மேடு பள்ளத்தில்....
கைப்பட்டாலே கறந்து தள்ளும்
வெள்ளாட்டு முலையாய் மேகம்
வேலிப் பூவரசின் விடாய் தீர்ந்தது
விடிய விடிய
அடிவரை படர்ந்தது மழை
இச்சை குளித்த இராவினால்
பச்சையாய் நாணியது நிலம்
மினிஸ்கேட்டை
உருவியெடுக்கவோ மின்னலடிப்பு.
சன்னலை திறந்தால்
புல்லில் சில்லென்று சிலுமிசம்
கார் காலத்தோடு கலவியில்
கண்ணிமையில்
தீரா மயக்கமாய் தெரு
என்ன லீலை செய்யும் மழை
வன்னியிலதை காண
தண்ணியாய் அவதாரமும் அழகு.
சொல்லுக் கேட்காத
கல்லூரிப் பசங்களாய்
சுற்றித்திரியும் காட்டாறுகள்
போதுமென முனகும் வரை
மேடு பள்ளத்தில் மினக்கெடும் மாரி
அடியில் தகதகப்புடன்
நெடுவழி காத்திருப்பை
அணைத்து புரளும் வெள்ளம்
பூனைக்காமமாயும்
கண் திறப்பதற்குள் கரையுடையும்
கட்டுக்கரைக்குள்
அஞ்சலைகளோடு ஆறுதலாய் களித்து
அந்தபுரக்கதவு திறந்து வான்பாயும்
கனகராயனில் தொடங்குமொரு
கந்தர்வத் தாவணியை
பாலை வீரைகள் பார்த்து வாயூறும்
எட்டியிடையில் கிள்ள
முதிரைக்கு மோகக் கிளை சரியும்
நொட்டை காவாலிகளாய்
பட்டையுரியாப் பருவ மரங்கள்
எப்படியோ பொங்கும் ஆவலுடன்
இரணைமடுவில்
புதுமணச் சந்திப்பொன்று நடக்கும்
பூட்டியிருக்கும் கதவுக்குள்
கண்டா வளை வருடச் சுரக்கும்
அம்ப காமத்திலும் விரல்கள் நுழையும்
ஒட்டி நின்று பார்க்கும் வட்டக்கச்சி
நெட்டிமுறித்த பட்டமரங்கள்
நீள் உதட்டு அழகிகளை தேடும்
கொட்டித்தீர்க்கும் கனவுகளை மழை
கூடிச் சிலிர்த்து
முட்டி வரும் வார்த்தை சொல்ல
முரசுமோட்டைக்கு தூதுவிடும்
உச்சி குளிர்ந்த இரகசியத்தை
உருத்திரபுரம்
கூழாவடிக்கும் குசுகுசுக்கும்
கோவிந்தன் கடையடியில்
பன்னங் கண்டியில் வயப்படும்
கள்ளக் காதலாயும் கரை நெடுக
புற்களோடும் புணரும்
குஞ்சு மணிக் குத்திக் கரணமும்
கண்ணில் பட்டு கடக்கும்
சன்சில்க் நுரையை
சமாகால முகவரியாக்கும் மழை
என்ன இது சேர்பெக்சலா
இரண்டாம் வாய்க்கால் தண்ணி
எடுத்துப்போகும் புதிதாய்
வாடிப் போன செடிகளின்
கோடிச் சிரிப்பில் கரையும்
சொகுசு வண்டி ஊத்தைகளை
சொல்லாமல் தவிக்கும்
இருந்தாலும்
சேறும் வியர்வை வாசமும்
மாரி முகிலை மயக்கும் வரம்
உழவனின்
காலும் நனைகிறது மழையில்
கார்காலம் பொழிகிறது.

No comments:
Post a Comment