தணித்த கை விளக்கை
தடவிப்போயருகில் தீண்டி
எடுத்துக் குந்தில் வைத்து
எழுப்பி பெடிபெட்டையை
ஏதாவது படிக்க வென்று
உறுக்கிச் சொல்லி விட்டு
கடப்பை அவிழ்க்க போக
காறிஉமிழ்ந்து கொண்டு
இடுப்பி லிழக்கித் தூக்கி
இளகும் பனியின் வேளை
தலையில் கவிட்டு நடந்து
இடையில் வேப்பங் குச்சு
இழுத்து வாயில் செருகி
வளவின் முன்னே நின்று
வாசல் தெருவை பார்த்து
விடிந்தும் விடியா செக்கல்
கரைந்து போகும் காலை
புளுதித் தெருவில் இரவு
புரண்ட மாடு கொஞ்சம்
போட்டுக் கிடந்த சாணம்
எருவாய் எலுமிச்சைக்கு
எடுத்து கையால் அள்ளி
அடிக்கு வந்து போட்டும்
அருகால் தூரக் கடைக்கு
அடுக்கி பாணைக் கட்டி
பெரிய கரியல் சைக்கிள்
பணிசும் இடையிலேற்றி
பரப்பி வாசம் மணக்க
படலை கடந்து மிதிக்க
கறையான் வேலி தட்டி
கதியால் கம்பி பார்த்து
வளையும் வாழைதள்ளி
வடிவாய் முண்டு குடுத்து
கரையால் வளவு பின்னே
கால்கள் புல்லில் குழைய
பனியின் ஈரம் படர்ந்தும்
குளிரில் உறைந்து மேனி
குத்தி மயிர்கள் சிலிர்க்க
இலை தளிர்கள் செடிகள்
கொடிகள் கமுகு மடல்கள்
உதிரும் ஓலை கனிகள்
உயரும் துளிர்கள் பயிர்கள்
காய் கிளைகள் குலைகள்
பிஞ்சு கொந்தல் வெம்பல்
எல்லாம் பரந்து பார்த்து
கப்பி துலாவில் தண்ணி
பட்டையி லள்ளிக் கோலி
பளிங்கென மேனியலம்பி
கொட்டுக்குள் நீறெடுத்து
குறிகளும் இழுத்துகுந்தில்
அப்புகள் இருக்கும் வேளை
ஆதவன் எழுந்து வருவான்
உப்புடன் கலந்து பழைய
உறியினில் இறக்கி சோறு
பச்சை மிள காயும் கலந்து
பக்குவம் சிறக்க மேலும்
ஊறுகாய் வெங் காயமும்
ஆறு பேருக்காய் கிண்ணம்
நூறு வாய்கள் ஊறி வழிய
நூற்றெட்டு தேவர் இரசிக்க
அமுது போல் அதையேந்தி
ஆச்சிகள் வந்து நிற்க
அக்காலை விடிந்துவிடும்
அகன்றிருக்கும் ஓரிருள்
எப்போதுமிது இனிக்கும்
அவ்வளவு அடிவரையில்
எப்போதோ நட்டவைகள்
எழுவானக் கிளைகள்விட
கப்புக்கு அறுத் தெடுக்க
கடப்படியில் நின்றபடி
குப்பாடி கூட்டமொன்று
குறிவைத்து பார்க்கிறது
இது அப்பு நட்டமரம்
அவர் நினைவை பூக்கும்
கப்பில்லை அடியிருந்து
அப்புவின் கனவு இது
உச்சியில் கிளை அதோ
உறக்கமில்லை அதற்கு!

No comments:
Post a Comment