விரைந்திற்று எம் வீட்டுக் குயில்
விண்ணில் கச்சேரியாம்
விரைந்திற்று எம் வீட்டுக் குயில்
ஏற்க மறுக்கும் ஒரு பிரிவு
இதோ
அந்திமழை அழுதபடி பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
எஸ்பிபி எனும் ஸ்வரத்தின் முகம்
கைகுட்டையாய் கண்ணீரை ஒற்றிய
கந்தர்வக்குரல்
காலப்பயணத்தை தொடங்கிற்று
மண்ணில் இந்த காதல் இன்றி
உதடுவரை வந்து
உருண்டு விழுகிறது இதயத்தில்
அரும்பு மீசைப்பொழுதில்
திரும்பி பார்த்த விழிகளுக்கு
தீர்த்தமாக்கிய தேவகானமே
கரும்பு வில்லோடு நின்றார்க்கு
வசிய பாணமான வளையோசையே
நதியோரம் ஆடிய நாணலுக்கும்
வளைந்து கொடுத்த
வானவில்லின் மறுபிறப்பே
முரட்டுக்காளைகளுக்கும்
முறுக்கேற்றிய மின்னல்ரசமே
வரட்டு கௌரவம் இல்லாத
வாத்தியங்கள் கைகோர்த்த
கான நந்தவனமே
அரங்கமே வெறிச்சோடிற்று
தொடங்க மாட்டாயோ
உன் சங்கரா பரணத்தை
இயற்கை என்னும் இளைய கன்னி
பொத்தி வைத்த காதலை
பொன்னுலகொன்றில் சொல்ல
பூட்டினளோ உனக்கொரு தேர்
அந்த வானமழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
இப்போ இந்த பூமி அழுதாத்தான்
அந்த வானமே சிரிக்குமா
வானமகள் நாணும்
பொன்மாலை பொழுதில்
நீயில்லை என்ற வருத்தம்
வேறு உடை பூணுகின்றாள்
கறுப்புத்தானாம் இன்று பொருத்தம்
மலர்கள் முதன் முதலாய்
மௌனம் கலைத்த நாளிது
துயரின் மொழியோடு தேடுகின்றன
வானொலிப்பெட்டிகளை
தேன் குடமாக்கிய இசைமாமுனியே
காதல் ஊற்றில்லா கற்பாறைக்கும்
தேனை செவியில் ஊற்றி
தீராக் கனவில் மிதக்கவைத்தவனே
சங்கீதக் கற்காமலே
காலடி எடுத்துவைத்து
இங்கிதக்குரலாய் உலகாண்டோனே
தங்கிடக் கோடிபேர் இதயங்களிருக்க
எங்குபோகிறாய் எஸ்பிபி
மகாதேவன் மெல்லிசை மாமன்னர்
இட்ட கட்டளைக்கெமை பிரிந்தீரோ
கண்ணதாசன் வரிகளோடு
காத்திருக்கிறாரா
வாலி வா வா என்றாரா
காவிரி ஆறும் கைக்குத்தரிசியோடு
வாலிப முத்துக்குமாரும்
வரவேற்றானோ உன்னை
பட்டுக்கோட்டைக்கு பரவசமா இன்று
இனி என்ன மெட்டு
எப்படித் தொடங்கும் வரிகள்
ஏழுலகும் மயங்கும் இராச்சியத்தில்
மன்னனாய் ஆனதோ தெம்மாங்குயில்
காது குத்துச்சடங்கிலும்
ஓரமாய் உன் குரல் இருக்கும்
பாதிவெறியோடு
வீதி தெரியாது தடுமாறுகிறவனுக்கும்
காதில் ஒலித்த உன் பாடல்
கடைசிவரையும் மறப்பதில்லை
பாலுவின் பாடலைப்பாடியே
காதலில் விழவைத்து
வாழ்வை ருசித்தவர் பல்லாயிரம்
எங்கள் வாலிபத்தில்
உன் சுரங்கள்தான் எங்கள் சுகம் வரம்
இடைக்காலப்பாடல்களை கேட்டபடி
எத்தனை இரவுகள் இன்பமாகின
மழைக்காலத்தில்
எஸ்பிபி பாடல்கள்தான் கம்பளி
இராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் கண்ணோ
இதைவிட என்ன வேணும் இளவயதுக்கு
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
இதைவிட என்ன வேணும் இதயத்துக்கு
கான நதியே
உனக்கும் பின்னால் எனில்
ஓடியே வந்திடலாம் போல
இந்த உலகத்தை விட்டு
நாடுகள் கடந்தும் கனிந்த மழையே
வீடுகள் தோறும் விரிந்த
செங்கரும்பே
பொங்கியெழுந்த கடலலைக்கும்
ஈழப்புயலுக்கும் கூட வாய்த்தவனே
சங்கமம் ஆகினாய் எங்கும்
தேன்சொரிந்த கூடாய்
இசை பிழிந்த காடாய்
அசைவற்று கிடந்தது அமுதக்கடல்
விடைபெற்றீர் எஸ்பிபி
விண்ணுலகுக்கு வழியனுப்ப
பாட்டின் அடிமைகள் கோடி முன்னே
பாபநாசத்தை பஞ்சு அருணாசலத்தை
பாலசந்தர் பாலுமகேந்திராவை
பாலமுரளி கிருஸ்ணாவை சந்தித்து மகிழும்
மாலையில் யாரோவென
வேளை தவறாது புலம்பும்
ஸ்வர்ணலதாவின்
விசிறிகளின் விம்மலை சொல்லிவிடும்
ரிகே பட்டமாளையும்
கேபி சுந்தராம்பாளையும்
பாட்டு வயல் நாற்றுக்கள்
மீட்டியபடியே இருக்கின்றன
சீர்காழியின் குரலின்றி
சிலிர்க்குமோ கும்பாபிசேகம்
கந்தனை குளிர்விக்க
இன்னமும் ரிஎம்எஸ்
இசைக்கு அழிவில்லை
எஸ்பிபிக்கும் மரணமில்லை
இது ஒரு மறுவுலகப்பிரவேசம்
ஆளுக்கொரு தேதி வைத்து
ஆண்டவன் அழைப்பான்
யாரழுதால் அவனுக்கென்ன
காரியம் முடிப்பான்!

No comments:
Post a Comment