Sunday, March 21, 2021

கலியாணம்-பொன்.காந்தன்

 


மான்ரில் கட்டி
மண்ணெண்ணை விட்டு
பின்னால் தொங்கிய
பெற்றோல் மாக்ஸை
பின்னேரமாய் தூக்கி
முற்றத்தில் வைத்து
முறுக்கி திருப்பியதன்
முள்ளுக்கு மேல் சீறும்
எண்ணை அடைப்பு பார்த்து
திண்ணையில் தூக்கி
அண்ணையொருத்தர் அதற்கு
ஆட்டுப்படாமல் காத்தடித்து
ஆனைப்பெட்டியில் தட்டி
அதற்குச் நெருப்பு செருகி
ஊதிப்பிடித்து மான்ரில்
பாதிகருகாமல் முழுதும்
பழுத்து நிறக்கும்படி திருகி
வீதியில் போறவரும்
வெளிச்சம் பட்டுத்திரும்பி
விசேசமாக்கும் எனப்போகும்
அந்நாள் கலியாண வீடு
முன்னால் நாலைந்து நாளாய்
முறுக்கு பணியாரம் சுட
பின்னால் அயல் அட்டையில்
பெண்டுகள் கூடி சேர்ந்து
இரவலாயும் இரும்புச்சட்டி
அச்சுப் பலகார அகப்பை
அண்டாக்களும் தடவியெடுத்து
கொண்டையை பிடித்து
குனிய விழாமல் முடிஞ்சு
எத்தினை பேணியென்று
பத்துக் கலியாணவீடுகளில்
பல காரம் சுட்டவரை கேட்டு
குந்தியிருந்து கொள்ளி ஊதி
இலட்டு அரியதரம் சிப்பி
பயித்தம் பணியாரமென்று
கோடிக்குள் இழுக்கும் வாசம்
குலையோடு வாழைக்கும்
புகையடிக்கும் வேலையொடு
இலை வெட்டிக் கொண்டு
இரண்டொருபேரை விட்டும்
இளவட்டங்களை கூப்பிட்டு
எட்டுப் பத்து குழிகள் வெட்டி
நட்டுத் தடிகளுக்குள் மேல்
பத்துவருடமாய் சூடடித்த படங்கு
பொத்தல் பீத்தலை மறைத்து
குத்தலாயாரும் சொல்லாமல்
கோணல் நேர் முகடு பார்த்து
முற்றத்தை மறைத்து நீண்டு
முன் செம்பரத்தைக்குள் செருகும்
முழு நீளப் பந்தலிட்டு
கத்தரிக்காய் கிழங்கு பயிற்றை
இரவிரவிரவாய் முறித்து
எத்தினை பேர் வந்தாலும்
எடுக்கக் குறையாக் கிடாரத்தை
நித்திரை முறியாமல் மூட்டி
நெல்லும் நிறைகுடமும் பன்னீரும்
சந்தணக் கும்பாவை நீட்டி
நிறைந்த முகமொன்று
நெற்றியில் தொட்டு வைத்து
பற்றிக்கையில் அழைத்துவந்து
பாயில் இருத்திவிட
பால்த்தேனீரும் பலகாரங்களும்
இறேயிலொரு இளவழகி
எடுத்துவந்து பரிமாற
மேயுமந்த மானை கண்கள்
மெல்லிய கனகாம்பரப் பூக்கள்
சாயும்போது கூந்தலில் உதிரும்
அழகு காய்ந்து போன பின்னும்
கலியாணமொன்று வந்தது
மண்டபத்தை எடுத்த
மணவீட்டார் அழைப்பு
நின்றபடி போயெடுக்க
நீட்டுக்கு கறிசோறி பானம்
உள்ளுக்குள் பிறசர் டயபற்றிஸ்
ஒவ்வாமைகள் கழித்து
செல்வ் சேவில்
தின்றுவிட்டு திரும்புகையில்
என்னவேணுமென்று
ஏழெட்டுப் பேர் ஓடித்திரியும்
பந்தி கண்ணுக்குள் வரும்
பாயாசம் இலையில் வழுக்கும்
பெரிய வடை
நாசியில் கிடந்து மணக்கும்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...