Wednesday, November 4, 2020

கெரோயினும் கிளிநொச்சியானும்-,பொன்.காந்தன்


நான் ஒரு கரவெட்டியான்
கார்த்திகேசு சிவத்தம்பி கற்ற பள்ளியில்
ஒதுங்கவேனும் இடம் கிடைத்தவன்
அயலிலே கரிகாலனின் ஊர்
வயல்களில் இறங்கினால்
குறுக்கே ஒரு கொஞ்சத்தூரம்
இந்த பாதிக்கர்வம்
என் பக்கத்திலேயே என்னோடிருக்கும்
மீதி கிளிநொச்சியான் என்ற திமிர்
ஊதி புழுதி தட்டி
உட்கார்ந்து விளக்கில்
பாதி வாழ்க்கை கழிந்த தொட்டிலது
ஆதி தமிழரின் இராச்சியம்
அழகுறப் பூத்துக்கிடக்க
ஏறிய கொடியை பார்த்து
கைகள் விரித்து பறந்த கிளிநொச்சி
நிழல் அரசை
நெற்றிக்கு நேரே தரிசித்து
உலகெல்லாம் வந்துபோக
உயிரெலாம் காந்தளாய் மலர்ந்தது
கதியில்லை என்ற தமிழருக்கு
கைவிளக்காய் அல்ல
கதிரவனே முன்னே
நடந்து திரிய
என் தலைமுழுக்க
நட்சத்திரம் பூத்த ஊர்
எது தமிழன் புகழென
பூமிக்கு நேற்று முரசறைந்த ஊரில்
இளைய தலைமுறை
இழுத்தாராம் கெரோயின்
இடிவிழுந்து போயிற்று என் மனம்
அதன் பிறகுதான்
என் பதினாறுப் பருவத்தில்
என்ன செய்தேன்
அவ்வினிய ஊரிலென்று
எழுதலானேன்
இது என் தேசத்தின் இளவல்களுக்கு
அனுபவிக்க நிறையவுண்டு
சில்லறைகளும் இல்லாத
காற்சட்டை பருவத்தில்
நாமெல்லோரும் சிரித்ததெப்படி
எதுவுமே இல்லாத காலத்தில்
எப்படி சொர்க்கத்தை கண்டோம்
சொல்லியே ஆகவேண்டும்
சிலவேளை கால்களில
செருப்பும் கூட இருக்காது
அம்மா தரும் சில்லறைக்கு
அலுவா புல்டோ சுவிங்கம்
சத்தியமாய்
இதுதவிர எம் வாய்க்குள்
எந்த கெட்டதும் போனதில்லை
பள்ளிக்கு முன்பு
ஒரு அப்பு கடை
பகல் இடைவேளையில்
பணிசுக்காய் போவோம்
சிலவேளை
அங்கு களவும் எடுத்து
அப்புவுக்கு
அதற்காக காசு கொடுக்கும்
சத்தியத் திருடராயிருந்தோம்
அப்புவின் திட்டுக்கள்
இன்று எனக்கு கவிதை
மீசை அரும்பும் வேளையில்
நான் மினக்கெட்டதெல்லாம்
பரந்தனிருந்து வரும்
ஒரு பவளக்கொடிக்காக
அவள் பார்வையில் எழும்
அந்த படபடப்பு
இன்னும் நெஞ்சைவிட்டகலா
நிரந்தர சங்கீதம்
எனக்கு போதையே அவள்தான்
கரடிப்போக்கில் விரியும்
வடக்குத் தெருவில்
விஞ்ஞானக்கல்வி நிலையம்
அது விட்டபின்
ஒரு கும்பல் ரம்பை ஊர்வசிகள்
மரியதாஸ் வாத்தியாரின்
சிலமனை பார்த்தபடி
திருவையாறு தெருநீளம்
தேவதைகளை
வீடுவரை சாய்த்து
இரணைமடுவை எட்டி திரும்பும்
வாலிப முறுக்கின் சுகம்
எந்த கெரோயின் கொடுக்கும்
சோதிநாதன் அதிபரை கண்டதும்
ஒதுங்கிச் தலைசொறிவதும்
விந்தன் சேரை கண்டால்
வெடவெடத்து குனிவதும்
மோட்சலிங்கம் வாத்தியார்
மெல்லிய புன்னகையோடு கடப்பதும்
மனோகரி ஆசிரியையை
எப்போதும் கொண்டாடுவதும்
கனகமகேந்திராவின்
பார்வைக்குள் அடங்குவதும்
என் பதினாறு வயதில்
