Sunday, March 21, 2021

ஆகமம்-பொன்.காந்தன்



கடவுளை நெருங்க

நந்திக்கு முன் சானிடைசர்
கைகளுக்குள்
ஆகமம் பிசுபிசுப்பித்தது
கேணியில் பரந்த நீர்
ஒரு குப்பிக்குள்
எனக்கும் கடவுளுக்கும்
வேறொரு இடைவெளி
மாரி காலக்குளிரில்
திருவெம்பாவையில்
மறுபக்கம் திரும்பி
அலாரத்தை நிறுத்தியபோது
தொடங்கிய இடைவெளி
வகுப்பு பதினொன்றில்
கணக்கு பாட புள்ளியில்
நேர்த்தியில் ஏற்பட்ட
நம்பிக்கை துரோகம்
இன்னும் தள்ளி வைத்தது
காதல் விவகாரத்திலும்
இழுத்தடிப்புக்களால்
ஏற்பட்ட மனக்கீறல்கள்
கடவுளுக்கும் எனக்கும்
இடைவெளி தொடர்ந்தது
கடவுளும் நானும்
புதிய இடைவெளியில்
சரீரத்தில்
சானிடைசர் மணங்கமழ
மஞ்சள் பட்டில் அவனும்
நீல முகக்கவசத்தில் நானும்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...