கற்பூரமும் கொழுத்தி
உண்டியலுக்கும் போட்டு
ஐஸ் பழமும் குடிச்சு
அம்மம்மா குழலும்
தண்ணித்துவக்கும் வாங்கி
கச்சான் சுருளும்
கடலைப்பையும் வாங்கி
மிச்சமாயும்
ஒன்று இரண்டு ரூபாயுடன்
பறவைக்காவடி
பால்காவடி
மேளச்சமா எல்லாம் பார்த்து
செருப்பும் தொலைக்காமல்
வீடடைந்தோம்
வெறும்
பத்து
இருபது ரூபாவோடு போய்.
எதுவும் மாற்றமில்லை
முருகன் கையில் வேல்தான்
வைரவரின்
வாகனமும் நாய்தான்
பிள்ளையாரின்
தொப்பையும் குறையவில்லை
விடிந்தால் திருவிழா
போய்வர
குறைந்தது
ஐயாயிரம் ரூபாய் வேணும்
ஏதோ ஒன்றை
வாங்க முடியாத
வருத்தம்
திரும்பும்போது இருக்கிறது
இப்போதெல்லாம்!

No comments:
Post a Comment