பலமாக இடப்பட்ட கொங்கிரீட்
இப்படித்தான்
என்னை ஒத்த பதினாறுகளுக்கு
வரமும் திறமுமாய் வாழ்க்கை கிடைத்தது
பதினாறில் காதலி
அதை விட வேறு போதையில்லை
பதினாறில் படி
அதைவிட வேறு பாதையில்லை
நான்
அப் போதையில் மிதந்தேன்
பல நூறு குமரிகளின் விழிகளில்
கவிதைக்கு கரு தேடினேன்
மிதி வண்டி கூட இல்லாத
எங்கள் பருவத்தில்
இந்திரலோகம் வரை போய்வந்தோம்
அந்த பதினாறுக்குரிய
அத்தனை குறும்புகளோடும்
என்னை படைத்தவனுக்கு நன்றி
கஞ்சா கெரோயின் வார்த்தைகள்
எப்போதுமே
செவிகளில் விழுந்ததில்லை
றீற்றா மேரி சுமதி மல்லிகா சுகந்தி
இப்படித்தான் ஏதும் செவிகளில்
நண்பர்கள் தட்டும்
படலையின் ஓசைதான்
எங்கள் ரிங்ரோன்கள்
காதலுணர்வுக்கும்
கவிதைக்கும்
அப்போது இட்ட அத்திபாரம்
இப்போதும் பலம்தான்
ஆயிரம் மலர்களை
ஆகாவென ரசிக்க
இந்த விழிகள் இப்போதும் தயார்
கன்னத்தில் சில நரைகள்
கதவுகளை முதுமைக்கு
திறந்த வைத்தாலும்
எண்ணமெல்லாம்
இன்னமும்
மின்சாரம் இல்லாத தெருவில்
மின்மினிகள் பூத்துக்கிடக்க
திருவிழாவொன்றில்
இதயத்தை உருவியெடுத்து
ஓடிப்போய்விட்டவளை
அருகில் இருத்திப் பேசும்
எங்கள் பருவத்தை கேள்மின்
இளவல்களே
ஆனையிறவுக்கு மேல்
ஆமிக்காரர் அடிக்கும்
பரா ஒளிக்குப் பிறகு
சிலவேளை
சண்டைச்சத்தங்கள் கேட்கும்
அங்கிருந்த ஆட்லறிகள் முழங்கும்
என் நண்பர்கள் பலரும்
பங்கருக்குள் படித்தவர்கள்தான்
குப்பிவிளக்கு
கொஞ்சம் மண்ணெண்ணைய்க்கு
எத்தனை கடை ஏறியிறங்குவார்
இன்று எல்லோரும்
வைத்தியர்
எக்கவுண்டன்ற் பொறியிலாளர்
மற்றும்படி
நான் ஒரு ஓட்டைகள் கீறல்கள் விழுந்த
ஒரு மரம்போல
இருந்தும் கிளிகள் கிளைகளில்
மலர்கள் பனியினில்
கிளிநொச்சியான் ஒவ்வொருவனின்
பால்யப் பருவங்களை
பாடமாகப் படியுங்கள் இளவல்களே
எதற்கந்த கெரொயின்
பள்ளி ஆடையுடன்
பதினட்டாம் போர்
கொக்காவில் காட்டுக்குள்
பாலைப்பழம் சாப்பிட்டுவிட்டு
வருகின்ற வழியில்
கனகாம்பிகை குளத்தில்
குத்திக்கரணம் அடித்து
கும்மாளம் அடித்துவிட்டு
வீடு வரும் இன்பத்தை
கஞ்சா வேறு கறுமாந்திரங்கள் தருமா
அருந்திய
கள் வெறியிலும்
முழங்கு சங்கேயென
புலம்பிய கிழவர்களால்
பூரித்திருந்தது தெரு
ஒரு காலம்
அந்த நிலத்தில்
ஆவலோடு நட்டவைகளின்
நாரி சவளக்கூடாது
வீரியம் வீழக்கூடாது
கட்டழகியின் பின்னே
கண்டாவளை போ
காரியமில்லை
கசிப்பு கெரோயின் கஞ்சா
எட்டியும் பார்க்காதீர் இளவல்களே
பருவத்திலேயே
பட்டமரமாகாதீர்
அனுபவிக்க நிறையவுண்டு
அழகிய கிளிநொச்சி
உங்களுக்காய் காத்திருக்கிறது
படிக்கிறவரைபடி
காதலி கவிதை எழுது
கனவை கலங்கலின்றி காண்!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...