடுகிறார்
சனியும் ஞாயிறும் கூட
இரக்கப்படுவதாயில்லை
பொறுப்புக்கூட
புனிதம் இக்காலப்பணி
பெட்டிசம் எழுதும் கைகள்
நிச்சயம் உங்களை
விதானையார் கைகூப்பும்
பட்டிணி வயிறுகளறிந்து
இட்டிடும் நிவாரணங்கள்
இற்றைப்பொழுதில்
இறைவனுக்கு நிகராக்கும்
முந்திய காலங்களில்
அந்திராப்பகலாய்
எந்திரமாய் பணிசெய்த
எத்தனையோ விதானைகளும்
கண்ணுக்குள் வந்துபோகின்றனர்
காலம் கைவிடாது
களப் பணியாளர்களை
No comments:
Post a Comment